அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 14 ஏப்ரல், 2021

'குமுதம்' இதழில் ஒரு 'குப்பைமேனி'க் கட்டுரை!!!


முன்னொரு காலத்தில், இருபதுக்கும் மேலான என் ஒ.ப.கதைகளை வெளியிட்ட 'குமுதம்' வார இதழ், எப்போதிருந்து என் கதைகளை நிராகரிக்கத் தொடங்கியதோ அப்போதிருந்தே அதைக் காசு கொடுத்து வாங்குவதை நிறுத்திவிட்டவன் நான். ஓசியில் கிடைத்தால்[ஹி...ஹி...ஹி!] மட்டும் ஒரு முறை வாசிப்பதுண்டு.

சற்று முன்னர், தினமலர் இணையப் பக்கங்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது, குமுதம் இதழில் வெளியானதொரு[2013இல்] தரமான கட்டுரையை அது எடுத்தாண்டிருப்பதை அறிந்து இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானேன்.[https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=17400&ncat=18].

குமுதத்திலா இப்படியொரு அரிய படைப்பு என்று வியந்த நான் உங்களின் வாசிப்புக்காக அதை இங்கே பதிவு செய்கிறேன். குமுதத்துக்கும் தினமலருக்கும் என் நன்றி.

கட்டுரை:

'டெல்லி மருத்துவமனை தொட்டு, எல்.கே.ஜி. மாணவி வரையிலான பாலியல் பலாத்காரங்களுக்குக் காரணம் என்ன? இதுதான் இன்றைக்கு எல்லாத் தரப்பு மக்களாலும் கேட்கப்படும் கேள்வி. அவர்கள் மனதளவில் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் போவதுதான் காரணம் என்பது பலருக்கும் புரிகிறது. ஆனால் அதை அடக்குவதற்கான வழிமுறைகள் தெரியாததுதான் அதற்குக் காரணம் என்பதும் மறுக்க இயலாத உண்மை.

சரி, உணர்ச்சி என்றால் அது காமம் மட்டும்தானா?

நாம் எதிர்கொள்ளும்... உணரும் உணர்வுகள் எல்லாமே உணர்ச்சிகள்தான். அன்பு, பாசம், கோபம், சினம், ஆனந்தம், இன்பம், துக்கம், ஆசை, காமம், வெறுப்பு, விரக்தி, பயம் என்று உணர்ச்சிகளுக்கு ஒரு பட்டியல் தயாரித்தால் அது நீண்டுகொண்டே போகும்.

இவை எல்லாமே இருந்தால்தான் ஒருவன் முழு மனிதன் ஆகிறான். இந்த உணர்ச்சிகளின் தாக்கம் ஆளாளுக்கு மாறுபடும்.

இவற்றில், நம் மீது பெருமளவில் ஆதிக்கம் செலுத்துவது 'காமம்' என்று சொல்லலாம்.

ஆணோ பெண்ணோ ஏதாவது ஒரு தருணத்தில் காம வயப்படுவது தவிர்க்க முடியாதது. தக்க துணையுடன் இணைவதுதான் அதற்கு ஒரே வடிகால்.

செக்ஸ் உணர்ச்சி அளவோடு இருக்கும் பட்சத்தில் உடலுக்கும் மனதிற்கும் நல்லதுதான். பெரிய பெரிய கற்பழிப்புக் குற்றங்கள் காம உணர்வுகளை அடக்க முடியாதவர்களால்தான் நிகழ்ந்தேறியுள்ளன.

காம உணர்ச்சிகளை அடக்கி ஆண்டால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?

காம உணர்ச்சிகளை அடக்கினால் மன நோய்,  தலைவலி,  திடீர்க் காய்ச்சல், மூட்டுகளில் வீக்கம், இடுப்பு வலி, உடல் பலவீனம், உடல் இளைப்பு, மயக்கம், நடுக்கம், மார்புவலி,  இதயநோய் என்று ஏராள பாதிப்புகளுக்கு நாம் உள்ளாவோம்.

ஆனால் காமம் என்பது நிலையானது அல்ல என்பதைப் புரிந்து கொண்டால் காம உணர்ச்சியிலிருந்து எளிதில் விடுபட முடியும்.

முருங்கைக்கீரை, முருங்கைக்காய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை உண்டால் காம உணர்வு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் எந்த ஆய்விலும் இது நிரூபிக்கப்படவில்லை. அதேபோல் வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றிற்குக் காம உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் திறன் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதிலும் உண்மை இல்லை.

நம் நாட்டில், உப்பு, காரம் போன்றவை இல்லாத உணவுகளை மட்டுமே உண்டு வாழ்ந்த  துறவிகள், பூசாரிகள், சன்னியாசிகள் எல்லாம் பட்ட பாட்டை... படும் பாட்டை இந்த நாடே அறியும்.

எந்தவிதமான உடல் உழைப்பும் இல்லாமல் விதவிதமான உணவுகளை வகை தொகை இல்லாமல் உண்பவர்களுக்கு செக்ஸ் ஹார்மோன்கள் அதிகளவில் உற்பத்தியாவது உறுதி.

உணர்ச்சிகளில் இருந்து விடுபடுவதற்கான எளிமையான வழிகள்:

பொதுநலத் தொண்டு: வாரத்தில் ஓரிரு நாட்களில் சில மணி நேரங்களை ஒதுக்கி, பொது மருத்துவமனைகளுக்குச் சென்று அங்குள்ள நோயாளிகளுக்குப் பணிவிடை செய்து பாருங்கள். நோயாளிகளின் நிலையைக் கவனித்த எவருக்கும் காம இச்சை தலைதூக்காது. மாறாக, ஒரு மகத்தான சேவை செய்த மனநிறைவு கிட்டும்.

உடற்பயிற்சி: காமத்தை உற்பத்தி செய்யும் ஹார்மோன்களை அடக்கி, உடலை இலகுவாக்கும் வேலையை உடற்பயிற்சி மூலமே செய்ய முடியும்.

வீட்டுத் தோட்டம் அமையுங்கள். நிலத்தைத் தோண்டுவது, பாத்தி போடுவது, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யுங்கள். செடிகள் வளர வளர உங்கள் மனதில் ஏற்படும் நல்ல மாற்றங்களை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.

இசை: இசையைக் கேப்டதைவிட, அதை இசைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் காமத்திற்கான பெரும் வடிகாலாக அது அமையும்.

புத்தகம் படித்தல்: ஆன்மிகம் உட்பட நல்ல தரமான எந்த நூலையும் வாசியுங்கள். வாசிக்க வாசிக்க உங்கள் காமம் கரைந்து போகும்.

நண்பர்களிடம் பகிருங்கள்: அடிக்கடி காம வயப்படுபவர்கள் கூச்சப்படாமல் நண்பர்கள், உறவினர்களிடம் அதைப் பகிர்ந்துகொண்டு ஆலோசனை கேளுங்கள். உங்கள் பிரச்னைக்குத் தீர்வு இதில்தான் கிடைக்கும்.

மதுவுக்கு அடிமையாகாதீர்கள்: மது மயக்கம் காம உணர்வாக இருந்தாலும், எந்த உணர்ச்சியாக இருந்தாலும் அதை அதிகப்படுத்தும். 

- இரா. மணிகண்டன்'

===================================================================================

குப்பையில் முளைக்கும் 'குப்பைமேனி' மருத்துவக் குணம் கொண்டது.