அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

எழுத்தாளனுக்கு எத்தனைக் கொம்புகள்?!

ஒரு விருது வழங்கும் விழாவுக்குக் காரில் சென்றுகொண்டிருந்தார் எழுத்தாளர் நீதிவாணன்.

அந்த நகரத்தின் முக்கியக் கடைவீதியைக் கடந்தபோது அந்த அசம்பாவிதம் அவர் கண்ணில் பட்டது.

நான்கு ரவுடிகள் ஓர் இளம் பெண்ணைக் கடத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.

“ஐயோ... என்னைக் காப்பாத்துங்க... காப்பாத்துங்க” என்று அவள் அபயக் குரல் எழுப்பி, அவர்களிடமிருந்து விடுபடப் போராடிக்கொண்டிருந்தாள்.

அவளைப் பாதுகாக்க எவருமே முன்வரவில்லை!

அவள் கடத்தப்பட்டாள்!

நீதிவாணன் விழா நடக்கும் இடத்திற்குப் புறப்பட்டார்.

விழா தொடங்கியது.

வரவேற்புரை நிகழ்த்த ஒருவர் முன்வந்தார்.

அவரைக் கையமர்த்திய நீதிவாணன், "என் எழுத்தைப் பாராட்டி எனக்கு விருது வழங்கவே இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா நடத்தும் குழுவினரிடம் என் ஒப்புதலையும் தெரிவித்திருந்தேன். சற்று முன்னர் நடந்த ஒரு அவலம் என் மனதை வெகுவாகப் பாதித்துவிட்டது. அதை உங்களுக்குத் தெரிவிப்பது என் கடமை. 

மக்கள் நடமாட்டம் மிகுந்த கடை வீதி வழியாக நான் வந்துகொண்டிருந்தபோது, நான்கு ரவுடிகள் ஒரு இளம் பெண்ணைக் கடத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். ஆதரவற்ற நிலையில், உதவி கேட்டுக் கூச்சலிட்டு அந்தப் பெண் அலறித் துடித்துக்கொண்டிருந்தாள். சூழ்ந்துநின்ற அத்தனை பேரும் வேடிக்கை பார்த்தார்கள். நானும்தான். 

அவளைக் காப்பாற்றுவதற்கான சிறு முயற்சிகூட மேற்கொள்ளப்படவில்லை.

'காவல்துறைக்குத் தகவல் போயிருக்குமா? விரைந்து செயல்பட்டு, கடத்தப்பட்ட பெண்ணை மீட்பார்களா?' என்று எனக்கு நானே கேள்விகள் கேட்டுக்கொண்டு இங்கு வந்து சேர்ந்தேன்.

விழா மேடையை நெருங்கும்போது புதியதொரு கேள்வி என் நெஞ்சை அரிக்கலாயிற்று.

'சமுதாயத்தைத் திருத்தப் பலரும் எழுதுகிறார்கள். நானும் எழுதுகிறேன். எழுத்துக்களால் விளைந்த பயன் என்ன?' என்பதுதான் அந்தக் கேள்வி.

எங்களின் எழுத்து ரவுடிகளைத் திருத்தவில்லை; கோழைகளைத் தைரியசாலிகளாக மாற்றவில்லை. நாங்கள் எழுதியதும் எழுதிக்கொண்டிருப்பதும் எங்களைப் பிரபலப்படுத்தவும் பணம் சம்பாதிக்கவும்தானா?

'ஆம்' என்றால், எந்தவொரு எழுத்தாளனும்,  'நான் எழுத்தாளன்' என்று சொல்லித் திரிவதை இனிமேல் தவிர்க்க வேண்டும்; விருதுகளையும், பரிசுகளையும், பாராட்டுகளையும் முற்றிலுமாய்ப் புறக்கணிக்க வேண்டும்" என்று பேசி முடித்த நீதிவாணன், கொஞ்சம் வினாடிகள் கழித்துச் சொன்னார்: 

"நீங்கள் மிக விரும்பி எனக்கு வழங்கவிருந்த விருதை ஏற்க இயலாமைக்கு என்னை மன்னியுங்கள்.

விடை பெறுகிறேன். நன்றி."

அனைவருக்கும் கைகூப்பி வணக்கம் சொல்லி மேடையிலிருந்து இறங்கி நடக்கலானார் நீதிவாணன்.

======================================================================================