செவ்வாய், 2 ஜூன், 2020

உலகம் பலவிதம்! கடவுள் சில ரகம்!!

பிரபஞ்ச வெளியில் உள்ள நட்சத்திரங்கள் பல. கோள்கள் கணிசமானவை. உலகில் உள்ள உயிர்கள் பலவகை. வாழும் மனிதர்களும் பல வகையினர். அனைத்திற்கும் மூலகாரணமான அணுக்களோ மிக மிக மிக மிகப் பல. ஒன்றே ஒன்று என்று சொல்வதற்குக் கடவுளைத் தவிர எதுவுமே இல்லை[ஒருவரே என்பதற்கும் போதிய ஆதாரம் இல்லை].

கடவுள் ஒருவரே என்று சொல்வதை நம் மக்கள் மனப்பூர்வமாக ஏற்கவில்லை என்பதற்கு அவர்கள் வகை வகையாய்க் கடவுள்களைக் கற்பித்து வணங்குவதே சான்றாகும். 

“நதிகள் பல. அவை அனைத்தும் சங்கமம் ஆவது கடலில்தான். இது ஓர் உதாரணம். இப்படிப் பல உதாரணங்கள் தந்து மாய்ந்து மாய்ந்து விளக்கவுரைகள் தந்தார்கள்; தந்துகொண்டிருக்கிறார்கள் ஆன்மிகவாதிகள். மக்கள் இவர்களை ஒரு பொருட்டாக மதித்ததில்லை; மதிப்பதும் இல்லை. அவர்கள் பாட்டுக்கு மனம் போன போக்கில் கடவுள்களை உற்பத்தி செய்துவிட்டார்கள்.

அவர்கள் கொண்டாடும் கடவுள்களில் கணிசமானவர்கள் இங்கு ரகம் பிரித்துப் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
மதம் சார்ந்த கடவுள்கள்:
ஈஸ்வரன், அல்லா[Allah எனப்படும் அல்லா தனிப்பட்டதொரு மதத்துக்கு உரியவரல்ல; பொதுவானவர் என்பார்கள் இசுலாமியர்கள். ஆனால், அவர் மட்டுமே கடவுள் என்று அவர்கள் சொல்லத் தவறுவதில்லை] திருமால், கர்த்தர் முதலானோர்.

குலசாமிகள்:
முனியாண்டி, முனியப்பசாமி, கருப்புசாமி, ஐயனார், மெய்யனார் இன்ன பிற..

ஆண் இனம்:
முனியாண்டி முதலானவர்களுடன் பிள்ளையார், முருகன், சிவன், விஷ்ணு என்றிவர்களையும் சேர்த்து ஒரு பட்டியல் போடலாம்.

பெண் இனம்:
ஈஸ்வரி, பரமேஸ்வரி, பத்மாவதி, பச்சைநாயகி, மாரியம்மா, காளியம்மா, முப்பிடாரி அம்மன், செல்லி அம்மன், இசக்கி அம்மன், பச்சையம்மன், பேச்சியம்மன் என்றிப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

பிரமச்சாரிகள்:
ஐயப்பன், மெய்யப்பன், ஆஞ்சநேயன்னு வாலிப வயதிலும் பிரமச்சரியம் காப்பவர்கள் இவர்கள்.

ரெட்டைப் பெண்டாட்டிக்காரர்கள்:
மலையப்பசாமி, சுப்பிரமணியசாமி, பிள்ளையார் சாமி என்று இவர்கள் இரண்டு பெண்டாட்டி கட்டிய  அதிர்ஷ்டசாலிகளும்கூட.

சல்லாபிகள்:
பக்தியைச் சோதிக்கிறேன் பேர்வழி என்று பக்தனின் உத்தம மனைவியைத் தன் பஞ்சணைக்கு அழைத்த[இயற்பகை நாயனார் கதை] பரமேசுவரன். கள்ளப்புணர்ச்சியில் ஈடுபட்ட பிரம்மா, மகேசுவரன், மகா விஷ்ணு[மூவரும் அத்திரி முனிவனின் மனைவி அனுசூயாவைக் கள்ளத்தனமாய்ப் புணர்ந்தவர்கள்], தேவேந்திரன்[அகலிகை கதை] போன்றோர்.

நடப்பு நிலை இதுவாக இருக்க, ''கடவுள் ஒருவரே. அனைத்தையும் படைத்து அருள்பாலிப்பவர் அவரே. அவர் ஆணுமல்ல, பெண்ணுமல்ல; தற்சார்பற்றவர்; பற்றற்றவர்'' என்று கடவுளை அடையாளப்படுத்தியவர்கள் அறிவிலிகளா, நம் அனுதாபத்திற்குரியவர்களா?
========================================================================