அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 25 மார்ச், 2021

கடவுளைப் புறக்கணித்து, 'காமக்கலை' கற்பிக்கும் 'கோயில்கள்'!!!

காமம் அல்லது பாலியல் உறவுகள் தொடர்பான செய்திகள் குறுகிய காலத்தில் பிரபலமாகி ஊடகச் செய்திகளின் விற்பனைக்கும் அதனால் அவர்கள் இலாபம் ஈட்டுவதற்கும் மட்டுமே வழிவகுக்கின்றன. இதற்குக் காரணம், அச் செய்திகளின் பால் இருக்கும் கவர்ச்சித்தன்மையே. 

நமக்குள் புதைந்திருக்கும் அல்லது புதைக்கப்பட்ட காம மற்றும் பாலியல் மீதான ஆசைகளே இச் செய்திகளை நோக்கி நம்மை இழுக்கின்றன. 

உண்மையில், காமம் மற்றும் பாலியல் உறவுகள் தொடர்பானவையும் அடிப்படையில் ஒரு சமூகப் பிரச்சனையே. ஆனால் இது வெறும் தனிநபர் பிரச்சனையாக மட்டும் பார்க்கப்பட்டு உண்மையான சமூகப் பிரச்சனை முழுகடிக்கப்பட்டுவிடுகின்றது. 

சமூகம் ஒரு புறம் பிரச்சனைக்கான விதைகளை விதைத்துவிட்டு மறுபுறம் அதனால் ஏற்படும் விளைவுகளை மட்டுமே பிரச்சனையாப் பார்த்துத் தண்டனை அளிக்கிறது. விதைத்த விதைகளை வசதியாக மறந்துவிடுகிறது. இப்படித்தான் சமூகத்தின் பல பிரச்சனைகள் இருக்கின்றன. இது முரண்பாடானது மட்டுமல்ல, நியாயமற்றதுமாகும்.....

இந்தியாவிற்கான எனது முதல் பயணத்தில் முக்கியமானதாகச் சென்ற ஒரு இடம் கஜூராஹோ என்றழைக்கப்படும் இடத்திலிருக்கும் கோவில்கள் ஆகும். இது இந்தியாவின் வட கிழக்குப்பகுதியில் தாஜ்மாகால் இருக்கும் பிரதேசத்திற்குக் கீழே இருக்கிறது. ஜான்ஸி ராணியின் நினைவாக இருக்கும் ஜான்ஸி புகையிரத நிலையத்திலிருந்து பேருந்தில் பயணிக்கவேண்டும். 

இந்தக் கோவில்களில் உள்ள விசேசம் என்னவென்றால், இவற்றின் கர்ப்பகிரகத்திற்குள் அதாவது மூலஸ்தானங்களில் கடவுள்கள் இல்லை. வெறுமையான இடம் மட்டுமே இருக்கிறது. கோபுரத்தின் உச்சியிலிருக்கும் சிறுதுவாரத்தின் மூலம் வெளிச்சம் வருகிறது. இக் கோயில்களின் கோபுரங்களின் வெளிப்புறமாகப் பிற இந்து சைவ கோயில்களில் இருக்கும் கடவுள் சிலைகளுக்குப் பதிலாக நிர்வாணச் சிலைகளும் மற்றும் பாலியல் அல்லது காம இன்பத்தை அனுபவிக்கும் உறவுகளின் பல்வேறுவிதமான முறைகளும் அழகான சிலைகளாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. 

இதன் நேரிடையான அர்த்தம் என்னவெனில் காமத்தை அனுபவிக்காமல் மனிதர்கள் முக்தி பெற முடியாது என்பதே. இப்படிப் பல காரணங்களைக் கூறலாம். அடிப்படையில் மனிதர்கள் தமது காம அல்லது பாலியல் தேவையைப் பூர்த்தி செய்த பின்பே உயர் நிலையை அடைய முடியும் என்பதே உண்மை. இதற்கு, புத்தர் போன்று பலர் உதாரணங்களாக இருக்கின்றனர். 

குறிப்பாக, பிற மதக் கடவுகளின் வாழ்க்கை வரலாறுகளிலும் இவ்வாறன பகுதிகள் இருந்தன; பின்னர் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது புறக்கணிக்கப்பட்டுவிட்டன. பல ஆண்டுகளுக்கு முன்பு கஜூராவில் 1000 கோவில்கள் இருந்தன என வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. ஆனால் அரேபிய மற்றும் ஐரோப்பியப் படையெடுப்புகளாலும் மற்றும் இயற்கை அனர்த்தங்களாலும் இந்தக் கோயில்கள் அழிக்கப்பட்டு இன்று 10 கோவில்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. 

இந்திய வரலாறு, நமக்கு ஆணின் பார்வையில் அமைந்த காமசூத்திராவையும் பெண்ணின் பார்வையில் அமைந்த தந்திராவையும் தந்திருக்கிறது. சீனாவிலும் காம சாஸ்திர நூல்கள் உள்ளன. இவற்றில் எல்லாம் காம சக்தியைப் பெறும் முறைகளும், பல்வேறுவிதமான உறவு முறைகளும், உறவு நிலைகளும் விளக்கப்பட்டுள்ளன. இவ்வாறான வரலாறு கொண்ட இந்தியப் பிரதேசத்தில்தான் இன்று காமம் மற்றும் பாலியல் உறவுகளுக்கு எதிரான கட்டுப்பாடுகள் பிற நாடுகளைவிடவும் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்தக் கட்டுப்பாடுகளில் குறிப்பாக, பெண்களுக்கு எதிரான போக்கு மிக அதிகமாகவும் நுண்மையாகவும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

ஒரு புறம் பெண்களை அடக்கி ஒடுக்கும் சமூகம் மறுபுறத்தில் சமய நம்பிக்கைகளின் அடிப்படையில் ஆண்களையும் அவர்களது காமத்தையும் கட்டிப்போடுகிறது. 

பிரம்மச்சரியம் என்பது அதியுயர் மனித நிலையாக, அனைத்து மதங்களாலும் போற்றப்பட்டுவருகிறது. இதானால் பல பெற்றோர் குழந்தைகளை, குறிப்பாக ஆண் குழந்தைகளைச் சிறுவயதிலையே சமய நிறுவனங்களில் அல்லது மடங்களில் சேர்த்து அவர்களைத் துறவிகளாக்கிவிடுகின்றனர். 

இவ்வாறு செய்வது சிறுவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களாகப பார்க்கப்படுவதில்லை. 

குழந்தைப் பருவத்திலிருந்தே பிரம்மச்சரியம் நோக்கி மத வழியில் வளர்க்கப்பட்டு, வாலிப வயதில் தமது காம உணர்வினால் உந்தப்பட்டு, பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாமல் அவதிப்படுகின்ற பலரை நமது சமூகங்களில் சாதாரணமாகக் காணலாம். 

இவ்வாறானவர்கள் வாய்ப்புகள் கிடைத்தால் துறவற வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, சதாரண வாழ்க்கைக்கு வந்துவிடுகின்றனர். முடியாதவர்கள் மறைவாகப் பாலியலுறவுகளில் ஈடுபடுகின்றனர்.  இதற்கான உதாரண நிகழ்வுகள, அனைத்து மத நிறுவனங்களிலும்  இடம்பெறுவதைக் காலம் காலமாகக் காண முடிகிறது.

[நீட்சியைத் தவிர்க்க, கட்டுரை சுருக்கப்பட்டது]

======================================================================================

நன்றி: மீரா பாரதி

https://meerabharathy.wordpress.com/2010/08/10