திங்கள், 12 ஏப்ரல், 2021

மண்ணுல விஞ்ஞானிகளுக்கு ஒரு சராசரி மனிதனின் கோரிக்கை!!!

மனிதர்களைச் சனி, சந்திரன், செவ்வாய் என்று பிற கோள்களில் குடியேற்றுவதற்கான முயற்சியில் அயராது ஈடுபட்டுக்கொண்டிருக்கும் விஞ்ஞானிகளே, 

உங்களின் முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்று, அயல் கிரகங்களில் மனிதர்களைக் குடியேற்றுவது சாத்தியமானால்.....

மக்களோடு கலந்து, கடவுள், ஆன்மா, பேய், பூதம், பிசாசு, சொர்க்கம், நரகம் என்றெல்லாம் கற்பனைக் கதைகளைப் பரப்பிப் பிழைப்பு நடத்துகிற போலி ஆன்மிகவாதிகளும் அங்கே குடியேறுவார்கள்; சிந்திக்கத் தெரியாத மக்களைச் சீரழிக்கும் கைங்கரியத்தை அங்கேயும் தொடர்வார்கள்.

அழகழகாய்த் தாடி மீசை வளர்த்து, புரியாத தத்துவம் பேசி, அப்பாவி மக்களைப் பித்தர்கள் ஆக்கி, ஆடிக் கார்களிலும் கோடி கோடி கோடி விலை மதிப்புள்ள ஹெலிக்காப்டர்களிலும் இங்கு பவனி வரும்  நித்தியானந்தாக்களும் 'சத்'யானந்தாக்களும் அங்கே சென்ற பின்னரும் தாம் செய்யும் பித்தலாட்டங்களைக் கைவிட மாட்டார்கள்.

பொய் வாக்குறுதிகளை வாரி வழங்கிப் பதவி பெற்றுக் கோடி கோடியாய்ச் கொள்ளையடிக்கத் தெரிந்த கில்லாடிகள் அங்கு சென்றாலும் நல்லவர்களாய் மாறப்போவதில்லை.

'போதும்' என்னும் மனம் இல்லாமல், "இன்னும் வேணும்...இன்னும் வேணும்" என்று வயாக்கராக்களையும் லேகியங்களையும் தேடி அலையும் காமாந்தகர் கூட்டம் அயல் கிரகத்திலும் திருந்தப்போவதில்லை.

ஆகவே விஞ்ஞானிகளே,

இவர்களையெல்லாம் திருத்துவதற்கு எவை எவை தேவையோ அவையவைகளை எல்லாம் கண்டுபிடித்து ஒட்டுமொத்த மனித இனத்தையும் முதலில் திருத்த முயலுங்கள்.

'அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலமாக, மனித உடலைத் திருத்தலாம்; மணனித மனங்களைத் திருத்திட வழியே இல்லை' என்பது உங்களின் பதிலாக இருக்குமேயானால்.....

பொறுத்திருங்கள்; மனிதர்கள் பட்டுத் திருந்தும்வரை காத்திருங்கள்.

திருந்தினால் மட்டுமே அயல் கிரகம் செல்லுவதற்கான ஆராய்ச்சிகளைத் தொடரலாம்.

இவர்கள் திருந்துவது சாத்தியமே இல்லையென்றால், அங்கெல்லாம் மனிதர்களைக் குடியேற்றுவதற்கான ஆய்வுகளை அறவே கைவிடுங்கள். 

தயக்கத்திற்கு இடம் தர வேண்டாம்.

இந்த மனிதர்களால் மண்ணுலகம் அசுத்தமடைந்தது போதும். மற்ற உலகங்களாவது மாசுபடாமலே இருக்கட்டும்.

======================================================================================