சனி, 27 மார்ச், 2021

'அப்பா பைத்தியம்' இங்கே! 'அம்மா பைத்தியம்' எங்கே...எங்கே?!?!

அப்பா பைத்தியமோ, அம்மா பைத்தியமோ பைத்தியத்துக்கு ஒரு கோயிலா என்று நினைத்து நீங்கள்  மண்டை காய வேண்டாம். 'அம்மையே அப்பா ஒப்பிலா மணியே'ன்னு மாணிக்கவாசகர் பாடினார் இல்லையா, அந்த அப்பா மீது அளப்பரிய பக்தி கொண்டிருந்த காரணத்தால் இவர் 'அப்பா பைத்தியம்' என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்பது அடியேனின் யூகம். ஹி...ஹி...ஹி...

'ஒரு காலத்தில் முருகப் பக்தராக இருந்த என். ரங்கசாமி கடந்த 90ஆம் ஆண்டு அப்பா பைத்தியம் சாமிகளைச் சந்தித்தார். அதன்பின் அவரது தீவிரப் பக்தராக மாறினார்[முருகன் கோபிக்க மாட்டாரோ?]. முக்கிய முடிவுகளுக்கு முன் சேலம் சூரமங்கலத்தில் உள்ள 'அப்பா பைத்தியம்' கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு முக்கிய முடிவு எடுப்பார். வீட்டில் உள்ள அவரது படத்தைக் கும்பிடாமல் எங்கேயும் புறப்படமாட்டார்[நம் முதல்வர் அய்யா, சட்டைப் பையில் அம்மா படம் வைத்திருக்கிற மாதிரி, அப்பா பைத்தியம் படத்தை இவர் தன் சட்டைப் பையில்  வைத்துக்கொள்ளலாம்]' என்பது செய்தி.

புதுச்சேரி முதல்வராவதற்கு அப்பா பைத்தியம் சாமிகள்தான் காரணம் என்பது இவரது அசைக்க முடியாத நம்பிக்கையாம். போன தேர்தலில் தோற்றுப்போனாரே, அந்தத் தோல்விக்கும் இந்த அப்பா பைத்தியத்திற்கும் சம்பந்தம் இல்லையென்று ரங்ஸ் நினைக்கிறாரோ? இந்தச் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் முன்பாக சேலம் வந்த என். ரங்கசாமி யாருடன் கூட்டணி அமைப்பது என்று குறி கேட்டு விட்டுச் சென்றாராம்.

புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் பாஜக வுடன் கூட்டணி அமைத்துள்ளார் ரங்கசாமி. இன்றைய தினம் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் 16 பேர், அதிமுக வேட்பாளர்கள் 5 பேர் பாஜக வேட்பாளர்கள் 9 என மொத்தம் 30 வேட்பாளர் பட்டியலை அப்பா பைத்தியம் சிலை முன்பாக வைத்து வணங்கினாராம்.

வணங்கிய கையோடு, எத்தனை பேர் ஜெயிப்பாங்க, யார் யாரெல்லாம்  மண்ணைக் கவ்வுவாங்கன்னு கேட்டிருந்தா அப்பா பைத்தியம் சாமி சொல்லியிருக்கும். 

அதோட, ஜெயிச்சி ஆட்சி அமைச்சதுக்கப்புறம், "பா.ஜ.க.காரங்க எப்போ கூட இருந்தே குழி பறிப்பாங்க?" என்றும் அப்பா பைத்தியத்துகிட்டே கேட்டிருக்கலாம். கேட்டாரா ரங்கசாமி?

வேட்பாளர்கள் அனைவரின் ஜாதகங்களை மூலவரின் பாதத்தில் வைத்துத் தரிசனம் செய்தார். மூலவரின் வாயில் சுருட்டு வைத்து, காதுகளில் பேசி உத்தரவு வாங்கினார்[இதைச் 'சுருட்டுச் சாமி'ன்னும் சொல்லாம்]. மூலவர் சன்னதியில் 1-30 மணி முதல் 2-30 மணி வரை தியானத்தில் ஈடுபட்ட அவர் கோவிலை வலம் வந்து கையில் சில காகிதங்களுடன் காரில் புறப்பட்டார் என்கிறது செய்தி.

"வாயில் சுருட்டு வைத்தால்தான் சுருட்டுச் சாமி காதுகொடுத்துக் கேட்குமா? உத்தரவு கொடுக்குமா?" என்று யாரும் கேட்டுவிட வேண்டாம். அப்படிக் கேட்ட பலரின் நுனி நாக்கை, அப்பா பைத்தியம் சாமி சுருட்டால் சுட்டுக் கருக்கிவிட்டதைச் சேலம் சூரமங்கலம் மக்கள் கதை கதையாய்ச் சொல்லுகிறார்கள்.

செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, "புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 100 சதவிகித வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அந்த வெற்றிக்கு, சாமியிடம் வேண்டுகோள் வைத்தேன். வெற்றி பெற்றதும் மீண்டும் வந்து தரிசனம் செய்வேன்" என்றாராம். வெறும் தரிசனம் போதாதே, அப்பா பைத்தியத்துக்குத் தங்கக் கிரீடம் சூட்டுவேன்; உடம்புக்குத் தங்க முலாம் பூசுவேன் என்றெல்லாம் சொல்லியிருக்கலாம்.

கடந்த 90ஆம் ஆண்டு, முதல் முறையாக தட்டாஞ்சாவடித் தொகுதியில் போட்டியிட்டு ரங்கசாமி தோல்வி அடைந்தார். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த அப்பா பைத்தியம் சாமியார் புதுச்சேரி வந்திருந்தார். அவரை முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் சந்தித்து ஆசி பெற்றார்கள். அப்போது ரங்கசாமியும் சந்தித்தார். அவரைப் பார்த்த சாமியார், 'ஓராண்டில் அமைச்சராவாய்' என்றாராம்.

91ஆம் ஆண்டு திமுக-ஜனதாதளம் ஆட்சி கவிழ்ந்து தேர்தல் நடைபெற்றது. மீண்டும் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்ட ரங்கசாமி, வெற்றிபெற்றுக் கூட்டுறவு அமைச்சரானார். அன்று முதல் 'அப்பா பைத்தியம்' சாமியின் பக்தரானார். கடந்த 2000ஆம் ஆண்டு சாமிகள் ஜீவசமாதி அடைந்தார். அதன் பின்னர் சேலம் சூரமங்கலத்திலுள்ள அவரது சமாதிக்குச் செல்லத் தொடங்கினார். சிலை முன்பு அமர்ந்து உத்தரவு பெற்ற பிறகே அனைத்துக் காரியங்களையும் செய்வார். சேலம் அடிக்கடி செல்ல முடியாததால் புதுச்சேரி வீமக்கவுண்டன்பாளையத்தில் கோயில் கட்டியுள்ளார்.

நாமக்கல்காரங்க 'அப்பா பைத்தியம்' சாமிக்குக் கோயில் கட்டத் திட்டமிட்டிருக்காங்க. அதுக்கு முன்னாடி ரங்கசாமி வெற்றி பெற்று, அப்பா பைத்தியம் சக்தியுள்ள சாமிதான்னு நிரூபணம் ஆகணுமாம். 

எங்க ஊர்க்காரங்க ரொம்பவே புத்திசாலிங்க!

======================================================================================

* 'பக்தர்களிடம் தன்னைப் பைத்தியம் என்று இவர் கூறிக்கொண்டமையால் பைத்திய சாமி என்றும், பக்தர்களின் கோரிக்கைகளைத் தந்தைபோல இருந்து நிறைவேற்றியதால் அப்பா பைத்தியம் சாமிகள் என்றும் அழைக்கப்பட்டார். எண்ணற்ற ஊரில் தங்கி, பக்தர்களுக்கு உதவிய இவர் சேலம் சூரமங்கலத்தில் 141வது வயதில் தை 28 2000 த்தில் ஜீவ சமாதி அடைந்தார்'--விக்கிப்பீடியா