“நம்ம மிதுனுக்குப் புதுசா ஜாதகம் கொண்டுவந்திருக்கேன். ஜோடிப் பொருத்தம் அபாரம்” என்று சொன்ன தரகர் அய்யாசாமி, மிதுனின் புகைப்படத்துடன் பெண்ணின் படத்தையும் ஜோடி சேர்த்து அவன் தாயாரிடம் நீட்டினார்.
முகத்தில் பரவசம் பரவ, “என்ன படிச்சிருக்கா?” என்றார் அவர்.
“நம்ம பையனுக்குச் சமமான படிப்புத்தான். எம்.ஏ.,எம்.ஃபில்.”
“வசதி எப்படி?” -மிதுனின் தந்தை சேனாபதி கேட்டார்.
“பொண்ணோட அப்பா பெரிய பஸ் கம்பெனி அதிபர். நாலஞ்சி பெட்ரோல் பங்க் இருக்கு. பத்துப்பதினைஞ்சி டேங்கர் லாரி ஓடுது. பொக்லின் அது இதுன்னு நம்ம அந்தஸ்துக்குச் சமமானவங்கதான்.”
“பொண்ணோட பிறந்தவங்க எத்தனை பேர்?”
“ஓரு பொண்ணுதாங்க. ரொம்பச் செல்லமா வளர்த்திருக்காங்க.”
“இந்த இடம் நமக்குத் தோதுப்படாது தரகரே.”
“ஏனுங்க?”
“மிதுன் எங்களுக்கு ஒரே பையன். ரொம்பச் செல்லம். பையன் பொண்ணு ரெண்டு பேருக்குமே விட்டுக்கொடுத்துப் போற மனப் பக்குவம் இருக்காது. நானா நீயான்னு போட்டி போடுவாங்க. குடும்பத்தில் நிம்மதி இருக்காது. ஒன்னுக்கு மேற்பட்ட பொண்ணுக உள்ள இடமா பாருங்க” என்றார் சேனாபதி.
=====================================================================