புதன், 11 நவம்பர், 2020

பெரியாரின் 'பெருமை'யும் ஹெச்.ராஜாவின் 'சிறுமை'யும்!!!

#காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து முன்னாள் பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா, வேல் யாத்திரையைத் தொடங்கினார். இதில் 500க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கலந்துகொண்டனர். அவர்களைப் போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

வேல் யாத்திரை தொடங்குவதற்கு முன்பு காஞ்சிபுரம் சங்கரமடம் எதிரே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் ஹெச். ராஜா.

அப்போது, “சாமி சிதம்பரனார் எழுதிய 'தமிழகத் தலைவர் ஈவேரா'[ஈ.வெ.ரா] என்ற புத்தகத்தில் 'ஈவேரா விபச்சாரிகள்' வீட்டிற்குள் தினசரி புகுந்து வருவார் என எழுதப்பட்டுள்ளது. விபச்சாரிகளின் வீட்டிற்கு ஈவேரா சென்று வருவதற்கு அவரது கூட்டாளிகள் உதவி செய்வார்கள். மேலும், காவிரி ஆற்றங்கரையில் ஈவேரா தனது கூட்டாளிகளோடுடன் சேர்ந்து விலைமாதர்கள் உடன் கும்மாளம் அடிப்பார் என்றும், தன் மனைவி நாகம்மையார் சமைத்த உணவை ஆற்றங்கரைக்குக் கொண்டுவரும்படி சொல்லுவார் என்றும் 'தமிழக தலைவர் ஈவேரா' என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. இதிலிருந்து ஈவேரா பெண் அடிமைத் தனத்திற்குப் போராடினாரா? அல்லது தன் மனைவியை அடிமையாக வைத்திருந்தாரா? என்கின்ற கேள்வி எழுகிறது” எனக் கூறினார்.#

- இது ஊடகச் செய்தி: https://tamil.asianetnews.com/politics/eva-often-goes-to-the-house-of-prostitutes-this-is-how-it-looks-in-the-book-king--qjjgee

                                         *                              *                            *

'தமிழர் தலைவர் ஈ.வெ.ரா.' புத்தகத்தில் இந்தக் கொஞ்சம் வரிகளை மட்டும்தான், அதாவது விபச்சாரிகளிடம் போனதை மட்டும்தான் ஹெச்.ராஜா படித்தாரா?

தன்னைத் திருத்திக்கொண்டு, தன் இறுதி மூச்சுவரை பெரியார் செய்த தியாகமும்  தொண்டும் அவரைப் 'பெரியார்' ஆக்கின. அதைத்தான் சாமி.சிதம்பரனார் புத்தகம் முழுக்க எழுதியிருக்கிறார். அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு இதை மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் இந்த ராசாதி ராசா!

பொதுக்கூட்டங்களில் பேசும்போது, தாய்மார்களை வெளியேற்றிய பின்னர், தன் இளமைப் பருவத்தில் செய்த சில தவறுகளைப் பெரியாரே சொல்லியிருக்கிறார். இது ஊர் உலகத்துக்கெல்லாம் தெரியும். 

செய்த தவறுகளை ஒளிவு மறைவில்லாமல் சொல்வதற்குப் பெரும் துணிவும் தூய மனமும் வேண்டும். இவை இருந்ததால்தான், காந்தியடிகளால் தம் இளம் வயதில் செய்த பாலியல் தவறுகளை, 'சத்திய சோதனையில் பதிவு செய்ய முடிந்தது. இன்றளவும் அவர் 'மகாத்மா' என்று போற்றப்படுகிறார்.

'எப்படி வாழ வேண்டும் என்று அறிந்துகொள்ளக் காந்தியடிகளின் 'சத்திய சோதனை' படியுங்கள். எப்படியெல்லாம் வாழக் கூடாது என்று தெரிந்துகொள்ள நான் எழுதிய 'வனவாசம்'[சுயசரிதை] படியுங்கள்' என்றார் கவிஞர் கண்ணதாசன். 'குழந்தை மனம் கொண்டவர்' என்று இன்றளவும்  அவர் போற்றப்படுகிறார்.

வாழ்வில் உயர் நிலையை எட்டியவர்களில் பலரின் அந்தரங்க வாழ்க்கையைத் துருவி ஆராய்ந்தால், அவர்கள் பாலியல் விசயத்தில் மிகப் பலவீனமானவர்கள் என்பதைக் கண்டறியலாம்.

இந்தப் பலவீனம் பெரியாருக்கும் இருந்தது. காலப்போக்கில் அதைப் புறக்கணித்து, பெண்ணடிமைத்தனம் ஒழிவதற்காக, அவர் ஆற்றிய பணி ஏராளம். மகளிர் மாநாடு ஒன்றில்தான் அவருக்குப் 'பெரியார்' பட்டம் வழங்கப்பட்டது என்பதே இதற்கான சான்று.  

இவ்வாறான வரலாற்று உண்மைகளை அறியாததால்தானோ என்னவோ இந்த ராசா எனப்படுபவர், 'பெண்ணடிமைத்தனம் ஒழியப் பெரியார் போராடினாரா?' என்று கேள்வி கேட்டுத் தன் அறியாமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

'தேசியச் செயலாளர் பதவி பறிபோனது.

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் பதவி பகற்கனவானது.

யார் யாரையோ சிபாரிசு பிடித்து நடுவணரசில் அமைச்சர் பதவி பெறும் முயற்சி பலனளிக்காதது'

என்றிவ்வகையில், முற்றிலுமாய்த் தான் புறக்கணிக்கப்பட்ட நிலையில்.....

பெரியாரின் இளமைப் பருவத்தில் நடந்த அசம்பாவிதத்தைச் சுட்டிக்காட்டி அவரை இழிவுபடுத்தினால், மேலிடம் பாராட்டும்; பதவி கொடுக்கும் என்று ஆசைபட்டதன் விளைவுதான் இந்தச் சிறுமதியாளரின் பெரியார் குறித்த பதிவு எனின், அதில் தவறேதும் இல்லை!

===========================================================