விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சிலைகளைப் பொது இடங்களில் வைத்து வழிபடுதல், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைத்தல்[விசர்ஜனம்!!!] போன்ற நிகழ்வுகளுக்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட வந்த இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத், தடையை நீக்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்[தினத்தந்தி, 14.08.2020].
இந்தச் சிலைக் கரைத்தல் தொடர்பான புராணக் கதையொன்றைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் வாசித்திருக்கிறேன். கதை மறந்துபோனதால் நேற்றுக் கூகுளில் நீண்ட நேரம் தேடியும் பலன் கிட்டவில்லை. ஆனாலும், இது தொடர்பான வேறொரு செய்தி என் மனதை ஈர்த்தது.
‘ஆடிப்பெருக்கில் வெள்ளம் வரும்போது அது ஆற்றில் உள்ள மணல்களை கரைத்துக் கொண்டு போய்விடும். அதனால் வெள்ள நீா் அடிநிலத்தில் தங்காமல் வீணாகக் கடலில் கலக்கும். வெள்ளம் செல்லும் பாதையில் களிமண் படிந்திருந்தால், அது அந்த மண்ணால் தடுக்கப்பட்டு பூமியில் இறங்கும்’[தினமணி, தினமலர், தினகரன், தினத்தந்தி, tamil.oneindia, tamil.boldsky, என்று பல இணைய ஊடகங்கள் இக்கருத்தைப் பதிவு செய்துள்ளன. ‘விநாயகரை நீரில் கரைக்கும் போது உயிர்ப்பில் இருந்து விடுபடுகிறான். பஞ்சபூதமான நீரில் கரைந்து மீண்டும் மண்ணாகவே மாறுகிறான். மாற்றம் இல்லாத மாற்றம். உறவைப் பேணத்தான் வேண்டும். ஆனால் அதுவே சாஸ்வதம் ஆகாது. அது மாயை’ என்பன போன்ற புரியாத தத்துவங்களும் இடம்பெற்றுள்ளன] என்பதே அது.
‘இந்த அறிவியல் அடிப்படையிலான அறிவு நம் முன்னோர்க்கு இருந்ததால்தான் விநாயகர் சதுார்த்தி அன்று சிலைகளைக் களிமண்ணால் செய்து ஆற்றில் கரைக்கச் செய்தார்கள்.
ஈரக்களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு சென்றுவிடும். சற்றே காய்ந்த களிமண் அதே இடத்தில் படிந்துவிடும். எனவே, சிலைகளைச் சில நாட்கள் காய வைத்த பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆறுகளில் கரைத்தார்கள்’ என்பன போன்ற விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.
இவ்வகையிலான, இந்தச் சிலைக்கரைப்பின் அரிய பயனை அறிந்திருந்ததால்தான் அர்ஜுன் சம்பத், சதுர்த்தி விழாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும்படி அரசை வற்புறுத்தியிருக்ககூடும் என்பது என் நம்பிக்கை.
இது குறித்துத் தொடர்ந்து சிந்தித்தபோது, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதால் தமிழ்நாட்டு ஆறுகளில் அதிக அளவில் களிமண் சேர்ந்திட வாய்ப்பில்லை என்னும் உண்மை என்னுள் உறைத்தது.
பிள்ளையாருக்கு என்றில்லாமல், மற்ற இந்துக் கடவுள்களுக்கும் சதுர்த்தி[பிறந்த நாள்] விழாக்கள் நடத்தலாம் என்னும் எண்ணமும் உள்மூளையில் பளிச்சிட்டது.
பரமசிவன், பார்வதி, பலராமன், மகாவிஷ்ணு, மகாலட்சுமி, மாகாளி, மாரியாயி, செல்லியம்மன், வள்ளியம்மன், சரசுவதி, ஆஞ்சநேயன், ஐயப்பன், முனியப்பன், கருப்பண்ணசாமி, காத்தவராயன், கடகடப்பான் சாமி, குடுகுடுப்பான் சாமி என்று பெரும் எண்ணிக்கையில் நமக்கான சாமிகள் இருப்பதால், வாரம் ஒரு சாமிக்குச் சதுர்த்தி விழாக் கொண்டாடி, சிலைகளை ஆறுகளில் கரைத்துக்கொண்டே இருந்தால் அனைத்து ஆறுகளிலும் களிமண் மேலும் மேலும் படிந்துகொண்டே இருக்கும்[ஆறுகளின் ஆழம் குறைந்து, வெள்ளம் கரையுடைத்துக்கொண்டு வெளியேறும் என்று அஞ்சத் தேவையில்லை. ஆறுகளின் இரு பக்கமும் உயரமான கான்கிரீட் சுவர்களை எழுப்பிவிடலாம்]. மழைக்காலங்களில், பெருக்கெடுத்துவரும் மழை நீரில் பெரும்பகுதி ஆறுகளுக்குள்ளேயே சேமிக்கப்படுமே என்ற எண்ணமும் உள்மனதில் உதித்தது.
இந்த என் எண்ணம் செயல்படுத்தப்பட்டால் பெரும் பயன் விளையும் என்பது என் நம்பிக்கை. அர்ஜுன் சம்பத் போன்றவர்கள் இதனைத் தமிழக அரசிடம் ஒரு கோரிக்கையாக முன்வைப்பார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
=============================================================================
அண்மைச் செய்தி[ தினத்தந்தி தொலைக் காட்சி...பிற்பகல் 03.00 மணி]:
‘சிறு கோயில்களுக்கெல்லாம் அனுமதி. தடைகளைத் தகர்க்கும் கடவுளுக்கே[விநாயகர்... ஊர்வலம்] தடையா?’ -பா.ஜ.க. கேள்வி.
அண்மைச் செய்தி[ தினத்தந்தி தொலைக் காட்சி...பிற்பகல் 03.00 மணி]:
‘சிறு கோயில்களுக்கெல்லாம் அனுமதி. தடைகளைத் தகர்க்கும் கடவுளுக்கே[விநாயகர்... ஊர்வலம்] தடையா?’ -பா.ஜ.க. கேள்வி.