காசு பணம் கொடுத்து ஏழைகளின் துன்பம் போக்குதல்; உடல் உழைப்பை ஈந்து இயலாதவர்களுக்கு உதவுதல் என்றிப்படிப் பிறருக்கு உதவுவதன் மூலம் மனம் அமைதி பெறுவதற்கான வழிகள் எத்தனையோ இருக்கக் கடவுளை வழிபடுவதன் மூலமாகத்தான் அதை முழுமையாகப் பெற முடியும் என்று நம்புகிறவர்கள் நம்மில் மிகப் பலர்.
கடவுளை நம்பட்டும்; இது அவரவர் விருப்பம் சார்ந்தது.
பாலாபிஷேகம், நெய் அபிஷேகம், தயிர் அபிஷேகம், பழரச அபிஷேகம், சந்தன அபிஷேகம், மஞ்சள் அபிஷேகம் என்றெல்லாம் வழக்கப்படுத்திக்கொண்டு, அன்றாட வாழ்வின் அடிப்படைத் தேவைகளாக உள்ள இப்பொருள்களைக் கணக்கு வழக்கில்லாமல் வீணடிப்பதுதான் நம்மை அதிர வைக்கிறது.
பிரபலமான நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போதெல்லாம். ரசிகர்கள், அபிஷேகம் என்னும் பெயரில் அவர்களுடைய ‘கட் அவுட்’களுக்கு லட்சக்கணக்கான லிட்டர் பாலைக் கொட்டி வீணடிக்கிறார்கள். மக்களின் நலம் நாடுவோர் பலரும் இதைக் கண்டிக்கிறார்கள். ஆனால்.....
கோடிக்கணக்கான லிட்டர் பாலும் பிற பொருள்களும், பக்தியின் பெயரால் சாமி சிலைகள் மீது கொட்டி வீணடிக்கப்படுவதை எவரும் கண்டிப்பதில்லை. நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.
நாட்டை ஆளுபவர்கள் நினைத்தால், ‘சிலைகளைச் சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்தால் போதும்; விலைமதிப்பற்ற பொருள்களை வீணடித்தல் கூடாது’ என்று ஆணை பிறப்பிக்கலாம். சட்டம் இயற்றலாம். ஆனால், இது பக்தி சம்பந்தப்பட்டது. தொட்டால் சுட்டுப் பொசுக்கிவிடும் என்றஞ்சிக் கண்டும் காணாமல் இருக்கிறார்கள்.
இந்த வீணடித்தலுக்கு விடிவுகாலமே இல்லையா எனின், இல்லை என்றே சொல்லலாம்.
அயராமல் முயன்றால், மூடநம்பிக்கைகள் பலவற்றை ஒழித்துவிட முடியும்; பக்தியின் பெயரால் வழக்கப்படுத்திக்கொண்ட மூடநம்பிக்கைகளை ஒழிப்பது என்பது அத்தனை எளிதல்ல.
அது, கடவுள் நம்பிக்கையை ஒழித்தால் மட்டுமே சாத்தியப்படும்!
=====================================================================