ஞாயிறு, 7 மார்ச், 2021

'போனி' ஆகாத 'யோனிப் பொருத்தம்'!!!

அமேசான் கிண்டிலின் 2020ஆம் ஆண்டின் எழுத்தாளர்களுக்கான போட்டியில்[pentopublish4], குறும்படைப்புகள்[Short Form] பிரிவில், முதல் பரிசு ரூ50,000ஐ வென்றே தீருவது என்னும் வைராக்கியத்துடன், 'யோனிப் பொருத்தம்' என்னும் தலைப்பில், நான் குறுநாவல் வெளியிட்டிருப்பதை   அறிந்திருப்பீர்கள்.

ஒரு படைப்பு பரிசு பெறுவதற்கான முக்கியத்  தகுதிகள் சிலவற்றை அமேசான் நிர்ணயித்திருக்கிறது.

அதிக எண்ணிக்கையில் நூல் விற்பனை ஆக வேண்டும் என்பது முக்கியத் தகுதிகளில் ஒன்று. அதாவது, போட்டியில் பங்கு பெற்றுள்ள நூலைப் பணம் கொடுத்து வாங்குவதற்கு ஆட்கள் தேவை. 

என் நூலின்[யோனிப் பொருத்தம்] விலை 72 ரூபாய். குறைந்தபட்ச விலைதான். நூலைப் போட்டிக்கு அனுப்பி 11 நாட்கள் ஆகிவிட்டன. விற்பன?

ஹி...ஹி...ஹி... ஒரு பிரதிகூட விற்கவில்லை!

அமேசானில் புழங்குகிறவர்கள் பெரும்பாலும் இளவட்டங்கள்தான். அவர்கள் காதல், காமம், கலவி என்று அலைகிற வர்க்கம்தானே என்று நம்பி 'யோனிப் பொருத்தம்' என்று ஆர்வத்தைத் தூண்டுகிற வகையில் தலைப்பைத் தேர்ந்தெடுத்தது தவறு என்றாகிவிட்டது[இது ஒன்றும் ஆபாச வழக்கல்ல; சோதிடர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் சர்வ சாதாரணமாகப் பகிரப்படுகிற ஒன்றுதான்].

'சராசரிகள்', 'சேர்ந்து வாழ்தல்-Living Together' போன்றவை நான் கொடுக்க நினைத்த தலைப்புகள். கடந்த காலப் போட்டிகளுக்கு, கடவுள் தத்துவம், மூடநம்பிக்கை பற்றியெல்லாம் எழுதப்போய், படுதோல்வியைத் தழுவியது தனிக்கதை. 

"அமேசான் போட்டியில் இடம்பெறும் படைப்புகள் எல்லாமே வெறும் குப்பைகள். காசு கொடுத்து நண்பர்களை வாங்கச் செய்தும், பாராட்டுரை எழுத வைத்தும் பரிசு பெறுகிறார்கள்" என்று கடந்த ஆண்டே எழுத்தாளர் ஜெயமோகன் முன்வைத்த குற்றச்சாட்டு நினைவுக்கு வரவே, நானும் அதே தந்திரத்தைக் கையாள நினைத்தேன். 

பதிவுலகில் யாரெல்லாம் எனக்கு நண்பர்கள்னு ஒரு பட்டியல் தயார் பண்ண நினைத்தபோதுதான் அப்படி யாருமே இல்லேன்னு தெரிந்தது. கருத்துப் பெட்டியை இறுக்கிப் பூட்டி வெச்சிருக்கிற[காரணம், எனக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம்] எனக்கு எப்படி நண்பர்கள் வாய்ப்பாங்கன்னு அப்புறம்தான் புரிந்தது.

பதிவர் கில்லர்ஜி தளத்துக்கு மட்டும் பின்னூட்டம் போடுவதற்குப் போவதுண்டு. அவர்கிட்டே நூல் வாங்கச் சொல்லலாம்னு நினைத்தபோது, கிண்டிலில் நூல் வெளியிடுகிற அவரும் போட்டிக்கு எதையும் அனுப்பிட்டு, என்னை மாதிரி அல்லாடுகிறாரோ என்கிற சந்தேகத்தில் இந்தத் திட்டத்தையும் கைகழுவினேன்.

என் மகன் பெங்களூருவில் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை செய்யுறவன். அமேசானில் பொருள்கள் வாங்குற பழக்கம் உண்டு[இப்படிப் பொருள் வாங்குறவங்கதான் மதிப்புரை எழுத முடியும்; நட்சத்திரத் தர மதிப்பீடு வழங்க முடியும். இவையும் நூலின் மதிப்பை உயர்த்துவதற்கான வழிமுறைகள்]. 

"என் 'யோனிப் பொருத்தம்' புத்தகத்தை ரெண்டோ நாலோ வாங்குடா"ன்னு சொல்லப் போய் வாங்கிக் கட்டிகிட்டேன். யோனி கீனின்னு தலைப்புக் கொடுத்திருக்கீங்க. வயசான காலத்தில் உங்களுக்குப் புத்தி பேதலிச்சுப் போச்சான்னு திட்ட ஆரம்பிச்சுட்டான்[புத்தகத்தில் ஆணும் பெண்ணும் இணை சேர்வதற்கான பொருத்தம் பற்றித்தான் எழுதியிருக்கேன். யோனி பத்தி எதுவுமே எழுதலேன்னு சொன்னா காது கொடுத்துக் கேட்கவா போறான்னு இருந்துட்டேன்]. அவனைச் சமாதானம் பண்றதுக்கு நான் பட்ட பாடு கொஞ்சநஞ்சமில்ல.

பணம் செலவு பண்ணிப் புத்தகம் வாங்கத்தான் ஆளில்லை; பாராட்டி மதிப்புரை எழுதவும் நட்சத்திர மதிப்பு வழங்கவும் நாதியில்லை. 24 பக்க நூலில் அஞ்சு பக்கம் பத்து பக்கம்னு ஆளாளுக்குப் படிச்சாக்கூட  நூலின் 'தேர்வுக்கான தகுதி' கொஞ்சம் உயரும். ஒட்டுமொத்த மானமும் கப்பலேறாம தப்பிக்கலாம்னு நினைச்சா, அந்தக் குறைந்தபட்ச ஆசையும் நிறைவேறல.

கொஞ்சம் முன்னாடிவரைக்கும் 'யோனிப் பொருத்தம்'[நூலின் பக்க எண்ணிக்கை 24] நூலில் வாசிக்கப்பட்ட பக்கங்கள் 150 மட்டுமே(ஒருவர் முதல் தடவை வாசிக்கும் பக்கங்களின் எண்ணிக்கை மட்டுமே கணக்கில் சேர்க்கப்படும்).

அமேசான் ஒரு பக்கத்துக்கு எட்டுக் காசு போலக் கணக்குப்போட்டுக் கொடுக்குது. ஒரு மாதத்துக்கும் மேலாக, ராத்திரி பகலா யோசிச்சி, ஆணும் பெண்ணும் இணைஞ்சி வாழுறதில் உண்டாகும் பிரச்சினைகள் பத்தி எழுதின ஒரு நூலுக்கு இம்மாதிரிக் குறைந்தபட்சச் சன்மானம்  போதுமானதுதானா?

போதும்தான். பாழாப்போன எழுத்தாளன் மனசு காசைவிடப் புகழைத்தானே பெருசா நினைக்குது!

======================================================================================