புதன், 29 ஜூலை, 2020

தடைப்பட்ட புணர்ச்சியும் தவிக்கும் பெண் மனமும்!!

மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன், ‘பச்சை வயல் மனசு’ என்னும் தம் நாவலில், ‘வார்த்தைகளுக்கு மிஞ்சி, சொல்லின் பொருளையும் மீறி ஓர் உணர்வை அல்லது பிரமிப்பை ஏற்படுத்துவது கவிதை’ என்கிறார்.

இதற்கு எடுத்துக்காட்டாக, குறுந்தொகையிலிருந்து ஒரு பாடலை எடுத்தாண்டிருக்கிறார்.

‘கௌவை யஞ்சிற் காமம் எய்க்கும்
எள்ளற விடினே உள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முரிந்துநிலம் படாஅ  [முரிதல்-ஒடிதல்]
நாருடை ஒசியல் அற்றே
கண்டிசின் தோழியவர் உண்டஎன் நலனே’ [ஆலந்தூர் கிழார்]

என்பது அந்தப் பாடல்.

‘தோழிபிறர் கூறும் பழிச்சொற்களுக்கு அஞ்சினால்காமம் குறையும். பிறருடைய பழிச்சொற்கள் இல்லாமல் இருக்க வேண்டுமானால் காமத்தை விட்டுவிடவேண்டும்அவ்வாறு காமத்தை விட்டுவிட்டால்என்னிடம் இருப்பது நாணம் மட்டுமே ஆகும்தலைவர் நுகர்ந்த எனது பெண்மை நலம்பெரியகளிறு உண்ணும் பொருட்டு வளைக்கவளைந்து நிலத்தில் விழாமல் நாருடன் ஒட்டிக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கும் ஒடிந்த கிளையைப் போன்றது.    இதனை நீ  காண்பாயாக!’

என்பது பாடலுக்கான பொருள்.

இந்தப் பாடலில், முதலிரண்டு வரிகளைத் தவிர்த்த பாலகுமாரன், ஏனைய வரிகளுக்குப் பின்வருமாறு விளக்கம் தருகிறார்.

‘யாரோ ஒரு தலைவன். ஒரு தலைவியைக் காதலிச்சு ஊருக்கு அப்பால் தோப்புக்குத் தனியாகக் கூட்டிண்டு போய் விளையாடுறான். முழுக்க இல்ல, மேலோட்டமா. சாரி, இப்படிச் சொல்லுறதைத் தப்பா நினைக்க வேண்டாம்[ஓர் ஆண் இரண்டு பெண்களுடன் உரையாடும் நிகழ்வு இது]. முழுக்க முடிக்க வாய்ப்பில்லாம யாரோ வர்ற சத்தம் கேட்டு நகர்ந்துடுறான்.  

அந்தத் தலைவி சொல்கிறாள். தோழி, இப்ப என் நிலைமை எப்படி இருக்கு தெரியுமா? உண்ணுதற் பொருட்டு ஒரு பெரிய யானை மரக்கிளையை ஒடித்துவிட்டுப் போக, அந்த மரக்கிளை யானையால் உண்ணப்படாமலும், அதே சமயம் பழைய நிலையில் இல்லாமலும், பாதி ஒடிந்து மரப்பட்டையில் தொங்கிகொண்டிருப்பது போல இருக்கிறது. காமமும் முழுதுமாய்ப் பெறப்படவில்லை. பழைய கற்பு நிலையிலும் இல்லை. பட்டை உரிந்து ஊசலாடுகிற மரக்கிளை மாதிரி மெல்ல மெல்லப் பட்டுப்போகப் போகிறேன் என்கிறாள்.’

'அவர் உண்ட நலன்’ என்பது பாடல் வரி. ‘அவர் துய்த்த[அனுபவித்த] என் [பெண்மை]நலன்’ என்பது அதற்கான பொருள். அவன் அவளுடன் புணர்ச்சி செய்துள்ளான் என்பதை உறுதிப்படுத்தும் இடம் இது.

ஏதோ காரணத்தால் அவன் அவளைப் பிரிகிறான். மீண்டுவந்து அவளின் பெண்மை நலம் நுகர்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இத்தகையதொரு சூழலில், தனித்திருப்பதால் உண்டாகும் அவளின் மன வேதனையைத்தான் இந்தப் பாடல் மூலம் காட்சிப்படுத்துகிறார் ஆலந்தூர் கிழார்.

பாலகுமாரனின் விளக்கம் பெருமளவில் மாறுபட்ட ஒன்றாக அமைந்துள்ளது. தலைவியுடன் உடலுறவு கொள்ளும் தலைவனின் முயற்சி முழுமை பெறவில்லை என்பதாகவும், அதனால், உண்டான வருத்தத்தைத் தன் தோழியுடன் தலைவி பகிர்ந்துகொள்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

உரை புதிது என்பதோடு, சுவையானதும்தான். பிறர் குறுக்கீட்டால், தலைவி பெறவிருந்த உடலுறவு சுகம் முழுமை பெறாமல் தடைப்பட்டதால் உண்டாகும் தவிப்பு விவரிப்புக்கு அப்பாற்பட்டது என்பது உண்மையே.

எது எப்படியோ, இவ்வுணர்வைக் கட்டுப்படுத்துவதில் மிக வல்லவர்கள் பெண்கள். புணர்ச்சி இன்பம் தொடர்பான பெண்களின் தவிப்பு, பழம் புலவர்களாலும், இக்காலக் கவிஞர்களாலும் மிகைப்படுத்தப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது!
======================================================================