#ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்கள் அடங்கியுள்ளன. ஒரு நிமிடத்தில் 60 வினாடிகள் அடங்கியுள்ளன. இம்மியளவு நேரமான வினாடியை நாம் அலட்சியம் செய்கிறோம். அதை நாம் பொருட்படுத்துவதில்லை. வீணாக்குகிறோம்.
ஆனால் வினாடி, உயிர்த்துடிப்பு நிறைந்தது. வினாடிப் பொழுதில் உலகில் எத்தனையோ அதிசயங்கள் நடந்துவிடுகின்றன.
அந்த வினாடியையும் தற்போது விஞ்ஞானிகள் எத்தனையோ ஆயிரம் பிரிவுகளாகப் பிரித்திருக்கின்றனர். கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்குதான் தெரிந்திருந்தது.
நிமிடங்களையும், வினாடிகளையும் ஒரு பொருட்டாகக் கருதாத நாம், ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்குக்கு மதிப்புக் கொடுப்போமா? இருந்தபோதும், வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதைத் தெரிந்துகொள்வோம்.
ஆகாய விமானங்களும், மோட்டார்களும், ரெயில்களும், செல்போனும் இல்லாத காலத்துக்கு நாம் கற்பனை ரதத்தில் பயணம் செய்து பார்ப்போம்.
இந்தக் காலத்தில் நேரம் போவது தெரியவில்லை. அவ்வளவு வேகமாக வாழ்க்கை சுழல்கிறது. ஆனால் அந்தக் காலத்தில் நேரம் போவது ஒரு யுகமாகத் தோன்றியது. பண்டைய நாட்களில் நேரத்தைத் துல்லியமாகத் தெரிந்துகொள்வதற்கான அவசியம் இல்லை. அலுவலகம் அல்லது பள்ளிக்குச் செல்வதற்கு நேரமாகிவிட்டது என்று எச்சரிக்கை செய்வதற்குக் கடிகாரங்கள் பிறக்கவில்லை.
பண்டைக் காலத்து மக்கள் நேரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்காவிட்டாலும், நேரத்தை அறிந்துகொள்ள விரும்பினர். அவர்கள் நேரத்தை அறிவதற்குச் சில உபாயங்களையும், சாதனங்களையும் உபயோகப்படுத்தினர். சூரியக் கடிகாரங்கள், மணல் கடிகாரங்கள் போன்றவை அந்தக் காலத்து மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தன.
எனினும் இந்த இயற்கைக் கடிகாரங்கள், நிமிடங்களையோ, அவற்றின் பிரிவுகளாகிய வினாடிகளையோ தெரிவிக்கவில்லை. அவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டிய தேவையும் பண்டைக் காலத்து மக்களுக்கு ஏற்படவில்லை. நிமிட முள் 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், வினாடி முள் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பும்தான் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலத்தில் நாம் தெரிந்துகொண்ட, வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்தின் நுட்பங்களை அறிவோம். இவ்வளவு சிறிது நேரத்தில் என்ன நிகழ முடியும் என்ற அலட்சியமான எண்ணம் நமக்கு ஏற்படுவது இயற்கைதான். ஆனால் இந்த நுண்ணிய நேரத்தில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடைபெறும். சில உதாரணங்களைப் பார்ப்போம்.
வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு என்ற இம்மி நேரத்தில் ஒரு ரெயில் சுமார் 2 செ.மீ. தூரம் செல்லும். அதே நேரத்தில் ஒலி சுமார் 34 செ.மீ. தூரமும், விமானம் ஒன்றரை அடியும் செல்லும். சூரியனைப் பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது அல்லவா? அது தனது சுழலும் பாதையில் சுமார் 40 அடி பயணம் செய்திருக்கும். ஒளியைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அதன் வேகம் மிக அதிகம் என்பது நமக்குத் தெரியும். வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்தில் அது 300 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்திருக்கும்.
இன்னும் ஓர் உதாரணத்தை பார்க்கலாம். நம்மைச் சுற்றிலும் எண்ணற்ற உயிர்கள் உள்ளன. அவற்றுக்குச் சிந்திக்கும் திறன் இல்லை. எனினும் வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு அவற்றுக்கு முக்கியமாக இருக்கிறது. உதாரணமாக கொசுக்கள் இந்த நேரத்தில் 6 லட்சம் தடவை தமது சிறகுகளை அடித்துக்கொள்கின்றனவாம்.
நாம் பொதுவாக அறிந்த துரிதமான நேரம், `கண்ணிமைக்கும் நேரம்’ என்பதுதான். இது உண்மையில் ஒரு வினாடியில் ஆயிரத்தில் 400 பங்குதான்!#
=================================================================================
நன்றி: பதிவர் 'செந்தில்' https://senthilvayal.com/page/1215/