வாசிப்புச்சுவை கருதி ஆங்காங்கே கொஞ்சம் ஆங்கிலச் சொற்களைக்[தமிழ் வரிவடிவில்] கலந்துள்ளேன். பொறுத்தருள்க. இது ஒரு பழம்பதிவு].
அன்று முகூர்த்த நாள்.
மக்கள் வெள்ளம் பேருந்து நிலையத்தில் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது.
அங்கு நிற்கும் பேருந்துகளைவிட, நிற்பது போல் ‘பாவ்லா’ காட்டிவிட்டுப் பறந்துகொண்டிருந்தவையே அதிகம்.
எப்படியோ தொத்திக்கொண்டால் போதும் என்று, எத்தனையோ உத்திகளையும் உபாயங்களையும் கையாண்டு மனம் சலித்துப்போன மகானுபவர்களைப் பார்த்து நானும் ஒரு முடிவுக்கு வந்தேன்.
பயணத்தை ஒத்திப்போடுவதுதான் அது.
வீடு நோக்கி நடக்கலானேன். அப்போது.....
“சார்” என்னும் அழைப்பு, ‘சடக்’கென மிதிக்கப்பட்ட ‘ஏர் பிரேக்’காக என்னைத் தடுத்து நிறுத்தியது.
திரும்பிப் பார்த்தேன்.
என்னை அழைத்தது ‘குயில்’ என நான் நினைத்திருக்க, வண்ண 'மயில்’ ஒன்று என்னருகே, மிக நெருக்கமாக நின்றுகொண்டிருந்தது!
“சார், நீங்க சென்னைக்கா?” -செழித்த கன்னங்குழியச் சிரித்துக்கொண்டே கேட்டது அந்தப் பஞ்சவர்ணக் கிளி!
“சென்னைக்கென்ன, உன் முகவரி தெரிஞ்சா அங்கேயும் வரக் காத்திருக்கிறேன்” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.
இப்படித் தத்துப்பித்தென்று எதையாவது நினைப்பது எனக்குச் சாதாரணம். அதை வெளியே சொல்வது அசாதாரணம்.
கிளி தொடர்ந்து கொஞ்சியது, “உங்களோடு சேர்த்து, சென்னைக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தருவீங்களா? ப்ளீஸ்.....”
நான் கூட்டத்தைக் கண்டு மிரண்டு போய் வீடு திரும்ப நினைக்கும் போது உறங்கிக் கொண்டிருந்த என் ஆண்மை விழித்துக்கொண்டது. அலைகடலெனப் புரண்டுகொண்டிருந்த ஜனக்கூட்டத்தை ஒரு முறை அலட்சியமாகப் பார்த்துக்கொண்டேன்.
“ஒரு டிக்கெட்தானே, கவலைப் படாதீங்க” என்று சொல்லிக்கொண்டே சட்டையை முழங்கைவரை மடித்துவிட்டபடி ‘கோதா’வில் இறங்கத் தயாரானேன்.
“இங்கிருந்து சென்னைக்கு எத்தனை கிலோமீட்டர் சார்?” -மயில் அகவியது.
“இருநூத்திச் சொச்சம்.”
“வெரி லாங் ஜேர்னி. நல்ல வேளை உங்க துணை கிடைச்சுது” -அவள் பாட்டுக்குச் சொல்லிக்கொண்டிருந்தாள்.
“ஐயோ, துணை கிடைச்சதுன்னு சொல்றாளே! கடவுளே, ரெண்டு டிக்கெட்டுக்கு வழி பண்ணிடு. உனக்கு லட்சார்ச்சனை பண்றேன்” என்று என் குல தெய்வத்தை மானசீகமாய்த் தொழுதேன்.
“சார், இன்னொரு முக்கியமான விசயம்.....” என்று என் கவனத்தை ஈர்த்தவள், “தூரப் பயணம் இல்லீங்களா. ஒரு ஓரமா இடம் பிடிச்சிட்டா வசதியா இருக்கும்” என்றாள்.
‘வசதியா இருக்கும்’ என்ற வார்த்தைகளை மட்டும், கிறங்கும் குரலில் இரண்டு முறை சொன்னாள்.
இனம் புரியாத இன்ப உணர்வு, ‘ஜிவுஜிவு' என்று என் உடம்பு முழுக்கப் பரவிக் கொண்டிருக்கையில்.....
“டிக்கெட் வாங்கின உடனே, நீங்க பஸ்ஸில் ஏறி, ஜன்னல் ஓரத்தில் இடம் பிடிச்சி உங்களுக்குப் பக்கத்திலேயே ஒரு இடம் போட்டுடுங்க” என்றாள்.
எனக்குள் திடீர்க் குழப்பம்.
’ஒரு வயசுக் குமரி, முன்பின் தெரியாத வாலிபனான என் பக்கத்தில் இடம் போடச் சொல்கிறாளே, மன நிலை பாதிக்கப்பட்டவளோ?’
அவளைக் கூர்ந்து ஆராய்ந்தேன்.
தெளிவோடுதான் காணப்படுகிறாள். “என்ன சொன்னீங்க? எனக்குப் பக்கத்திலா?” என்றேன்.
“ஆமாங்க. உங்களுக்குப் பக்கத்தில்தான்.”
‘பக்கத்தில்’ என்ற வார்த்தைக்கு, செம அழுத்தம் கொடுத்துச் சொன்னாள்.
அடுத்த வினாடியே, பீர் குடித்த ரேஸ் குதிரையாக நான் திணவெடுத்து நின்றேன்; "இரண்டு டிக்கெட்டுகள் வாங்கியே தீருவேன்” என்று சபதமும் எடுத்தேன்.
”சார், பஸ் வருது” -அவள் அலறினாள்.
பேருந்திலிருந்து இறங்கி நின்ற நடத்துனரைக் கண்டதும் எனக்குள் ‘குபீர்’ உற்சாகம்.
அவன் என் பால்ய நண்பன்!
“டேய் வாசு நீயா?” -என்னை மறந்து கூச்சலிட்டேன்.
“ஆமாடா. எங்கே போகணும்?” என்றான் வாசு.
“சென்னைக்கு. ரெண்டு டிக்கெட்” என்று இரு விரல் காட்டிவிட்டு, ”இடம் பிடிக்கிறேன். நீ மெல்ல ஏறு” என்று உரிமையுடன் என் தேவதையிடம் சொல்லிவிட்டுப் பேருந்தில் பாய்ந்தேன்.
அடுத்து நான் சொல்வதைக் கேட்டால் நீங்கள் பொறாமையில் வெந்து புழுங்குவீர்கள்.
இருவர் மட்டுமே அமரக்கூடிய ஒரு இருக்கையே காலியாக இருந்தது!
கைக்குட்டையால் தூசு தட்டி இடம் போட்டுவிட்டு அவள் வருகையை எதிர்பார்த்துத் திரும்பினேன்.
என் உடம்பெங்கும் லேசாக வியர்த்தது; மெலிதான பதற்றம்.
அவள் பேருந்தில் ஏறி என்னை நோக்கி வந்துகொண்டிருந்தாள். எனக்குள் இனம்புரியாத தடுமாற்றம்.
அவள் ஒரு கிழவியைக் கைத்தாங்கலாக அழைத்து வருகிறாளே, எதற்கு?
என்னை நெருங்கியதும், “பாட்டி, நீ ஜன்னலோரமா உட்கார்ந்துக்கோ. நான் சொன்னேனே அந்த ஜெண்டில்மேன் இவருதான். சென்னை வரைக்கும் உனக்குத் துணையா இருப்பாரு” என்றவள், என்னைப் பார்த்து, "சென்னையில்தான் என் அண்ணா வீடு இருக்கு. பாட்டி அங்கேதான் வர்றாங்க. அவங்களைத் தனியே எப்படி அனுப்புறதுன்னு கவலைப் பட்டுட்டிருந்தேன். அந்த ஆண்டவன்தான் உங்களை இப்போ அனுப்பி வெச்சிருக்கார். ரொம்ப நன்றி பிரதர். பை......” என்றவள் என் பதிலை எதிர்பாராமல் நடையைக் கட்டினாள்.
என் நிலை?
உங்கள் மனம் போனபடி கற்பனை செய்து சந்தோசப்பட்டுக் கொள்ளுங்கள்.
=====================================================================