புதன், 3 ஜூன், 2020

'கடவுள்...சில கேள்விகள்’! -கேட்டவர் ராபர்ட் ஜி.இங்கர்சால்!!

*கடவுள் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தாரென்றால், படைப்பதற்கு முன்பு, கடவுள் மட்டுமே இருந்து, வேறு எதுவுமில்லாத ‘வெறுமை நிலை’ இருந்திருத்தல் வேண்டும். அந்த ஒன்றுமில்லாத இடத்தில் இருந்தபடி என்ன செய்துகொண்டிருந்தார்? சுத்தச் சோம்பேறியாகக் காலம் கழித்தாரா? அது எவ்வளவு நெடிய காலம்?

*படைத்தலை நிகழ்த்துவதற்கு முன்பு அவர் மட்டுமே இருந்திருக்கிறார். வேறு எதுவும் இல்லை என்பதால் பொருள்களைப் படைப்பதற்கான மூலபொருள்களைத் தன்னிடமிருந்தே அவர் பெற்றிருத்தல் வேண்டும். மூலப்பொருள்களைத் தன்னகத்தே கொண்டிருந்ததால் அவரும் பொருள்தன்மை[பொருளாக இருந்தவர்] கொண்டவர் என்று சொல்லலாம்தானே?

*நமக்குள் ‘சக்தி’நிரம்பியிருக்கிறது. அந்தச் சக்தியைக் கொண்டுதான் சிந்திக்கிறோம்; நடக்கிறோம்; மற்ற செயல்களைச் செய்கிறோம். அந்தச் சக்தியைப் பெற்றிட உணவு உண்கிறோம்.  கடவுள் சிந்திப்பதாயிருந்தால், அவருக்கும் சக்தி தேவை. அந்தச் சக்தியைப் பெற்றிட உணவு உண்ணுதல் அவசியம். இப்படி எதையும் செய்யாமல், எவ்விதச் சக்தியையும் பெற்றிடாமல் சிந்திக்கிறார்; படைக்கிறார் என்பதையெல்லாம் எவ்வாறு ஏற்பது?

*பொருளில்லாமல் சக்தி என்ற ஒன்று தனித்திருத்தல் இயலாது. பொருளும் சக்தியைச் சார்ந்தே இருக்க முடியும். எனவே, இவற்றிற்குப் புறம்பாக மேலான சக்தி என்று ஒன்று[கடவுள்] இருப்பதாகச் சொல்வதை ஏற்க இயலாது.

கடவுள் குறித்த மேற்கண்ட கருத்துகளைச் சொன்னவர் ஒரு சாமானியர்[‘பசி’பரமசிவம் போல] அல்லர். உலகப் புகழ் பெற்ற தத்துவ முன்னோடி ராபர்ட் கிரீன் இங்கர்சால் ஆவார்.

இவரின் பள்ளிப் படிப்பு சொற்பம். அதீத நினைவாற்றல் வாய்க்கப் பெற்றவர். சுயமாக நூல்களைக் கற்று அறிவை வளர்த்துக்கொண்டவர். சொற்பொழிவு நிகழ்த்துவதிலும், கதைகள் சொல்வதிலும், மொழியைச் சிறப்பாகக் கையாள்வதிலும் வல்லவர்.

இவையெல்லாம் நீங்கள் அறிந்த செய்திகளாகவே இருத்தல்கூடும்.

நன்றி.
========================================================================
ஆதார நூல்: ‘கடவுள்’, ராபர்ட் ஜி இங்கர்சால்[மொழியாக்கம்: எஸ்.லட்சுமிரதன்பாரதி], பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு, சென்னை-600 007.