சாலையைக் கடந்துகொண்டிருந்த ஒரு பள்ளிச் சிறுவனை மோதித் தள்ளிவிட்டு, மாயமாய் மறைந்து போனது அந்த வாகனம்.
தூக்கி வீசப்பட்டு, ரத்தக் காயங்களுடன் கிடந்த அந்தச் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்து, அவனின் அடையாள அட்டையிலிருந்த தொ.பே.எண்ணுக்குத் தகவல் அனுப்பினான் கூலித் தொழிலாளி அய்யாசாமி.
விரைந்து வந்த சிறுவனின் பெற்றோர் மருத்துவரைப் பார்த்துவிட்டு, அய்யாசாமியை அணுகினார்கள்.
“பத்து நிமிசம் தாமதம் ஆகியிருந்தா உங்க பிள்ளையைக் காப்பாத்தியிருக்க முடியாதுன்னு டாக்டர் சொன்னார். கடவுளாப் பார்த்து உங்களை அனுப்பியிருக்கார். ரொம்ப நன்றிங்க” என்று சொல்லி, அய்யாசாமியின் இரு கைகளையும் பற்றித் தன் கண்களில் ஒற்றிக் கொண்டார் சிறுவனின் தந்தை.
“கடவுள்தான் என்னை அனுப்பி வெச்சார்னு சொல்றீங்களா?” -முகத்தில் ஆச்சரியம் பொங்கக் கேட்டான் அய்யாசாமி.
“ஆமாங்க. நான் நாள் தவறாம கடவுளை வழிபடுறவன். அதுக்குப் பலன் கிடைச்சிருக்கு. உங்களை அனுப்பி என் புள்ளையைக் காப்பாத்தியிருக்கிறார் கடவுள்.”
அய்யாசாமியின் முகத்தில் விரவிக்கிடந்த வியப்புக்குறி மறைந்து வருத்தம் பரவியது; தழுதழுத்த குரலில் சொன்னான்: “நானும் நாள் தவறாம சாமி கும்பிடுறவன்தானுங்க. என் ரெண்டு வயசுக் குழந்தை காணாம போயி ரெண்டு வருசம் ஆச்சு. கோயிலுக்குப் போயி சாமி முன்னால நெடுஞ்சாண்கிடையா விழுந்து தினம் தினம் கண்ணீர் விட்டு அழுவுறேன். இன்னிக்கிவரைக்கும் சாமி கண் திறக்கலய்யா. அவருக்கு உங்க மேல ரொம்பப் பிரியம் போலிருக்கு. நீங்க சொன்னாக் கேட்பாரு. தயவு பண்ணி என் புள்ளயைக் கண்டுபிடிச்சிக் கொடுக்கச் சொல்லுங்க ஐயா.”
பதில் பேசும் வகையறியாமல் பேந்தப் பேந்த விழித்தார் சிறுவனின் தந்தை!