அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

‘காம வலை’ அல்லது ‘தர்ம அடி’...குறுங்கதை!

சுமார் இருபது வயது மதிக்கத்தக்க அந்த இளைஞனின் கைகள் முதுகுப்பக்கமாக இழுத்துச் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. நெற்றியில் கீறல்கள். உதடுகளில் ரத்தக்கசிவு. வேர்வையில் தெப்பமாய் நனைந்திருந்தான்.  மார்பு, தோள்பட்டை என்று இரண்டு மூன்று இடங்களில் கிழிந்திருந்தது அவனின் சிவப்பு நிறச் சட்டை. 

நான் பார்த்தபோது, கூனிக்குறுகி, தலைகவிழ்ந்திருந்த அவனின் தலைமுடியைப் பற்றி நிமிர்த்தி, “சொல்லுடா, உனக்கு எந்த ஊரு?” என்று கர்ஜித்தார் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு கறுத்த உடம்புக்காரர்.

இளைஞன் வாய் திறக்கவில்லை.

”மரியாதையா சொல்லிடு” -முதுகில் உதைத்துக்கொண்டே கேட்டார் முப்பதைக் கடவாத ஒரு முரட்டு வாலிபர். 

“எவ்வளவு தைரியம்  இருந்தா இத்தனை பெரிய கூட்டத்தில் ஒரு பொம்மணாட்டியோட மாரைத் தொடுவே. நீயெல்லாம் அக்கா தங்கச்சிகூடப் பொறக்கலியா?” என்று கேட்ட ஒரு குண்டுப் பெண், தன் கையிலிருந்த தண்ணீர்ப் பாட்டிலால் அவன் தலையில் ஓங்கி ஓங்கி அடித்தார்.

கல்லூரி மாணவன் போல் தென்பட்ட அந்த இளைஞனின் தோற்றம் ஒரு கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவனாகவும் இருக்கலாம் என்று எண்ண வைத்தது. சரமாரியாகத் தர்ம அடி விழுந்துகொண்டிருந்த நிலையில் மௌனம் சுமந்து துவண்டு கிடந்தான்.

“நாம கேட்டா ஊர் பேர் எதுவும் சொல்ல மாட்டான். அதோ அந்தக் கடைகிட்ட நாலஞ்சி போலீஸ்காரங்க இருக்காங்க. அவங்ககிட்டே ஒப்படைச்சுடலாம்” என்றார் வெள்ளையும் சொள்ளையுமாக இருந்த  பெரியவர்.

“இப்படி அவர் சொன்னபோதுதான், வாய் திறந்து பேசினான் இளைஞன். “வேண்டாங்க. இனிமேலும் இந்த மாதிரித் தப்பெல்லாம் பண்ண மாட்டேன். கெஞ்சிக் கேட்டுக்கிறேன், என்னை விட்டுடுங்க.” -அவன் கண்களில் கண்ணீர்.

“விடக்கூடாது. ஆறு மாசமாவது ஜெயில் களி தின்னாத்தான் இவனெல்லாம் திருந்துவான்” என்றார் ஒரு நடுத்தர வயதுக்காரர்.

“வேண்டாம். இவன் திருந்துறதுக்கு இந்தத் தண்டனையே போதும். போலீசு அது இதுன்னு இவனோட எதிர்காலத்தைப் பாழடிக்க வேண்டாம். எதுக்கும் சம்பந்தப்பட்ட பொண்ணைக் கேட்டுடலாமே” என்றேன் நான்.

“இவன் தன்னோட மார்பில் கைபோட்டவுடனே, ‘பொறுக்கி நாயே’ன்னு இவனைச் செருப்பால் அடிச்சாங்க அந்த அம்மா. இவன் கன்னத்தில்  நாலு அறை குடுத்துத் தலை மயிரைப் பிடிச்சு இழுத்துக் கீழே தள்ளினாங்க. இவன் அவங்க காலில் விழுந்து ‘மன்னிச்சுடுங்க’ன்னான். ‘ஒழிஞ்சி போடான்’னு அவங்களும் இங்கிருந்து போய்ட்டாங்க. சுத்தியிருந்து வேடிக்கை பார்த்தவங்க இவன் கைகளைக் கட்டிப்போட்டு அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க” என்றார் கூட்டத்தில் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர்.

கூட்டம் கலையலாயிற்று.

இளைஞனுக்குக் கை கொடுத்து எழுந்து நிற்க உதவிய ஒரு மனிதாபிமானி, கட்டப்பட்டிருந்த அவனின் கைகளை விடுவித்து, சட்டையின் கிழிந்து தொங்கிய இடங்களை மறைக்கும் வகையில் தன் மேல் துண்டை அவனுக்குப் போர்த்துவிட்டு ஒரு கை பற்றி அழைத்துச் சென்றார்.
=====================================================================