அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 15 டிசம்பர், 2020

பத்தரைமாற்றுப் பகுத்தறிவாளன்!

உலக அளவில், ஆத்திகர்களைக் காட்டிலும் நாத்திகர்களின் எண்ணிக்கையே அதிகம் என்பது நம்மில் பலரும் அறிந்திடாத உண்மை['நாத்திகர்கள் சிறுபான்மையினர் அல்லர்' https://kadavulinkadavul.blogspot.com/2020/02/blog-post_12.html]. இந்தப் புண்ணிய பூமியில் மட்டும் அவர்களின் தொகை குறைவாகவே உள்ளது.

130 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இந்தியத் திருநாட்டில், 33,000 பேர் தங்களை நாத்திகர்கள் என்று பதிவு செய்துகொண்டிருக்கிறார்களாம். அவர்களுள்,  ஹரியாணாவின் 'டோஹானா' கிராமத்தைச் சேர்ந்த 33 வயதான ரவிக்குமார் என்பவரும் ஒருவர்.

தனது பெயரின் இறுதியில் நாத்திகர் என்று சேர்த்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரி உள்ளூர் நீதிமன்றத்தில் 2017 செப்டம்பரில் அவர் சட்டபூர்வ நடவடிக்கையை ஆரம்பித்தார்.

மூன்று மாதங்கள் கழித்து, 2018 ஜனவரி 2ஆம் தேதி, அவருக்கு ஆதரவாகச் சிவில் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அதிகாரப்பூர்வப் பதிவேடுகளில் ''ரவிக்குமார் நாத்திகர்'' என பதிவு செய்து கொள்வதற்கு அவருக்கு உரிமை உள்ளது என அவர் தீர்ப்பளித்தார்.

தன்னுடைய இரு கைகளிலும், 'நாத்திகன்'[Atheist]  என்று பச்சை குத்திக்கொண்டிருக்கும் பத்தரைமாற்றுப் பகுத்தறிவாளனான இவர். 'சாதி இல்லை, மதம் இல்லை, கடவுளும் இல்லை என்ற பிரிவைச் சார்ந்தவர்' என்று அரசு அதிகாரியிடம் சான்றிதழ் வாங்கினார்.

மேலதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கிணங்க, 'கடவுள் இல்லை' என்று சொல்லத் தனக்கு அருகதை இல்லை என்று சொல்லி, சான்றிதழ் வழங்கிய அதிகாரி அதைத் திருப்பித் தருமாறு எவ்வளவோ வற்புறுத்தியும் இவர் மறுத்துவிட்டாராம்.

இது தொடர்பான இன்னொரு வழக்கில், 'தன்னை ஒரு நாத்திகர் என கூறிக் கொள்வதற்கு ஒருவருக்கு உரிமை உள்ளது என்று அரசியல் சட்டத்தின் 25வது பிரிவு கூறுகிறது என்றும், அதற்கான சான்றிதழாகச் சட்டபூர்வ ஆவணம் எதுவும் தேவையில்லை' என்றும் நீதிபதி கூறியுள்ள நிலையில்.....

'மக்களுக்கு அரசாங்கம் சாதி அல்லது மதச் சான்றிதழ் வழங்குவதால், நான் நாத்திகர் என்று அடையாளம் காட்டும் சான்றிதழைப் பெறுவதற்கு எனக்கு உரிமை உள்ளது. நானும் இந்த நாட்டின் குடிமகன்தான்' என்று மேல்முறையீடு செய்து வாதாடிவருகிறார் ரவிக்குமார்.

''ஒவ்வோர் ஆண்டு தீபாவளியின் போதும் என் தந்தை லாட்டரிச் சீட்டு வாங்கி வந்து லட்சுமியிடம் வேண்டிக் கொள்வார். ஆனால் ஒருபோதும் பரிசு விழுந்தது கிடையாது. ஒரு நாள் நான்கு பையன்கள் என்னை அடித்தபோது, கடவுள் கிருஷ்ணரிடம் வேண்டிக்கொண்டேன். ஆனால் அவர் என்னைக் காப்பாற்றவில்லை" என்றிப்படி, தான் நாத்திகனாக ஆனதற்கான காரணங்களைப் பட்டியலிடுகிறார் இவர். 

கல்லூரிப் படிப்பைப் பாதியில் கைவிட்டு, வீடுகளுக்குப் பெயின்ட் அடிக்கும் வேலை செய்து வரும் ரவிக்குமார், ஜாதி மதம் சார்ந்து சான்றிதழ்கள் வழங்க்குவது போலவே, கடவுள் நம்பிக்கை அற்றவர்களுக்கு 'நாத்திகர்' என்று சான்றிதழ் வழங்குவதைச் சட்டபூர்வமாக்கி அரசு ஆணை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துவதோடு,  இந்த விசயத்தில் தனக்கு உதவுமாறு கோரி குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

ரவிக்குமாரின் குடும்பம் ஒடுக்கப்பட்ட பிரிவுச் சமூகத்தைச் சேர்ந்தது. ஆனால் அரசின் சலுகைகள் எதையும் கேட்பதில்லை என்று இவர் உறுதி எடுத்துக் கொண்டுள்ளார்.

மதத்திலிருந்து மக்கள் வெளியே வர வேண்டும் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார்.

''கடவுள் இருக்கிறார் என்பதை இதுவரை யாரும் நிரூபித்ததில்லை'' என்று உறுதிபடச் சொல்லும் ரவிக்குமார், ''கடவுள் கிடையாது. கடவுள் என்பது மனிதன் உருவாக்கிய விஷயம். கடவுள் என்பது வெறும் வார்த்தைதான். அப்படி எதுவும் கிடையாது'' என்கிறார்.

கடந்த 20 ஆண்டுகளாக எந்தக் கோவிலுக்கும் சென்றதில்லை என்று கூறும் இவர், கோவில்கள், மசூதிகள் மற்றும் இதர மத வழிபாட்டுத் தலங்களுக்காகச் செலவிடும் தொகையைப் பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகள் உருவாக்கச் செலவு செய்வது நல்லதாக இருக்கும்" என்று தொடர்ந்து பரப்புரை செய்கிறார்.

நாத்திகச் சிந்தனை உடையவராக இருந்ததால் பள்ளி, கல்லூரிக் காலங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளார். அந்தக் காரணத்தாலேயே வேலை வாய்ப்புகளையும் இழந்துள்ளார்.

பல நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இவருடைய தொடர்பைத் துண்டித்துக் கொண்டனர். 

கடவுள் மீது நம்பிக்கையில்லாததோடு, மத வழக்கத்தின்படி அல்லாமல் திருமணம் செய்துகொள்ள விரும்பும் தனக்குப் பெண் கொடுக்க எந்தக் குடும்பத்தினரும் முன்வராத காரணத்தால், இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லையாம் இவர்.

இத்தனை இன்னல்களுக்கிடையேயும் தான் கொண்ட கொள்கையிலிருந்து கிஞ்சித்தும் பிறழாத ரவிக்குமாரின் நெஞ்சுறுதி போற்றுதலுக்குரியதாகும்!

===============================================================

https://yarl.com/