திங்கள், 1 ஜூன், 2020

கீழ்க்காண்பவர்களில் முதல்தர முட்டாள் யார்?!

கொலம்பஸ், ராணி எலிசபெத் 1, நெப்போலியன், ஹிட்லர், முசோலினி, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி  Neils Bohr, I.S.R.O விஞ்ஞானிகள் குழுத் தலைவர் Dr.k.ராதாகிருஷ்ணன் என்னும் ஏழு பெரிய ‘உலகப் புகழ்’ பிரபலங்கள் நம்மால் அறியப்பட்டவர்கள்.

பிரபலங்கள் என்பதற்காக, இவர்களை ‘மூடர்கள்’ என்றழைப்பதில் எள்முனையளவும் எனக்குத் தயக்கமில்லை [அது வேறு; இது வேறு]. ஒருவர், எத்தகைய பெரிய மனிதராயினும், மூடநம்பிக்கை கொண்டவராயின் அவரும் மூடரே ஆவார்.

இவர்களில் சிறந்த மூடர் யார் என்று முடிவெடுப்பதில்தான் எனக்குத் தீராத குழப்பம்; சிக்கல்.

பிரபலங்களைப் பிரபலங்கள் ‘ஆக்கிய’ பிரசித்தி பெற்ற மூடநம்பிக்கைகளையும் இங்கு பட்டியலிடுகிறேன். தீவிரமாய்ப் பரிசீலித்து முடிவெடுப்பது உங்கள் விருப்பம் சார்ந்தது!

*கொலம்பஸ்:

சக மாலுமிகளுடன் கொலம்பஸ் பயணித்துக்கொண்டிருந்த கப்பலைப் பயங்கரப் புயல் ஒன்று தாக்கியதாம். புயலின் வேகத்தை மட்டுப்படுத்துவதற்கு, ‘சீட்டுக்கட்டு'[playing cards] ஒன்றைக் கடலுக்குள் வீசினாராம் கொலம்பஸ். {During the voyage, a particularly fierce storm hit them. Columbus threw a pack of playing cards into the sea which was according to custom would calm the storm [Wikipedia]}

இவர், எத்தனை பெரிய துணிச்சல்காரர்! சாதனையாளர்!! இவரின் இச்செயலை முட்டாள்தனமானது என்று கண்டிக்கலாம்தானே?


*ராணி எலிசபெத் 1:
John Dee என்னும் மாயாஜால நிபுணர், அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், போர்த் திட்டங்களை வகுப்பதற்கும் ராணிக்கு உதவி புரிந்தாராம். அவர் பயன்படுத்திய மாயாஜாலக்கல் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாம் [Queen Elizabeth I was a superstitious queen who had a magician in her payroll named John Dee. The magician helped her in making decisions with regards to state affairs and war plans The magic stone that Dee used can be viewed at the British Museum. -[Wikipedia]

ராணி என்ன, இட்லி சுட்டு விற்கிற நம்ம ஊர் ராக்காயிக் கிழவியென்ன, மூடநம்பிக்கைப் பேய்க்கு எல்லாரும் ஒன்னுதான். அதுக்கு ‘அந்தஸ்து’ பார்க்கத் தெரியாதே!

*நெப்போலியன்:

‘தோல்வி என்னும் சொல்லுக்கு என் அகராதியில் இடமில்லை’ என்று கர்ஜித்த மாவீரனான இவனிடம், மூடநம்பிக்கைகள் அட்டை போல் ஒட்டிக்கொண்டிருந்தனவாம்.

கனவுகள், நடக்கவிருக்கும் சம்பவங்களின் முன்னெச்சரிக்கை என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தானாம். குதிரை கால் இடறி விழுந்தாலோ, கறுப்புப் பூனை குறுக்கிட்டாலோ இவனுக்கு அடிவயிறு கலங்குமாம். [Before the battle of Waterloo, he dreamed of a black cat and he believed that was a bad omen and he eventually lost the battle.]

இவன், நாம் அறிந்த நெப்போலியனா, இல்லை, நாம் அறியாத சுண்டெலியனா?!


*ஹிட்லர்:
இவன், ஜோதிடர்களையும் குறி சொல்பவர்களையும்[fortune tellers] ஆலோசித்த பின்னரே தன் போர்த்திட்டங்களை வகுப்பான். இவன் பயன்படுத்திய ‘ஸ்வஸ்திகா’வை, அபூர்வ சக்தி[magical powers] படைத்ததாக நம்பினான்.



இந்த ஹிட்லர் என்ன பட்லரா?!

*முசோலினி:

கொடுங்கோலனான இவனும், மூடநம்பிக்கைகளின் பிடியில் சிக்கி மூத்திரம் பெய்தவன்தான். உடன் பயணித்த ஒருவனின் குரூரமான பார்வைக்கு[evil eye]ப் பயந்து, வகுத்த திட்டத்தையே மாற்றி அமைத்திருக்கிறான்.

*Neils Bohr:
பௌதிக இயல் விஞ்ஞானியான இவரைப் பற்றிய ஒரு நிகழ்வைப்[கதையாகவும் இருக்கலாமாம்] பதிவு செய்திருக்கிறது ஓர் இணையம். [http://www.laughbreak.com/stories/horseshoe_logic.html]
அமெரிக்க விஞ்ஞானி ஒருவர், இவரைச் சந்தித்த போது, Neils Bohr இன் அறையில், ஒரு குதிரை லாடம் சுவரில் ஆணியடிக்கப்பட்டிருப்பதைக் கண்டார். [நமக்கு நரிக் கொம்பு! அயல்நாட்டவருக்குக் குதிரை லாடம்!!]

”குதிரை லாடம், அதிர்ஷ்டமானது என்பதை நீங்கள் நம்பமாட்டீர்கள்தானே?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார் அமெரிக்க விஞ்ஞானி.

“நண்பரே, இம்மாதிரி முட்டாள்தனங்களை நான் கிஞ்சித்தும் நம்புவதில்லை. இருந்தாலும், ‘நீங்க நம்புறீங்களோ இல்லையோ, குதிரை லாடம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்னு மத்தவங்க சொல்றாங்க. இதை எப்படி மறுக்கிறதுன்னு எனக்குத் தெரியல” என்றாராம் நோபல் பரிசு விஞ்ஞானி!

ரொம்பவே விவரமானவர் போல!


*Dr.k.ராதாகிருஷ்ணன் {I.S.R.O.[Indian Space Research Organisation] விஞ்ஞானிகளின் குழுத் தலைவர்}

இவர் மற்றும் குழுவினரின் செயல்பாடு குறித்து ‘வினவு’ தளம் எழுப்பிய கேள்வியை முதலில் படியுங்கள்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ விட்ட ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் தோல்வி அடைந்ததை அறிந்திருப்பீர்கள். இதனால் அந்நிறுவனத்தின் அறிவியலாளர்கள் சோர்ந்து போயிருக்க கூடும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தத் தோல்வி ஏன் என்று அறிவியல் பூர்வமாக ஆய்ந்து அதைத் சரி செய்வதுதானே நியாயமானது? இது இந்தியாவிற்கு மட்டுமல்ல எந்த நாட்டு ராக்கெட்டிற்கும் பொருந்தும்.

நேற்று 12.7.2010 ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி சி-15 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அதிலுள்ள செயற்கைக் கோள்கள் எல்லாம் பழுதின்றி சுற்றுவட்டப் பாதையில் நிறுத்தப்பட்டிருக்கின்றது. இதற்கான 51 மணிநேர கவுண்ட்டவுன் சனிக்கிழமையன்று துவங்கியது. இத்தகைய முக்கியமான தருணத்தில் ராக்கெட் ஏவும் வேலைகளோடு நமது விஞ்ஞானிகள் வேறு ஒரு ‘முக்கியமான’ விவகாரத்திலும் ஈடுபட்டிருக்கின்றனர்.

அதாவது ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட வேண்டுமென்பதற்காக திருப்பதி கோவிலுக்குச் சென்று வழிபட்டிருக்கின்றனர். இஸ்ரோவின் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் உட்பட பல விஞ்ஞானிகள் கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் ஏழுமலையானைத் தரிசித்திருக்கின்றனர். ராக்கெட்டின் மாதிரி வடிவம் ஏழுமலையானின் பாதத்தில் வைத்து சிறப்பு வழிபாடும் நடத்தியிருக்கின்றனர்.

இதிலிருந்து என்னவெல்லாம் நடந்திருக்குமென்று யூகிக்க முடிகிறது. ராக்கெட் முன்னாடி தேங்காய் உடைத்து, சூடம் கொளுத்தி, கருப்பு கயிறு கட்டி, திருஷ்டி பொம்மையைப் பொருத்தி எல்லாம் செய்திருப்பார்கள் போலும். கவுண்ட்டவுன் நேரத்தில் திருப்பதி சென்று காஸ்ட்லி ஆண்டவனை வழிபட்டு ராக்கெட் வெற்றிக்கு இறைஞ்சுகிறார்கள் என்றால் இந்தியாவில் அறிவியல் உருப்படுமா?      -, July 13, 2010

வினவின் இந்தக் கேள்விக்கு  நாம் ஒரு எதிர்க் கேள்வியை முன் வைக்கிறோம்.

கோயில் கோயிலாக அலைவதைவிட, I.S.R.O. ஆராய்ச்சி நிலையத்திலேயே ஒரு கோயிலைக் கட்டிவிடலாமே? ஹி...ஹி...ஹி!