செவ்வாய், 9 மார்ச், 2021

சிரிப்பாய்ச் சிரிக்க வைக்கும் ராமகிருஷ்ண[பரமஹம்சர்]ரின் சிரிப்பு!!!

#கேசவ் சந்திர சென் என்பவர் சிறந்த தத்துவ அறிஞர், சிந்தனையாளர். ராமகிருஷ்ணரை[ராமகிருஷ்ண பரமஹம்சர்]ச் சந்திக்கப் போனார். ராமகிருஷ்ணரை வாதுக்கு அழைத்துத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய லட்சியம். பிரமாதமாக வாதிடுவார்.

கடவுளுக்கு எதிராக வாதிட்டார். சமயத்துக்கு எதிராக வாதிட்டார். ராமகிருஷ்ணருடைய முட்டாள்தனத்தைப் புட்டுப் புட்டு வைத்தார். ராமகிருஷ்ணர் சரியான முட்டாள் என்பதை நிரூபிக்க முயன்றார். கடவுள் இல்லையென்றும் யாரும் கடவுள் இருப்பதை நிரூபிக்கவில்லை என்பதையும் வாதிட்டு நிறுவ விரும்பினார்.

பேசினார். பேசிக்கொண்டே இருந்தார். கொஞ்ச நேரத்தில் அவருக்கே என்னவோ சரியில்லை என்று தோன்றியது. அவர் பேசிக் கொண்டே இருக்கவும் ராமகிருஷ்ணர் சிரித்துக்கொண்டே இருந்தார். இவர் சொல்வதைக் கவனித்துக் கேட்டார். பிறகு சிரித்தார். வெறும் சிரிப்பு மட்டுமல்ல. துள்ளிக் குதித்துச் சிரித்தார். கேசவ் சந்திர சென்னைக் கட்டுப் பிடித்துக்கொண்டு சிரித்தார். அவருக்கு முத்தம் தந்தார். "அருமை! இந்த வாதத்தை நான் கேட்டதே இல்லை. வெகு புத்திசாலித்தனமான வாதம். அருமை!" என்றார்.

கேசவ் சந்திர சென்னுக்குத் தர்மசங்கடமாகாப் போய்விட்டது. அவரைப் பார்க்க ஒரு கூட்டம் வேறு கூடிவிட்டது. அவ்வளவு பெரிய தத்துவஞானி ராமகிருஷ்ணரைச் சந்திக்கப் போனால், அதைப் பார்க்க கூட்டம் சேராமலா இருக்கும்? நிறையப் பேர் என்ன பேசிக்கொள்ளப் போகிறார்கள் என்பதைக் கேட்க கூட்டம் கூட்டமாகக் கூடினார்கள். அவர்களுக்குக்கூடத் தாம் அங்கே வந்தது வெட்டி வேலையோ என்று தோன்றியது.

ராமகிருஷ்ணரோ நடனமாடினார். சிரித்தார். "கடவுளைப் பற்றி எனக்கு ஏதாவது சந்தேகம் இருந்திருந்தாலும் நீ அதைத் தொலைத்துக் கட்டிவிட்டாய். கடவுள் இல்லாமல் இவ்வளவு புத்திசாலித்தனம் எங்கே இருந்து வந்தது? நீயே நிரூபணம் கேசவ சந்திரா! நீயே கடவுள் இருப்பதற்கு நிரூபணம்" என்றார்.

தன்னுடைய நாட்குறிப்பில் கேசவ் சந்திரா இதைப் பற்றி எழுதி வைத்திருக்கிறார். ‘ராமகிருஷ்ணரின் சிரிப்பே என்னைத் தோற்கடித்துவிட்டது. என்றென்றைக்குமாக என்னைத் தோற்கடித்துவிட்டது. எல்லா வாதங்களும் மறந்து போயின. என்ன முட்டாள்தனம் என்று பட்டது. அவர் என்னை எதிர்த்து எந்த வாதமும் செய்யவில்லை. ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை. என்னை முத்தமிட்டார். அணைத்துக் கொண்டார். சிரித்தார். நடனமாடினார். இதுவரை யாரும் பாராட்டாத அளவுக்கு என்னைப் பாராட்டினார். நானோ அவருக்கு எதிராகப் பேசிக்கொண்டிருந்தேன். அவரோ, கேசவ சந்திரா! நீயிருப்பது, உன்னுடைய இந்தப் புத்திசாலித்தனம், மேதைத்தனம், இது போதும் கடவுள் இருப்பதை நிரூபிக்க என்று சொன்னார். என்னிடமே சொன்னார்.'

இப்படி எழுதிய கேசவ சந்திரா மேலும் எழுதுகிறார். ‘ஆனால் அவர் அங்கே இருந்தது, அவருடைய சிரிப்பு, அவருடைய நடனம், அவர் என்னைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டது, இவைதான் கடவுள் இருப்பதை எனக்கு நிரூபித்தன. கடவுள் இல்லையேல் அவ்வளவு அருமையான ராமகிருஷ்ணர் எப்படி வந்திருக்க முடியும்?”.....#

இப்படிச் சொன்னவர்['தம்மபதம்' -கண்ணதாசன் பதிப்பகம்] வேறு யாருமல்ல, மறைந்த, 'செக்ஸ் சாமியார்' என்னும் 'ஓஷோ'தான். 

'மற்ற உயிரினங்களைப் புறக்கணித்து மனிதர்களை மட்டும் புத்திசாலிகளாக ஏன் படைத்தார் கடவுள்?' 

'அந்தப் புத்திசாலிகளில் படு படு அயோக்கியர்களையும் நடமாடவிட்டிருக்கிறாரே, அது ஏன்?' 

'அதி புத்திசாலிகளையும் அதி மேதாவிகளையும் படைப்பதற்கான அளவிடற்கரிய அரும்பெரும் புத்திசாலித்தனம் கடவுளுக்கு வாய்த்தது எப்படி?' 

என்றிவ்வாறெல்லாம் கேள்விகள் எழுப்பி, எதற்கும் ஆதாரபூர்வமான பதில் கிடைக்காத நிலையில்தான் கேசவ் சந்திர சென் போன்றவர்கள் கடவுளை ஏற்க மறுத்திருக்கிறார்கள்.

மனம் போன போக்கில், தத்துவம் என்னும் பெயரில் புரியாத எதையெதையோ பேசி[[நம்ம வெள்ளியங்கிரி 'சத்குரு' மாதிரி], மக்களை மயக்கும் இந்தப் போலிச் சாமியாருக்கு இதெல்லாம் தெரியாமலில்லை. தெரிந்தே, திட்டமிட்டுப் பொய்க் கதைகளைப் பரப்புவதுதான் இவரைப் போன்றவர்களின் தொழில். இந்நாளில், குமுதம் வார இதழில் 'மகாப் பெரிய' கற்பனைக் கதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்களே, அதைப் போல.

முக்கண்ணன் சிவபெருமான், சிரித்தே முப்புரத்தை அழித்தது போல் இந்த ராமகிருஷ்ணர் சிரித்தே ஒரு பெரிய தத்துவ அறிஞரைத் தோல்வியுறச் செய்தாராம். 

இதை நினைக்கும்போதெல்லாம் சிரிப்புத்தான் வருகிறது.

"சிரிப்பு வருது சிரிப்பு வருது...சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது..." என்று நடிகர் சந்திரபாபு பாடிய பாடல் நினைவுக்கு வருகிறது.

கடவுளைக் கண்களால் பார்த்தவர் என்றும், காளிதேவியின் கடாட்சம் பெற்றவர் என்றும், தம் சீடர் விவேகானந்தருக்கு[அருவருக்கத்தக்க நடவடிக்கையின் மூலம்]கடவுளின் இருப்பை உணர்த்தியவர் என்றும் உண்மைக்குப் புறம்பான கதைகளை எழுதியதோடு மேற்கண்ட வகையினான பொய்களைக் கற்பித்தும், மக்களை மூடத்தனங்களிலிருந்து விடுபடாதவாறு தடுத்து ஆன்மிகம் பேசிப் பிழைப்பு நடத்தியது ஒரு கூட்டம். 

அவர்கள் பரப்பிய பொய்களைப் பரப்புரை செய்பவர்கள் இப்போதும் இருக்கிறார்கள் என்பதுதான் மிகப் பெரிய சோகம்!

ராமகிருஷ்ணர் குறித்த பதிவுகளுக்கான சுட்டிகள்:

https://kadavulinkadavul.blogspot.com/2020/12/blog-post_10.html

https://kadavulinkadavul.blogspot.com/2015/06/blog-post_9.html

https://kadavulinkadavul.blogspot.com/2017/01/blog-post_12.html

https://kadavulinkadavul.blogspot.com/2012/08/blog-post_8.html

முக்கியக் குறிப்பு:

செவ்வாய், மார்ச் 09 2021 இல் 'இந்து தமிழ்' இணைய நாளிதழில் இது வெளியானது என்பதால், இதற்கான உடனடி விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

======================================================================================

https://www.hindutamil.in/news/spirituals/210503--1.html