'மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குப் புகழ்சேர்க்கும் வகையில் தஞ்சை மாநகர ஜெயலலிதா பேரவைத் துணைத்தலைவரும், தஞ்சை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான சுவாமிநாதன் மேலவீதியில் கோவில் கட்டி உள்ளார்.'
இது 2016ஆம் ஆண்டுச் செய்தி. [https://www.dailythanthi.com/Districts/Chennai/2016/12/14022336/She-built-a-temple-in-Tanjore-Digg-PersonalityShe.vpf]
“புரட்சித்தலைவி அம்மா ஆலயம்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோவிலில் ஜெயலலிதாவின் பொன்மொழிகளுள் ஒன்றான “மக்களால் நான்; மக்களுக்காக நான்” என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.
இந்தக் கோவிலில் 24 மணி நேரமும் ஜெயலலிதா நடித்த திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, கோவில் கட்டிய அ.தி.மு.க. பிரமுகர் சுவாமிநாதன் கூறுகையில், “ஜெயலலிதா மறைவு என்னை மிகவும் பாதித்தது. நான் 1990ஆம் ஆண்டில் இருந்து அ.தி.மு.க.வில் இருந்து வருகிறேன். 19ஆவது வார்டுச் செயலாளர், வட்டப் பிரதிநிதி ஆகிய பதவிகளிலும் இருந்துள்ளேன். தற்போது ஜெயலலிதா பேரவைத் துணைத்தலைவராகவும், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி, மாவட்டக் கூட்டுறவு அச்சகம் ஆகியவற்றின் இயக்குனராகவும் உள்ளேன். சாதாரணத் தொண்டனான எனக்கு ஜெயலலிதா பதவி கொடுத்து அழகு பார்த்தார். மேலும், ஜெயலலிதாவைச் சந்தித்தபோது, மக்களுக்குத் தொடர்ந்து நல்லது செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறினார். அந்த எண்ணம் தான் தற்போது அவருக்குக் கோவில் கட்ட வேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தியது" என்றார்.
இவர் அம்மையாருக்குக் கோயில் கட்டி, உயிர்களைப் படைத்துக் காத்துப் பராமரிக்கிற சக்தி வாய்ந்த தெய்வங்களின் வரிசையில் அவரைச் சேர்த்தது 2016ஆம் ஆண்டில்.
நடப்பில் உள்ளது 2020ஆம் ஆண்டு.
இப்போது, திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் ஜெயலலிதா பேரவை சார்பில் அவருக்குக் கோயில் கட்டும் பணி நடந்து வருகிறது.
இப்பணியை மேற்பார்வையிட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம், "அதிமுகவின் ஒன்றரைக் கோடித் தொண்டர்கள், ஜெயலலிதாவை அவர்கள் குடும்பத்துக் குல தெய்வமாகக் கருதி வழிபட்டு வருகிறார்கள். இந்தக் கோயிலில் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோாின் முழு உருவ வெண்கலச் சிலைகள் அமைக்கப்படும். அதுமட்டுமல்லாது, இந்தக் கோயிலில் அனைவரும் வழிபடும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயில் திருப்பணிகள் விரைவில் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது" என்று கூறியிருக்கிறார். https://www.hindutamil.in/news/tamilnadu/612619-temple-for-jayalalithaa.html
சுவாமிநாதன் ஜெயலலிதா சாமிக்குக் கோயில் கட்டியது தஞ்சையில். இப்போது அமைச்சர் உதயகுமார் மேற்பார்வையில் அதே சாமிக்கு மதுரை திருமங்கலத்தில் கோயில் கட்டப்படுகிறது.
அமைச்சர் அவர்களே,
"இருக்கிற சாமிகள் போதாதா? இந்த ஜெயலலிதா சாமி வேறயா?" என்று நாத்திகர்கள் நக்கல் செய்யக்கூடும். அதையெல்லாம் நீங்கள் பொருட்படுத்த வேண்டாம்.
எத்தனை எத்தனையோ சாமிகள் இருந்தும், இத்தனைக் காலமும் நம் மக்கள் பட்ட/படும் துன்பங்கள் தீர்ந்தபாடில்லை. அம்மா சாமியாகிவிட்டதால். அத்தனைத் துன்பங்களையும் அவர் தீர்த்து வைப்பார். மக்கள் எல்லா நலமும் பெற்றுச் சுகபோகமாக வாழ்வார்கள். ஆகையினால்.....
தஞ்சையிலும் திருமங்கலத்திலும் மட்டும் கோயில் இருப்பது போதாது. மாவட்டந்தோறும், முடிந்தால் தமிழ் நாட்டின் ஒவ்வொரு வட்டத்திலும் ஜெயலலிதா சாமிக்குக் கோயில் எழுப்புங்கள். உங்களுக்குக் கோடிப் புண்ணியம் கிட்டும்!
சாமியே சரணம்! ஜெயலலிதா சாமி சரணம்!!
===============================================================