#கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களில் 20% பேருக்கு 90 நாட்களுக்குள் மனநலக் கோளாறு ஏற்படும் அபாயம் இருப்பதாக, 'தி லான்செட் சைக்காட்ரி' ஜார்னலில் வெளியான கட்டுரையில் எச்சரிக்கப்பட்டுள்ளது[http://www.puthiyathalaimurai.com/newsview/86160/One-in-five-COVID19-patients-develop-mental-illness-within-90-days].
62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு நிகழ்த்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது என்பது செய்தி.
இப்பாதிப்பு உள்ளவர்களுக்குக் கவலை, மனச்சோர்வு, தூக்கமின்மை போன்றவை இருக்கும் என்று கண்டறிந்திருக்கிறார்களாம்.
இது குறித்து, பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் பால் ஹாரிசன், "கொரோனாவிலிருந்து உயிர்பிழைத்தவர்கள் மனநலப் பிரச்சினைகளுக்கு ஆளாவது சாத்தியமே" என்று உறுதிப்படுத்தியிருக்கிறாராம்.
20% பேர் மனநோய்க்கு ஆளாகிறார்கள் என்பது உண்மையாகவே இருக்கட்டும். அவர்கள் அந்நிலைக்கு ஆளாவது ஏன்?
குணமான பின்னரும், அவர்கள் கவலையுடனும் மனச்சோர்வுடனும் தூக்கமின்றித் தவிப்பதே காரணமாகும்.
இந்தத் தவிப்புக்கு அவர்களை ஆளாக்குவது எது?
கொரோனா குறித்த ஆராய்ச்சியாளர்களின்[டாக்டர்களும்கூட] 'எதிர்மறை' அறிக்கைகள்தான்.
'குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்றும்' என்று அறிக்கை விடுகிறார் ஓர் ஆராய்ச்சியாளர்.
'மூன்று மாதங்கள் கேரண்டி. அப்புறம் தொற்றுவதற்கு வாய்ப்புண்டு' என்று அறிக்கை விடுகிறது ஓர் ஆராய்ச்சி நிறுவனம்.
'இரண்டு மாதங்களுக்கு எதிர்ப்புச் சக்தி குறையும். அப்புறம் நான்கு மாதங்களுக்கு அதிகரிக்கும். அப்புறம் என்னவாகும் என்பது தெரியாது.' -இப்படி ஓர் அறிக்கை.
'கடும் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு எதிர்ப்புச் சக்தி அதிகம். அறிகுறி இல்லாதவர்களுக்கு அது குறைவாகவே இருக்கும்.' -இது இன்னொன்று.
'தலைவலி, மூட்டு வலி, உடம்பு வலின்னு நிறையப் பேர்[குணமடைந்தவர்கள்] வருகிறார்கள்.' இது, ஊசி குத்தவும் மருந்து எழுதித் தரவும் மட்டும் தெரிந்த ஒரு பெங்களூர் டாக்டரின் பேட்டி.
'குணமடைந்தவர்களில் ஐந்தில் ஒருவரை மனநோய் தாக்கும்.' -இது இன்றைய அதிர்ச்சித் தகவல்.
[அறிக்கைகள் பலவும் பலராலும் அறியப்பட்டவை என்பதால் ஆதாரங்கள் இணைக்கப்படவில்லை]
இவ்வகையில் ஆளாளுக்குத் தட்டிவிடும் அறிக்கைகள்தான் குணமடைந்தவர்களைக் குழப்பத்திற்கு உள்ளாக்குகின்றன. அவர்களைக் கவலைக்கும் மனச்சோர்வுக்கும் உள்ளாக்கி மனநோயாளிகளாக ஆக்குகின்றன.
நல்ல பலன் தரும் ஊசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வரும்வரை மேற்கண்ட வகையிலான 'எதிர்மறை' அறிக்கைகளைத் தவிர்த்தல் மிகவும் அவசியம்.
எந்தவொரு நாடும் கண்டுகொள்ளவில்லை. விளைவு.....
"குணமடைந்துவிட்டோம். கொரோனா இனி நம்மை அணுகாது' என்று மனமும் உடம்பும் தேறி மகிழ்வுடன் வாழ வேண்டியவர்கள் போதிய ஊணவும் உறக்கமுமின்றித் தவிக்கிறார்கள்.
அவர்களின் எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக்குறியாகிப் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது.
===============================================================