21.12.2019இல் குடியாத்தம் பெரியார் அரங்கில், திராவிடர் கழக மகளிரணி சார்பாக நடைபெற்ற ‘பெரியார் நினைவு நாள்’ கூட்டம் குறித்த ஒரு செய்தி என்னைப் பெருவியப்பில் ஆழ்த்தியது[நான் கட்சி சார்பற்றவன் என்பதை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்]. காரணம்.....
இந்நிகழ்வில் கலந்துகொண்ட பெண்கள் பலரும் கடவுள் மறுப்புக் கொள்கையாளர்கள் என்பதே.
கூட்டத்திற்குத் தலைமை தாங்கியவர் ந. தேன்மொழி. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவரும் இவரே. வரவேற்புரை நிகழ்த்தியவர் ச.ரேவதி. அறிமுக உரை ஆற்றியவர் ச.ஈஸ்வரி. பெரியார் குறித்த தன் எண்ணங்களை இவர் பகிர்ந்துகொண்டார்.
முன்னிலை வகித்த பெண்கள் பலராவர். அவர்கள், வேலூர் ச. கலைவாணி, அ.செல்வி, ஒசூர் வ.கண்மணி, குடியாத்தம் சி.லதா, பெ.இந்திரா காந்தி, ச.ரம்யா முதலானோர் ஆவர்.
பெரியார் படத்தை வேலூர் ச.கலைமணி பழனியப்பன் திறந்து வைத்து, பெரியாரின் அருந்தொண்டு குறித்து உரையாற்றியுள்ளார்.
ச.இன்பக்கனியின் உரையும், பூனைகளால் எலிகளுக்கு விடுதலை இல்லை. அது போல் ஆண்களால் பெண்களுக்கு விடுதலை வாய்க்காது என்று விழிப்புணர்வூட்டி எ.அகிலா எழிலரசன் ஆற்றிய பொழிவும் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டுவனவாக அமைந்திருந்தன.
தாம் மேற்கொண்ட பகுத்தறிவுப் பிரச்சாரம் குறித்த பெரியாரின் கூற்றை மேற்கோள்காட்டி, தகடூர் தமிழ்ச்செல்வி ஆற்றிய உரை உணர்ச்சிபூர்வமானதாக இருந்தது.
அறிவுக்கரசு அவர்களின், ‘கடவுள் மறுப்பின் கதை’ என்னும் நூலை வெகுவாகப் பாராட்டி ஓவியா அன்புமொழி உரை நிகழ்த்தினார்.
2019ஆம் ஆண்டில் மட்டும் 461 சாதி மறுப்பு இணையேற்பு விழாக்களை நடத்திய பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரிக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
இன்னும் குறிப்பிடத்தக்க சில நிகழ்வுகளுக்குப் பின்னர், கடவுள் மறுப்பு குறித்ததொரு சிறப்புச் சொற்பொழிவைக் க.அறிவுக்கரசு வழங்கியுள்ளார்.
திராவிடக் கழகத்தாருடன் தொடர்பு ஏதும் இல்லாத காரணத்தால், மேற்குறிப்பிடப்பட்ட பெண்கள் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பு அமைந்திடவில்லை. தற்செயலாய் இன்று அறிய நேர்ந்தது.
=======================================================================
குறிப்புரை: பகுத்தறிவுப் பரப்புரையில்,கணிசமான அளவில் பெண்கள் ஈடுபடுகிறார்கள் என்பதை முன்னிலைப்படுத்துவதே இந்தப் பதிவின் தலையாய நோக்கம்.