அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 3 மார்ச், 2021

ஒரு சந்தர்ப்பவாதியின் 'சாமி' பக்தி!!!


நான் ஒரு சந்தர்ப்பவாதிங்க. பக்தி விசயத்திலும் அப்படித்தான்.

என் பக்தியைப் பத்தி ஒளிவுமறைவில்லாம உங்களுடன் பகிரத்தான் இந்தப் பதிவு. ரொம்பக் கவனமா படியுங்க.

சாமி கும்புடுறவங்க, "என்னையும் என் குடும்பத்தாரையும்  நோய் நொடி இல்லாம காப்பாத்து”ன்னுதான் வேண்டிக்கிறாங்களே தவிர, “ஊர் உலகத்தில் உள்ள அத்தனை பேரையும் நீ காப்பாத்தணும்”னு யாராவது வேண்டிக்கிறாங்களா? இல்லை. அவங்கள மாதிரித்தான் நானும்.

"என் குறையை நிவர்த்தி பண்ணினா, இதைச் செய்யுறேன், அதைச் செய்யுறேன்னு நேர்ந்துக்கிறவங்க நிறையப்பேர். அவங்கெல்லாம் சொன்னபடி நடந்துக்கிறாங்களான்னா, இல்லேன்னுதான் சொல்லணும். 

ஒரு சில இளிச்சவாயர்களைத் தவிர, மிச்சப்பேரெல்லாம் கோரிக்கை நிறைவேறின அப்புறம்தான் ‘நேர்த்திக் கடனை’ச் செலுத்துறாங்க. "அடுத்த வாரம் செய்யுறேன்... அடுத்த மாசம் செய்யுறேன்”னு தவணை சொல்லிட்டே வந்து சாமிக்கே ‘அல்வா’ கொடுக்கிறவங்களும் இருக்காங்க. நான் நேர்ந்துகிட்ட சாமிகளுக்கெல்லாம் ஒரு 'அண்டா' நிறைய 'அல்வா' கொடுத்திருக்கேன். எந்தச் சாமியும் என்னைத் தண்டிச்சதில்ல.

“இந்தக் குறையை நிவர்த்தி பண்ணிக் குடுத்தீன்னா, உனக்குக் கிடா வெட்டிப் பொங்கல் வைக்கிறேன்”, "உண்டியலில் பணம் போடுறேன்”, "மொட்டை போடுறேன்”னு நேர்ந்துக்கிறதெல்லாம் சாமி காதுல பூ வைக்கிற வேலைங்க.

நாம தர்ற கறி விருந்தைச் சாமி பந்தியில் உட்கார்ந்து சாப்பிடுதா? உண்டியலில் போடுற பணத்தை எடுத்துச் செலவு பண்ணுதா? காணிக்கையா தர்ற தலைமுடியை வித்துக் காசு பண்ணுதா? இல்லையே! எல்லார்த்தையும் மனுஷங்கதானே முழுங்கி ஏப்பம் போடுறாங்க. அப்புறம் எதுக்கு  இந்த மாதிரி நேர்த்திக்கடன் எல்லாம்?

பொதுவா, சாமிகிட்டே பேரம் பேசுறதே எனக்குக் கொஞ்சமும் பிடிக்காத விசயம். ஒரு பிரச்சினைன்னா, கோயிலுக்குப் போயி, சூடம் பொருத்திக் கும்பிடுவேன் அவ்வளவுதான். ஒரு கற்பூரக் கட்டியை வாங்கி உடைச்செடுத்து ஒரு சிறு துண்டை மட்டும்தான் பத்தவைப்பேன். மிச்சத் துண்டுகளைப் பத்திரப்படுத்தி வைப்பேன். "ஏண்டா இப்படிக் கஞ்சத்தனம் பண்றே?"ன்னு சாமி கேட்டதில்லீங்க.

வேண்டுதல் மூலமா என் கஷ்டம் தீர்ந்துதுன்னு வெச்சுக்கோங்க, அஞ்சோ பத்தோ உண்டியலில் போடுவேன். கையில் சில்லரைக் காசு இருந்தா ரெண்டு ரூபாயோ ஒரு ரூபாயோ போடுறதும் உண்டு, பிச்சைக்காரங்களுக்குப் போடுற மாதிரி. 

கடவுளும் பிச்சைக்காரங்களும் ஒன்னுதாங்க. நம்மோட இரக்கக் குணத்தைச் சோதிக்கத்தாங்க கடவுள் பிச்சைக்காரர் உருவத்தில் நடமாடுறாரு!

கோரிக்கை வைத்தும் சாமி கண் திறக்கலேன்னா என்ன செய்வேன் தெரியுங்களா?

நம்ப மாட்டீங்க, “நீயெல்லாம் ஒரு சாமியா? போயும் போயும் உன்கிட்டயா வேண்டுதல் வெச்சேன்”னு வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்துடுவேன்.

திட்டுனா சாமி கோவிச்சுக்குமேங்கிற பயமெல்லாம் எனக்கு இல்லீங்க. தன்னைத் திட்டுறதையே தொழிலா வெச்சிருக்கிற நாத்திகர்களையே அது தண்டிக்கிறதில்ல. அப்பிராணியான என்னையா தண்டிக்கும்?

ஒரு சாமிகிட்ட ஒரு தடவைதான் கோரிக்கை வைப்பேன். அப்புறமும் கஷ்டம் வந்தா வேற சாமியைத் தேடிப் போயிடுவேன். ஊர் உலகத்தில் சாமிகளுக்கா பஞ்சம்?

சந்தர்ப்பவாதின்னு திட்டுறீங்களா? 

நீங்க எப்படியோ, மனுசங்கள்ல லட்சத்துல தொண்ணூத்தொன்பதாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூத்தி ஒன்பது பேர் சந்தர்ப்பவாதிகள்னு நம்புறவன் நான்.

இந்தப் பதிவைப் படிச்சுட்டிருக்கிற நீங்க எப்படிப்பட்டவர்னு எனக்குத் தெரியாது. ஆனா, நம்ம மக்களைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். சாமி நல்லது செய்யலேன்னாலும் என்னைப் போல அதைத் திட்டுற கெட்ட குணம் அவங்களுக்குக் கொஞ்சமும் இல்ல. காரணம், திட்டுனா அது தங்களைக் கெடுத்துடும்கிற பயம்தான். 

மக்கள் மனசுல இந்தப் பயம் இருக்கிறவரை 'அவங்க' காட்டுல மாதம் மும்மாரி(மழை)தான்!

"யார் அந்த 'அவங்க'ன்னு கேட்குறீங்களா?

நான் அவங்கன்னு சொன்னது சாமிகளை அல்லங்க; சாமிகளை வைத்துப் பிழைப்பு நடத்துறவங்களை மட்டும்தான்!
======================================================================================