சனி, 7 நவம்பர், 2020

வன்புணர்வாளரின் உறுப்பை அறுத்தலும் தூக்கிலிடுதலும்!!!

"பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட நபரைப் பிடித்தால், அவனின் [அந்த]உறுப்பை அறுத்து வீசுங்கள்; அவனைச் சாலையின் மத்தியில் தூக்கிலிடுங்கள், அந்தக் காட்சியை எல்லாத் தொலைக்காட்சிகளிலும் காட்டுங்கள்" என்று ஹாத்ரஸ் சம்பவத்தை நினைவுகூர்ந்து ஆவேசப்பட்டிருக்கிறார் பிரபல  நடிகை மதுபாலா. 

'உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸில் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாகக் கூறப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைத்த நிலையில், அந்த வழக்கை உச்ச நீதிமன்றக் கண்காணிப்புடன் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அந்த அரசு கோரியிருக்கிறது.

இதற்கிடையே, ஹாத்ரஸ் சம்பவம் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் தொடர்ந்து பதிவாகி வருவது, பல துறைகளில் உள்ளவர்கள் இடையே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதில் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் வரிசையில் பிரபல தமிழ் மற்றும் ஹிந்தி நடிகை மதுபாலா, அசாதாரணமான வகையில் தனது உணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்' என்று B.B.C [6 அக்டோபர் 2020] செய்தி வெளியிட்டுள்ளது.

பாலியல் வன்புணர்வு நிகழ்த்தப்படும்போதெல்லாம், நம்மில் பலரும் இவ்வாறு உணர்ச்சிவசப்பட்டுச் சொல்வது வழக்கமாகிப்போன ஒன்றுதான். இப்போது சொல்லியிருப்பவர் பிரபல நடிகை என்பதால், ஊடகங்கள் இந்நிகழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

நடிகையின் குமுறல் அவரின் அடிமனத்திலிருந்து வெளிப்பட்ட ஒன்று என்பதே என் எண்ணம். முழுமனதுடன் அவரைப் பாராட்டலாம். ஆனால்.....

இம்மாதிரிக் குற்றச் செயலில் ஈடுபடுபவனை அல்லது ஈடுபடுகிறவர்களை இவ்வகையில் தண்டிப்பது என்பது, இன்றையச் சமூகச் சூழலில் அத்தனை எளிதல்ல என்பது மிகக் கசப்பான உண்மையாகும்.

தண்டனை வழங்குபவர்கள் குற்றவாளிகளைவிடவும் ஆள் பலமும் பண பலமும் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். இல்லையெனில், குற்றவாளிகளைச் சார்ந்தவர்களால் பழிவாங்கப்படுவார்கள்.

காவல்துறை துருவித் துருவி விசாரிக்கும். தண்டனை வழங்கிய நல்லவர்களையே சந்தேகக் கண்கொண்டு பார்க்கும். வழக்குத் தொடுக்கும். அந்த நல்லவர்கள் நாங்கள் நியாயவான்களே என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.

இவ்வகையான தொல்லைகளைத் தவிர்க்க வேண்டுமாயின்.....

'இது விசயத்தில் இம்மாதிரியான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படாது. வன்புணர்வு செய்த கயவர்களைத் தண்டித்தவர்களை அரசு பாராட்டும்; பரிசுகள் வழங்கிக் கவுரவிக்கும்; எவ்வகையிலும் தீங்கு நேராதவாறு அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும்' என்றிவ்வாறான அரசாணைகள் அரசால் பிறப்பிக்கப்படுதல் வேண்டும். 

பிறப்பித்தால், இதைப் பயன்படுத்தி, தமக்கு வேண்டாதவர்களைப் பழிதீர்க்கும் முயற்சிகளில் சுயநலவாதிகள் ஈடுபடும் வாய்ப்புள்ளது. இதைத் தடுப்பதும் மிகக் கடினமானது ஆகும்.

ஆக, வன்புணர்வாளர்களைப் பிடித்து, மதுபாலா சொல்வது போல் தண்டனை வழங்குவதென்பது அத்தனை எளிதான செயல் அல்ல.

ஆனாலும்.....

பெண்கள் பாதுகாப்புக்கென்று[மட்டும்] அனைத்து ஊராட்சிகளிலும், நேர்மையான நடத்தையுள்ள நல்லவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட 'மகளிர் பாதுகாப்பு மன்றம்' ஏற்படுத்தலாம். குற்றவாளிகள் பிடிபட்டால், தீர விசாரித்து மேற்குறிப்பிட்ட தண்டனை, அல்லது தண்டனைகளை உடனடியாக வழங்கும் அதிகாரத்தை[மட்டும்], சட்டம் இயற்றுவதன் மூலம் அரசு இம்மன்றத்தினருக்கு வழங்கலாம். 

இது குறித்துத் தீவிரமாகப் பரிசீலிக்க, சமூக ஆர்வலர்களும் சட்ட நிபுணர்களும் அடங்கிய ஒரு குழுவை அமைத்து, குழு வழங்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பெண்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்த முடியும்.

முயன்றால் முடியாதது இல்லை!

===============================================================

https://www.bbc.com/tamil/arts-and-culture-54433260