சனி, 15 ஆகஸ்ட், 2020

மசூதிகளில்[பள்ளிவாசல்] தமிழ் புறக்கணிக்கப்படுகிறதா?

ta.quora.com தளம், பல்துறை சார்ந்த கேள்விகளை முன்வைத்து அவற்றிற்கு அளிக்கப்படும் பலதரப்பட்ட பதில்களைத் தொகுத்து வழங்கும் சிறப்பானதொரு பணியைத் தொடர்ந்து செய்கிறது.

அதில் கேட்கப்பட்ட மேற்கண்ட கேள்விக்கான பதில்கள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.


தமிழ்நாட்டில் உள்ள மசூதிகளில் தமிழ் புறக்கணிக்கப்படவில்லை என்பது எனது கருத்து. பொதுவாக, தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஒரு புரிதல் இருக்கிறது, முஸ்லிம் என்றால் அவர்கள் உருது பேசுவார்கள் என்று. அது உண்மை அல்ல. இது பெரும்பாலும் வடதமிழகத்தில் வசிப்பவர்களின் எண்ணம்.

தமிழ்நாட்டில் தமிழ் மட்டுமே பேசும் இஸ்லாமியர்கள் தான் அதிகம். அவர்கள் மசூதிகளிலும் தமிழ் தான் பேசுகிறார்கள், வெள்ளிக்கிழமை தொழுகை உரையிலும் தமிழிலேயே உரையாற்றுகிறார்கள். தொழுகையின் போது மட்டும் அரபியில் ஓதுகிறார்கள். ஏனென்றால், தொழுகையில் ஓதப்படுவது திருக்குர்ஆனின் வசனங்கள். திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது அரபி மொழியில் எந்த ஒரு நூலையும் அதன் இயற் மொழியில் ஓதுவது / வாசிப்பது தான் சிறந்தது.

அதேசமயம் அரபி கற்ற ஆசிரியர்கள் மசூதிகளில் திருக்குர்ஆன் வசனங்களைத் தமிழாக்கம் செய்து அனைவருக்கும் கற்றுக் கொடுக்கின்றனர். திருக்குர்ஆனின் வசனங்கள் மற்றும் இறைத்தூதரின் வழிமுறைகள் அரபி மொழியில் கூறப்பட்டு இருந்தாலும் அதனைத் தமிழில் கற்கும் போது மட்டுமே நமக்கு அதன் கருத்துக்கள் தெளிவாகப் புரிகிறது.

நீங்கள் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மசூதிகளில் அறிவிப்புப் பலகைகளிலும் சுவர்களிலும் திருக்குர்ஆனின் வசனங்கள் மற்றும் இறைத்தூதரின் நல்லுபதேசங்கள் தமிழிலேயே எழுதப்பட்டிருக்கும். அவ்வகையில் தமிழ் மொழியானது மசூதிகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

எனவே தமிழ் என்றைக்குமே இஸ்லாமியர்களாலும் மசூதிகளிலும் புறக்கணிக்கப்படவில்லை; அதேபோல் தமிழ்நாடு அல்லாது பிற மாநிலங்களில்  உள்ள மசூதிகளிலும் கூட அவரவர் தாய்மொழிதான் முக்கியப் பங்கு வகிக்கிறது.

நன்றி….!


இஸ்லாம் உலகில் உள்ள அனைவருக்கும் பொதுவான ஒரு வழிமுறையாகும். இதில் எந்த நாட்டினரோ எந்த மொழியினரோ, எந்த நிறத்தவரோ ஒருவர் மற்றொருவரை விடச் சிறந்தவர் கிடையாது. ,நபிகள் நாயகம் அவர்களே இதைத் தெளிவிடுபடுத்தியுள்ளார்கள். நபிகள் நாயகம் அரபு மொழி பேசும் சமுதாயத்தில் பிறந்துள்ளதால் அரபு மொழியில் அதன் மூலச் சட்டங்கள் இருக்கின்றன. பல தேசத்து மக்கள் பின்பற்றும் ஒரு மார்க்கத்தில் சீராக இருக்க வேண்டும் என்பதற்காக [ஒரே மாதிரி] தொழுகை போன்ற விஷயத்தில் அரபு பயன்படுத்தப்பட்டுள்ளது. பல மொழி பேசும் நம் தேசத்தில் கூட வங்காள மொழியில் உள்ள தேசிய கீதமே பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக மற்ற எல்லா மொழியும் மட்டம் என்ற அர்த்தம் கிடையாது.

தொழுகைக்காக அழைக்கப்படும் அழைப்பில் (பாங்கு) பொதுவாக இருந்தால் தான் அனைவரும் இது தொழுகைக்கான அழைப்பு எனப் புரிந்து கொள்வார்கள். இல்லையென்றால் தமிழ் பேசும் மக்களுக்கு மட்டும்தான் புரியும்.
தொழுகை, அழைப்பு போன்ற சிலவற்றை தவிர்த்து ஏனைய காரியங்களிலும் தமிழ் மொழியே பயன்படுத்தப்படுகிறது.
மசூதிகளில் தங்களின் கோரிக்கையை இறைவனிடம் தமிழிலே தான் வைக்கிறார்கள். (தொழுகைகளிலும் , மற்ற சமயங்களிலும்)
தமிழில் தான் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
அறிவிப்பு தமிழில் தான் செய்யப்படுகிறது.
யாருக்கும் அரபு மொழி தெரியாது (விரல் விட்டு எண்ணும் ஒரு சிலரை தவிர).
திருக்குர்ஆன் தமிழில் படித்தால் தான் அதன் அர்த்தம் புரிந்து அதன்படி செயல் பட முடியும்.
எனவே தமிழோ வேறு எந்த மொழியோ இஸ்லாத்தின் பார்வையில் மட்டம் கிடையாது. அனைத்து மொழிகளும் இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்டவை. அனைத்து மொழிகளுக்கும் இறைவன் தூதர்களை அனுப்பியுள்ளான். இறுதியாக வந்த தூதர் அரபு பேசும் மக்களிடம் வந்தவர் ஆவார்.
                                
இந்தக் கேள்வி தேவையற்றது…உலக இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரே மொழியைத் தொழுவதற்குப் பயன்படுத்துகின்றனர்.

வெள்ளிக்கிழமையன்று தொழுகையினூடே தமிழில் எல்லா மதத்தினருக்கும் புரியும் வகையில் வாழ்க்கை நெறித் தத்துவங்களை உரையாக வழங்குவர். அதைச் சிறுவயது முதலே கவனித்துக் கேட்டவள் நான். முதலில் நாம் தமிழை எந்த அளவு நேசிக்கிறோம் எங்கெல்லாம் அதற்கான செயல்பாடுகளில் இறங்கி இருக்கிறோம் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். பாரதி கவிதை, திருக்குறள் போன்ற சிறந்த தமிழ்நூல்களையாவது அவ்வப்போது விரும்பி படிக்கிறோமா என நம்மை முதலில் நாம் உற்றுநோக்கவேண்டும்.
மதவழிபாடுகளில் நெருக்கடி தரும் கேள்விகள் தேவையற்றது.
===========================================================

அஹ்மத் பஸ்ஸாம்,  Sirajudeen, வள்ளி ஆகியோருக்கும் ta.quora.com தளத்திற்கும் என் நன்றி. https://ta.quora.com