"வரும்போதே உன் முதலாளி அம்மாகிட்ட ஆயிரம் ரூபா கொடுத்துட்டேன். ஒரு மணி நேரம் இருக்கலாம்னாங்க. அஞ்சு நிமிசம் இருக்கும்போதே முடிச்சுட்டுக் கிளம்பிட்டேன். இன்னும் எதுக்குப் பணம் கேட்குறே?" என்றான் அவன்.
"முதல் தடவையா என்கிட்டே வந்தீங்க. முழுத் திருப்தியோட உங்களை அனுப்பி வைக்கிறேனில்ல. டிப்ஸ் கொடுத்துட்டுப் போங்க" என்றாள் அவள்.
"ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் ரூபாயே அதிகம். இதுல, டிப்ஸ் வேறயா" என்று நக்கலடித்தான் அவன்.
"நீங்க கொடுத்த ஆயிரம் ரூபாய்ல, முதலாளி அம்மா பங்கு, புரோக்கர் கமிசன், காவல்துறை மாமூல்னு எல்லாம் கழிச்சா எனக்கு ஒரு இருநூறு ரூபா கிடைக்கும். இந்தப் பொல்லாத கொரோனா தொற்றால வருமானம் இப்போ குறைஞ்சி போச்சு. அன்றாடம் வயித்துப்பாட்டுக்கே திண்டாட்டமா இருக்கு. ஓட்டலுக்குச் சாப்பிடப் போனா சர்வருக்கு டிப்ஸ் தற்றதில்லையா, அது மாதிரிதான் இதுவும்" என்றாள் அந்த விலைமாது.
"நான் ஓட்டலுக்குப் போனா பில்லுக்கான பணத்தை மட்டும்தான் தருவேன். டிப்ஸ் எல்லாம் தர்றதில்ல."
"கோயிலுக்குப் போவீங்களா?"
"போவேன்."
"சாமிக்கு அர்ச்சனை பண்ணுற பழக்கம் உண்டா?"
"உண்டு."
"தீபாராதனைத் தட்டுல பணம் போடுவீங்களா?"
"போடுவேன்."
"ஏற்கனவே அர்ச்சனைக்குப் பணம் கட்டித்தான் அர்ச்சனைச் சீட்டு வாங்கியிருப்பீங்க. அப்புறம் தட்டுல அம்பது நூறுன்னு போடுறீங்களே, அது நீங்க ஐயருக்குத் தர்ற டிப்ஸ். தெரிஞ்சிக்கோங்க."
"அது டிப்ஸ் அல்ல, காணிக்கை."
"இப்படிச் சொல்லிச் சொல்லியே மக்களை நம்ப வெச்சுட்டாங்க. பணம் கட்டி அர்ச்சனை பண்ணுறீங்க. அதுக்கான பலன் கிடைக்குறது நிச்சயமில்ல. ஆனா, ஒரு விபச்சாரிகிட்ட கொடுக்குற பணத்துக்குச் சுகம் அனுபவிக்கிறது நிஜம். நிச்சயமில்லாத ஒன்னுக்குத் தர்ற மரியாதையை மனுசங்க நிஜத்துக்குத் தர்றதில்ல...
அந்த மனுசங்கள்ல நீங்களும் அடக்கம். அர்ச்சகர் கேட்காமலே, கணக்குப் பார்க்காம தட்டுல பணம் போடுற நீங்க, ஒரு விபச்சாரியான நான் பரிதாபமா கை நீட்டி டிப்ஸ் கொடுங்கன்னு கேட்டும் கொடுத்துப் பழக்கம் இல்லேன்னு சொல்லிட்டீங்க. பரவாயில்லை. போய்வாங்க."
ஒதுங்கி நின்று கைகூப்பினாள் அவள்.
"இது டிப்ஸ் அல்ல; ஒரு குருவாக இருந்து எனக்குப் பாடம் கற்பிச்சிருக்கே. அதுக்கான காணிக்கை" என்று சொல்லி இரண்டு ஐநூறு ரூபாய்த் தாள்களை அவளின் கையில் திணித்துவிட்டு வெளியேறினான் அவன்.