திங்கள், 9 நவம்பர், 2020

வேல் யாத்திரை முன்னே! 'காரணம்' கற்பித்தது பின்னே!!

தமிழக பா.ஜ. சார்பில் நவம்பர் 6இல் தொடங்கி டிசம்பர் 6வரை, திருத்தணி முதல் திருச்செந்துார் வரை வேல் யாத்திரை நடத்தத் திட்டமிடப்பட்டது. 

எதற்கு இந்த யாத்திரை?

தலைவர்கள் சொல்லவில்லை. அவர்களுக்கே தெரியாது!

தொண்டர்களுக்கும் தெரியாது.

மக்களிடையே பக்தியுணர்வை வளர்க்க நினைக்கிறார்களோ என்று எண்ணினால், நீங்கள் பெரும் தவறு இழைத்தவர் ஆவீர்கள்.

திட்டமிட்டபடி நவம்பர் 6ஆம் தேதி யாத்திரையைத் தொடங்கினார்கள்.

கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், யாத்திரைக்கு அனுமதி வழங்கிட அரசு மறுத்துவிட்டது. ஆனாலும், தடையை மீறி, திருத்தணியில் 6ஆம் தேதி வேல் யாத்திரை தொடங்கப்பட்டது. முருகன் உட்பட, நுாற்றுக்கணக்கானோர் கைதானார்கள். 

இவர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டார்கள்.

"பாஜகவுக்குக் குறைந்தபட்சம் பொறுப்புணர்வு இருக்க வேண்டும். முருகன் கோயிலே இல்லாத பகுதிகளில் எல்லாம் ஊர்வலம் செல்வது ஏன்? மாஸ்க் போடாமல் எப்படி ஊர்வலம் நடத்தலாம்? எதற்காகத் தமிழகம் முழுவதும் ஊர்வலம் நடத்துகிறீர்கள்?" என்றெல்லாம் தமிழக 'பாஜக'விடம் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாகக் கேள்வி கேட்டுள்ளது[https://tamil.oneindia.com/].

முறையான பதில் இல்லை.

இரண்டாவது கட்டமாக, தடையை மீறி, சென்னை, திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவில் அருகே, நேற்று காலை, வேல் யாத்திரை நடந்தது. 

இதில் பங்கேற்க வந்த, மாநிலத் தலைவர் முருகனுக்கு, வழி நெடுகிலும் பா.ஜ.க. தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். 

யாத்திரையை முன்னிட்டு, தேரடி, சன்னிதித் தெருவிற்குக் காலை முதல், நுாற்றுக்கணக்கான தொண்டர்கள் வரத் தொடங்கினர். செண்டை மேளங்கள், தாரை தப்பட்டை முழங்க, முருகர் வேடமணிந்து கையில் வேல் ஏந்தியபடி பலர் பங்கேற்றனர். 

வழக்கறிஞர் பிரிவுச் செயலர் மோட்சம் தலைமையில், தாமரை உருவம் பொறித்த குடைகளை ஏந்தி, பிரம்மாண்ட வரவேற்பளித்தனர்.

சரியாகப் பகல் 12:30 மணிக்கு, சன்னிதித் தெருவிற்கு வந்த முருகனின் யாத்திரை வாகனம், தொண்டர்கள் கூட்டத்தில் தத்தளித்தபடி அரை மணி நேரம் பயணித்து மேடை நோக்கிச் சென்றது. பின், மேடைக்கு வந்த பா.ஜ.க. தலைவர் முருகன், முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலர் கரு.நாகராஜன், திருவள்ளூர் மேற்கு மாவட்டப் பொதுச்செயலர் சீனிவாசன் உள்ளிட்டோர் வேல் யாத்திரை உரை நிகழ்த்தினர். 

தொடர்ந்து, வேலை ஏந்தியபடி, யாத்திரை மேற்கொள்ளத் தொடங்கிய, தலைவர்கள் உட்பட 500 பேரை, வடக்கு மண்டல இணைக் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின், ஐந்து தனியார் திருமண மண்டங்களில் அவர்களைத் தங்க வைத்தனர். 

யாத்திரைக்கான காரணத்தை முன்பே யோசிக்கத் தவறிய பா.ஜ.க. தலைவர்கள், கலந்து பேசி, ஒரு காரணத்தைக் கண்டறிந்திருக்கிறார்கள். அதைக் கட்சித் தலைவர் முருகன் கீழ்க்காணும் வகையில் அறிவித்திருக்கிறார். 

"இந்த யாத்திரை நடைபெறுவது அத்தியாவசியம். தி.மு.க., உட்பட யாரெல்லாம் ஹிந்து நடவடிக்கைகளுக்கு எதிரானவர்கள் என்பதைக் காட்டவும், அவர்களின் முகத்திரையைக் கிழிக்கவும் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. முருகனைப் போற்றும் கந்த சஷ்டிக் கவசத்தை, ஆபாசமாகச் சித்தரித்த கருப்பர் கூட்டத்தை யாரும் கண்டு கொள்ளவில்லை. பா.ஜ.க. போராடியதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். கருப்பர் கூட்டத்தினரை, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பதற்காகவே, இந்த வேல் யாத்திரை நடத்தப்படுகிறது[https://www.dinamalar.com/news_detail.asp?id=2648551]

'கந்த சஷ்டிக் கவசம் பாடல் பற்றி அவதூறாகக் கருத்து வெளியிட்ட கறுப்பர் கூட்டம் செந்தில்வாசனைக் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது செந்தில்வாசனும் குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளார்.'[https://tamil.oneindia.com/news/chennai/karuppar-kootam-senthilvasan-arrested-under-goondas-act-392634.html]

-வழங்கப்பட்ட இந்தத் தண்டனை பற்றி இவர்களுக்குத் தெரியாதா, அல்லது இதில் திருப்தி அடையவில்லையா?

கறுப்பர் கூட்டத்தைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தால்தான் தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்று இவர்கள் நினைக்கிறார்களோ?!?!?!
=====================================================================