இந்து, இஸ்லாம், கிறித்துவம் உள்ளிட்ட பல மதத்தவரும் பேய், பிசாசு, ஆவி போன்றனவற்றை நம்புகிறார்கள். அவற்றை நினைத்து அஞ்சுகிறார்கள்.
இந்து மதத்தில் பேய்களின் எண்ணிக்கை அதிகம். அவற்றில் ஜாதிமதப் பாகுபாடும் உண்டு. பூசாரிகளைக் கேட்டால் கதை கதையாகச் சொல்லுவார்கள்.
கிறித்துவ மதத்தின் ‘புனித’ நூலாகக் கருதப்படும் பைபிளிலும், இசுலாம் மதத்தின் ‘புனித’ நூலாகக் கருதப்படும் குர்-ஆனிலும் பேய் பிசாசுகள் பற்றிய கதைகள் உள்ளன.
இன்றும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில், கிறித்துவ மத போதகர்களால், ‘சரீர சுகமளிக்கும்’ கூட்டங்களில் பேய் விரட்டும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. கத்தோலிக்க மதத் தலைவர் ‘போப்’, பேய் விரட்டலுக்கான நெறிமுறைகளை அறிவித்திருக்கிறார். ஏர்வாடி என்னும் ஊரிலுள்ள முஸ்லீம் தர்கா பேய் விரட்டலுக்குப் புகழ் பெற்ற இடமாகும்.
தற்கொலை செய்துகொண்டவர்கள், கொல்லப்பட்டவர்கள், விபத்தில் இறந்தவர்கள் ஆகியோரே பேயாகவும் ஆவியாகவும் உலவுவதாக நம்பப்படுகிறது. ஆனால், ஆடு, மாடு கோழி போன்றவை ஆவியாய்ப் பேயாய் அலைவதில்லையா? ஆவி&பேய் நம்பிக்கையாளர்கள் ஏனோ இவற்றைக் கண்டுகொள்வதில்லை.
இந்தப் பேய், பிசாசு ஆவிகளெல்லாம் இருப்பது உண்மையா?
இயற்பியல், வேதியியல், உயிரியல் முதலான காரணங்களாலும் உளவியல் காரணங்களாலும் பேய் பிடித்தது போன்ற மயக்க உணர்ச்சிகளுக்கு மக்கள், குறிப்பாகப் பெண்கள் ஆளாகிறார்கள் என்கிறது அறிவியல்.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த வால்டர்ஹெஸ், மிச்சிகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜே. டெல்காடோ ஆகியோர், மின் துடிப்புகள்[Electric Impulses] மூலம், மூளையின் பல்வேறு கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தூண்டிவிட்டு, சினம், அச்சம், பசி, வருத்தம், காதல், காமம், ஆர்வம், விருப்பு, வெறுப்பு போன்றவற்றை நடைமுறை வாழ்வில் உணர்வதுபோல் செயற்கையாகத் தூண்டும் முயற்சியில் வெற்றி பெற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளார்கள்.
மனித மனமானது கருத்தேற்றங்களினால்[suggetions] பாதிக்கப்படக்கூடும் என்பது உளவியல் உண்மையாகும்.
மதக் கருத்துகளை ஊட்டுதலும், மூளைச் சலவை[Brain Washing] செய்தலும் மெதுவான, தொடர்ச்சியான மன வசிய முறைகளாகும். பேய், பிசாசு, ஆவி தொடர்பான கருத்துகள் / எண்ணங்கள் இம்முறையில் சிறு வயதிலிருந்தே மனதிற்குள் திணிக்கப்படுகின்றன.
பேய் பிடித்தவரைப் போல் பிதற்றுதல், அயல் மொழியில் பேசுதல், சாமி ஆடுதல் போன்றவை எல்லாம் மேற்சொன்ன கருத்தேற்றங்களின் விளைவே ஆகும்.
பேய் பிடித்து அயல்மொழியில் பேசுபவர் குளோசோலேலியா[Clossolalia] என்னும் மன நோயால் பாதிக்கப்பட்டவர் ஆவார். இவர் பேசுவது உண்மையில் அயல்மொழி அல்ல என்பதை அந்தக் குறிப்பிட்ட மொழி தெரிந்தவரை அருகில் வைத்து நிரூபிக்கலாம்.
படிப்பறிவில்லாத கிராம மக்களே பெரும்பாலும் பேய், பிசாசு, ஆவி ஆகியவற்றின் தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள்.
படிப்பறிவற்ற கிராமப்புறப் பெண்களைப் ‘பேய் பிடிப்பதற்கு’க் குறிப்பிடத்தக்க சில காரணங்கள் உள்ளன. பருவம் அடையும் பெண்ணுக்குத் தன் உடலிலும் உணர்விலும் ஏற்படும் மாற்றங்கள் பற்றிச் சரியான புரிதல் இருப்பதில்லை. பாலியல் உறவு, குழந்தை பிறப்பு ஆகியவை பற்றியெல்லாம் போதுமான அறிவும் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், கணவனால் அதீத காம இச்சையுடன் புணரப்படுவதாலோ, உடலுறவில் போதிய திருப்தியைப் பெற இயலாததாலோ பேய் பிடித்தல் போன்ற மன நோய்க்கு அவள் ஆளாகிறாள்.
மனநோய் மருத்துவரை அணுகிக் குணப்படுத்தக்கூடிய இம்மாதிரி கோளாறுகளைப் பேய் பிடித்ததாகச் சொல்லி ஏமாறுவதும், ஏமாற்றப்படுவதும் இம்மண்ணில் இடம்பெறாமல் தடுப்பது நம் அனைவருடைய கடமையும் ஆகும்.