சனி, 31 அக்டோபர், 2020

இலவசம்!...ஆடு, மாடு...பின்னே கடவுள்!!!

[மனிதகுலத்தின் முதல் தேவை மனிதாபிமானம்]

இன்று[31.10.2020] பிற்பகல் 02.15 மணிக்கு 'பாலிமர்' தொலைக்காட்சியில் ஒரு நிகழ்வைக் காண நேர்ந்தது. 

வேறு வேறு செய்திகளுக்கிடையே, 'திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவசத் தரிசனம். அனுமதிச் சீட்டு வாங்க முண்டியடிக்கும் பக்தர்கள்' என்னும் செய்தியும் இடம்பெற்றிருந்தது. அதற்கான பின்னணி நிகழ்வும் திரையில் காட்டப்பட்டது.

கடவுள் எனப்படுபவர்தான் உயிர்களைப் படைத்தார் என்றால், அவரால் உயிர்கள் பெறும் இன்பங்களைக் காட்டிலும் பெறும் துன்பங்களின் அளவு மிக மிக மிகப் பல மடங்கு அதிகம் என்னும் பகுத்தறிவாளரின் கூற்றை நம்மவரில் பலரும் உணரும் நிலையில் இல்லை.

அவரை வழிபடுவதாலோ, நேர்ந்துகொள்வதாலோ, கோயில்களில் குடியேற்றி விழாக்கள் எடுத்துக் கொண்டாடுவதாலோ எந்தவொரு பயனும் இல்லை என்று நற்சிந்தனையாளர்கள் சொல்வதை இந்த மானுட ஜாதியாரில் பெரும்பாலோர் நம்பத் தயாராயில்லை.

காலங்காலமாய்ப் பல கொள்ளை நோய்களின் தாக்குதலில் கொத்துக் கொத்தாய்ப் பல லட்சம் பேர் பலியான போதெல்லாம் கடவுள்[கள்] என்ன செய்துகொண்டிருந்தார் என்று கேட்கும் துணிவு எந்தவொரு பக்தனுக்கும் இல்லை.

இன்றளவில், கொரோனா கொடுந்தொற்றால் லட்சக்கணக்கானவர்கள் படும் துன்பங்களையும் உயிரிழப்புகளையும் கண்கூடாகப் பார்க்க நேர்ந்தும், புற்றீசல்களாய்க் கோயில்களை நோக்கிப் படையெடுக்கும் பக்தர்களின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.

'கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களை முதலில் கோயில்களுக்கு அனுப்புவோம். கடவுள் குணப்படுத்துகிறாரா பார்ப்போம்' என்று சொல்லும் துணிவு எவருக்குமே இல்லை என்பது பரிதாபம்.

முற்றுப்பெறாத தொடர் சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்களே இந்தக் கற்பனைக் கடவுள்கள்தான். இதை உணராதவரை இந்த மனித ஜாதி திருந்தப்போவதில்லை.

அடுத்தடுத்துப் பல கொரோனாக்கள் தாக்குதல் தொடுத்தாலும், கடவுளி[களி]ன் காலடிகளில் கிடந்து புலம்பும் அறியாமையிலிருந்து இவர்கள் விடுபடுவது இப்போதைக்கு இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது! 

நோயற்றவர்கள் நோயுற்றவர்களுக்கு உதவலாம். வசதி படைத்தவர்கள் வசதியற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டலாம். முடிந்தவரை பண உதவி செய்து ஆட்சியாளரையும் அறிவியல் அறிஞரையும் ஊக்குவிக்கலாம். கடவுளுக்காக நேரத்தையும் பொருளையும் வீணடிக்காமல் இவை போன்ற நல்ல செயல்களில் மனதைச் செலுத்தினால் மட்டுமே மனித ஜாதி உருப்படும் என்பது உறுதி.

ஏழுமலையான் கோயிலில் எனக்கு மிக மிக மிகப் பிடித்தது இது மட்டுமே! ஹி...ஹி...ஹி!!
=========================================================================