எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 8 நவம்பர், 2020

கொரோனாவின் புதிய அவதாரம்!!!

இப்போது இருப்பதைக் காட்டிலும் சக்திவாய்ந்த கொரோனா வைரஸ் பரவிவருவதால் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

கடந்த சுமார் 11 மாதங்களாக நாம் கொரோனாவால் மிகப்பெரிய போராட்டத்தைச் சந்தித்து வருகிறோம். எல்லா முயற்சிகளையும் தாண்டி கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. எனவே, கொரோனாவை ஒழிக்கச் சக்தி வாய்ந்த தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என்பது உறுதியாகிவிட்டது.

தற்போது பரவி வரும் கொரோனாவையே சமாளிக்க நாம் திணறிவரும் நிலையில், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் மிகவும் சக்திவாய்ந்த கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. அதாவது, டென்மார்க்கின் மிங்க் (கீரி வகை உயிரினம்) பண்ணைகளில் பல லட்சக்கணக்கான மிங்குகளுக்கு இந்தக் கொரோனா பரவியுள்ளது.

இப்புதிய கொரோனாவால் டென்மார்க்கில் 214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த மாற்றமடைந்த கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 1.7 கோடி மிங்குகளைக் கொலை செய்ய டென்மார்க் அரசு திட்டமிட்டுள்ளது. மிங்க் விலங்கின் தோல் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. உலகின் ஒட்டுமொத்த மிங்க் தோல் தேவையில் 40 விழுக்காட்டை டென்மார்க் விநியோக்கிக்கிறது.

இந்நிலையில், டென்மார்க் பிரதமர் மெட் பிரெடெரிக்சன், மாற்றமடைந்த வைரஸ் மிங்க் விலங்குகளைத் தாக்கியுள்ளது. அவற்றில் இருந்து மனிதர்களுக்கும் வைரஸ் பரவியுள்ளது. எனவே, கனத்த இதயத்துடன் இந்த முடிவை மேற்கொண்டுள்ளோம் என்று 'மிங்க் கொலை' தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

டென்மார்க் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஸ்பெயின், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் மிங்க் விலங்குகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு ஆயிரக்கணக்கான மிங்குகள் கொல்லப்பட்டுள்ளன.

ஏற்கெனவே உலகம் முழுக்கப் பரவி வரும் கொரோனாவுக்கு ஏற்பப் பல்வேறு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுச் சோதனை நிலைகளில் இருக்கின்றன. இந்நிலையில், புதிய வைரஸ் பரவினால் அதைத் தடுப்பூசியால் சமாளிக்க முடியுமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

[Vignesh Babu | Samayam Tamil Updated: 07 Nov 2020, 06:03:41 PM]

==============================================================