சனி, 6 மார்ச், 2021

நிர்வாண அகோரிகள்... நினைவில் நிற்கும் சில ஆச்சரியத் தகவல்கள்!!!


உடலில் ஆடைகள் இல்லாமல், நீண்ட தலை முடியுடன் முகத்திலும மார்பிலும் முடிகள் இல்லாமல்[?! இருப்பவர்கள் அகோரிகள். தலைப் பகுதி தவிர பிற இடங்களில் இவர்களுக்கு முடிகள் இருக்காது. 

நிர்வாணமாகவே இருப்பார்கள்[சிலர் கோமணத்துடன்]; பயணிப்பார்கள். ஆசை, பாசம், பற்று என்று அனைத்தையும் துறந்துவிட்டதை வெளிப்படுத்தும் கோலம் இது.

இவர்களை இக்கோலம் பூணத் தூண்டியது எந்தச் சக்தி என்று தெரியவில்லை. தங்கள் அர்ப்பணிப்பு உணர்வால் இவர்கள் செய்யும் தியாகமும், வைராக்கியமும் அலாதியானது. தங்கள் குழுக்களில் பிறரைச் சுலபமாகச் சேர்க்க மாட்டார்கள். இவர்களின் தலைவர், பதவி ஏற்கும் முறை விசித்திரமானது. புதிய தலைவரை வணங்கிவிட்டு, பழைய தலைவர் தன்னை மாய்த்துக்கொள்ளுவார்!

இவர்களில், ஆண் பெண் என இருபால் இனத்தவரும் உண்டு. 

நிர்வாணமாக இருந்தாலும் பெண் அகோரிகளை அடையாளம் காண்பது இயலாது. பாதம்வரை நீண்டு தொங்கும் தலைமுடியுடன், உடல் முழுதும் சாம்பலையோ மண்ணையோ பூசிக்கொள்வது காரணமாக இருக்கலாம். இவர்களிடமிருந்து[ஆண் அகோரிகள் உட்பட] நறுமணமோ கெட்ட நாற்றமோ வெளிப்படுவதில்லை. 

மலைகளிலுள்ள அடர்ந்த வனங்கள் இவர்களின் வசிப்பிடம் ஆகும். குழுக்களாக ஒரு குருவுடன் வாழ்வது இவர்களின் வழக்கம்.

ஓர் ஊருக்குச் சென்றால் தங்குமிடங்களை நாம் தேடுவோம். இவர்கள் தேடுவதோ மயானம். மயானத்தில் தியானம் செய்வார்கள்; எரியும் உடல் மேல் அமர்ந்தும் தியானிப்பார்கள். ஆனால் மனித உடலை உண்ணமாட்டார்கள். 

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளாவிற்கு வந்து கூடுவார்கள். இமாலய வனத்திலிருந்து நடந்தே அலாகாபாத் எனும் இடத்திற்கு வருவார்கள்; மீண்டும் நடந்தே சென்றுவிடுவார்கள். 

வாகனத்தைப் பயன்படுத்த மாட்டார்கள். ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் பொழுது கட்டுகோப்பாக வரிசையில் செல்வார்கள். வரிசையின் முன்னாலும், பின்னாலும் இருக்கும் அகோரிகள் பாதுகாப்பு அரணாக இருப்பார்கள். 

இவர்கள் பிறருடன் பேசுவது குறைவு. தங்களுக்குள்ளும் அதிகம் பேசிக்கொள்ள மாட்டார்கள். 

குழுவாக வட்டவடிவில் அமர்ந்துகொண்டு மூலிகையைப் புகைப்பார்கள். இம்மூலிகை கஞ்சா என்று பிறர் எண்ணுகிறார்கள். கும்பமேளாவில் கஞ்சா எல்லா இடங்களிலும் கிடைக்கும்; சிலர் இலவசமாகப் பிறருக்கு வழங்குவார்கள். 

ஆனால் இவர்களிடமோ யாரும் கொடுக்க மாட்டார்கள், இவர்களும் வாங்க மாட்டார்கள். தாங்கள் இருக்கும் வனத்திலிருந்து சில மூலிகைகளைக் கொண்டு வருவார்கள். வட்டமாக உட்கார்ந்திருக்கும் இவர்கள் வட்டத்தின் மையத்தில் அந்த மூலிகையை வைத்து வழிபாடு செய்தபின் புகைப்பார்கள். மூலிகைக் குழாயில் வைத்து ஒரு முறை மட்டுமே உள்ளே இழுப்பார்கள். பிறகு அடுத்தவருக்குக் கொடுப்பார்கள். இப்படியாகக் குழுவெங்கும்  புகைக்குழாய் வட்டமடிக்கும்.

ரிஷிகேசத்திலும், கும்ப மேளாவிலும் எத்தனை டிகிரி செண்டிகிரேட் குளிராக இருந்தாலும் நிர்வாணமாக உட்கார்ந்து தியானம் செய்வார்கள். இப்படிப்பட்ட யோகிகளைப் புரிந்துகொள்வது கடினம். இமாலய மலைப் பகுதி(யமுனோத்தரி, கங்கோத்தரி மற்றும் நேப்பாளம்) இவர்களின் முக்கிய வாழும் இடமாக இருக்கிறது. கும்பமேளா தவிர பிற காலங்களில் இவர்கள் குழுவாக வெளியே வலம் வருவதில்லை. குழுவிலிருந்து தனியே சில பணிகளுக்காகச் செல்லும் அகோரிகள் தங்கும் இடம் மயானம்தான். எந்த ஊருக்குச் சென்றாலும் நாம் விடுதிகளைத் தேடுவது போல இவர்கள் மயானங்களைத் தேடுவார்கள்..

கும்பமேளா என்பது ஒரு சிறப்பு மிக்க நிகழ்வு. பூமியில் வேறு எந்தப் பகுதியிலும் நிகழாத வண்ணம் அதிக மக்கள் கூடும் ஒரே விழா கும்பமேளா. 2007ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவில் ஒரு கோடிக்கும் மேலாக மக்கள் கலந்துகொண்டார்களாம். 

காசி நகரம் ஆன்மீக நாட்டம் கொண்டவர்களின் சரணாலயம். ஊருக்கு ஒரு மயானம் இருப்பது போல உலகிற்கே ஒரு மயானம் என்றால் அது காசிதான். தினமும் சராசரியாக எழுநூறு முதல் ஆயிரம் பிணங்கள் இங்கே எரிக்கப்படுகின்றன. சன்னியாசிகள், யோகிகள், தாந்திரீகர்கள், மாந்திரீகம் செய்பவர்கள் என அங்கே கூட்டம் அதிகம். 

மேலைநாட்டுகாரர்கள், இந்தியாவில் நரமாமிசம் சாப்பிடும் மாந்திரீகர்களைப் படம் பிடித்து அவர்களை நாகசன்யாசிகள், அகோரிகள் எனக் கூறுவது வருந்தத்தக்கது. அகோரிகளுக்கு உணவுத் தேவை என்பதே இல்லை. சில மூலிகைகளை உணவாகக் கொண்டு பசியற்ற நிலையில் இருக்கிறார்கள். உடலில் எந்தவித மதச் சின்னங்களோ அடையாளமோ இருக்காது. ருத்திராட்சம், சங்கு, ஆயுதம் ஆகிய இவற்றில் ஏதாவது ஒன்று கைகளில் வைத்திருப்பார்கள். ஆபரணம், மோதிரம் அணியமாட்டார்கள். 

======================================================================================

'குருஸ்ரீ பகோரா' வின் கட்டுரையைச் சுருக்கி, சற்றே மாற்றியமைக்கப்பட்ட வடிவமைப்புடன்  வெளியிட்டுள்ளேன்.

https://naavaapalanigotrust.com/index.php/2019-05-17-03-12-29