திருமணம் ஆனதிலிருந்து இணைபிரியாமல் வாழ்ந்த தம்பதிகள் இவர்கள்; அளப்பரிய அன்பினாலும் பாசத்தினாலும் பிணைக்கப்பட்டவர்கள்.
இவர்களைப் பிரிக்க 'கொரோனா' வடிவெடுத்துச் சதி செய்தது விதி.
கடந்த ஆண்டு இத்தாலியிலிருந்து இவர்களைப் பார்த்துப்போக வந்திருந்த மகன் மற்றும் அவரின் குடும்பத்தினரிடமிருந்து இவர்களுக்குப் பரவியது கொரோனா தொற்று.
கோட்டயத்திலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேறு வேறு வார்டுகளில் சேர்க்கப்பட்டார்கள் இவர்கள். இருவருக்குமே, சர்க்கரை மற்றும் இதய நோய்ப் பிரச்சினைகள் இருந்தன.
எதிர்பாராத வகையில், தாமஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதை எதிர்கொள்வது மருத்துவர்களுக்குப் பெரிய சவாலாக இருந்தது. மாரியம்மா தன் கணவனின் நிலையை எண்ணி அழுது புலம்ப ஆரம்பித்தார். படாத பாடு பட்டு அவரை மருத்துவர்கள் தேற்றினார்கள்.
இந்நிலையில், "திருமணம் ஆனதிலிருந்து நான் மாரியம்மாவைப் பிரிந்ததே இல்லை. இனியும் நாங்கள் ஒருவரையொருவர் பார்க்காமல் இருக்க முடியாது" என்று சொல்லிக் கண் கலங்கினார் தாமஸ்.
கலந்து ஆலோசித்த பின்னர், வெவ்வேறு வார்டுகளில் இருந்த இருவரையும் ஒரே தீவிரச் சிகிச்சைப் பிரிவில் தங்க வைத்தார்கள் மருத்துவர்கள். சில நாட்களில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அது.....
இருவரும் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.
இவர்களைக் குணப்படுத்தியது உளவியல் ரீதியான சிகிச்சை என்கிறார்கள் மருத்துவர்கள். ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த தூய்மையான அன்பும் கொஞ்சமும் குறையாத பாசமும் காரணங்களாயிருந்தன என்று சொன்னாலும் அது தவறல்ல.
இதனையும் இதனையொத்த சில நிகழ்வுகளையும் இணைத்து, 'கொரோனாவை வென்ற காதல் கதைகள்' என்று தலைப்பிட்டுச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது தினமணி.காம் https://www.dinamani.com/valentines-day/2021/feb/14/corona-days-and-love-stories-3562603.html -01.03.2021 [தினமணி நகல் எடுக்க அனுமதிப்பதில்லை. செய்தியை உள்வாங்கி உருவாக்கப்பட்டது இப்பதிவு].
தினமணி சொல்வது போல, இந்த மூத்த தம்பதியரை இணைத்தது காதலா?
93 வயது தாமஸையும் 88 வயது மாரியம்மாவையும் மிகப் பல ஆண்டுகள் பிரியவிடாமல் பிணைத்து வைத்திருந்ததும், கொரோனாவிலிருந்து குணப்படுத்தியதும் காமத்தின் மறுபதிப்பான காதலா?
காதலும் காமமும் ஒன்றா, வேறு வேறா என்பது முற்றுப் பெறாமல் நீண்டுகொண்டிருக்கும் விவாதமாகும். அதைப் புறக்கணித்து, 'தாமஸ்-மாரியம்மா தம்பதியரை மேலும் பல்லாண்டுகள் மனம் ஒன்றி இன்புற்று வாழ்ந்திட மனதார வாழ்த்தி மகிழ்வோம்.
தாமஸ்-மாரியம்மா தம்பதியர் வாழ்க! வாழ்கவே!!