புதன், 24 மார்ச், 2021

கூவுங்க கூவுங்க! ஓட்டுக்கு 'ரேட்' கேட்டுக் கூவுங்க வாக்காளர்களே!!

நம் 'உத்தமப் புத்திரர்'களான வாக்காளர்களுக்கு 'விழிப்புணர்வு' ஊட்டுதல் பொருட்டு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது எழுதிய பதிவு இது. எதிர்பார்த்த பலன் விளையவில்லை. 

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்குக் கணிசமான நாட்களே எஞ்சியுள்ளதால், வாக்காளப் பெருமக்களின் நலம் கருதி இதை மீள்பதிவாக வெளியிடுகிறேன்.

குத்தாட்டங்களுக்கும், அரசியல்வாதிகளின் வெத்துவேட்டுக் கூப்பாடுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, மக்களின் பொன்னான நேரத்தை வீணடிக்கும் ஊடகக்காரர்கள், பொதுமக்கள் அறியும் வகையில் இப்பதிவைப் பிரபலப்படுத்துவார்களேயானால், ஏழேழு பிறவிகளிலும் நான் அவர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருப்பேன்.

மீள்பதிவு.....

வாக்காளர்களே,

உங்களிடம் ஓட்டுக் கேட்க வரும் வேட்பாளர்கள் ஓட்டுக்குப் பணம் கொடுக்கவும் செய்வார்கள்[தேர்தலில் வெற்றிபெறும் நோக்கம் இன்றி வேறு காரணங்களுக்காகப் போட்டியிடுபவர்கள் இதற்கு விதிவிலக்கு].

வேட்பாளரின் பொருளாதாரம், அவர் சார்ந்துள்ள கட்சியின் பணபலம் போன்றவற்றிற்கேற்ப வாக்குக்கான தொகை மாறுபடக்கூடும்.

ஓட்டுக்குப் பணம் தருவது குற்றமாகும் என்று ஓவ்வொரு தேர்தலிலும் தேர்தல் ஆணையம் வெளியிடும் எச்சரிக்கையையும் மீறி,  ஓட்டுக்குப் பணம் தருவதும் பெறுவதும் நடைமுறையில் உள்ளது.


இது தேர்தல் ஆணையத்துக்குத் தெரியும். ஆட்சியாளர்களும் அறிவார்கள். ஆனால், தடுப்பதற்கான தீவிர நடவடிக்கை இல்லை. அவர்கள் கண்டும் காணாமல் இருப்பதற்கான காரணமும் புரியவில்லை.

இந்நிலையில்.....

ஓட்டுக்கான [லஞ்சத்]தொகையை ஆணையமே நிர்ணயம் செய்து, தேர்தல் நடைமுறை விதிகளில் இதையும் ஒன்றாக மாற்றியமைப்பதன் மூலம் தொடரும் இந்தக் குற்றத்தைக் குற்றமற்றதாக்கிவிடலாம்; எதிர்பார்த்துக் காத்திருந்தும், பணம் கிடைக்காமல், கணிசமானவர்கள் ஏமாந்து தவித்துக் கிடப்பதையும் தவிர்க்கலாம்.

போட்டியிடும் வேட்பாளரின் பொருளாதாரப் பின்புலத்தையும், அவர் சார்ந்துள்ள கட்சியின் நிதி இருப்பையும் கருத்தில்கொண்டு ஒட்டுக்கான கையூட்டுத் தொகையை நிர்ணயம் செய்யலாம்.

நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலேயே இதற்கான ஆணையை வெளியிட்டு நடமுறைப்படுத்துமாறு வாக்காளப் பெருமக்கள் ஆணையத்திடம் கோரிக்கை வைப்பது மிக மிக மிக முக்கியத் தேவையாகும்; கோரிக்கையை நிறைவேற்றுமாறு ஒருங்கிணைந்த ஓங்கிய குரலில் முழங்கலாம்.

நம் பெருமதிப்பிற்குரிய வாக்காளர்கள்.....

முழங்குவார்களா, 'நமக்கு வரவேண்டியது வந்தால் போதும்' என்று முடங்கிக் கிடப்பார்களா?!#

                                        *                       *                  *               *                *