அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 15 ஏப்ரல், 2021

ஆசீர்வதிக்கும் நாயும் ஆறறிவு அறிவிலிகளும்!!!

#மகாராஷ்டிரா மாநிலத்தில்  'சித்தாதேக்' என்று ஓர் ஊர். அந்த ஊரில் சித்திவிநாயகர் கோயில் உள்ளது.

அந்தக் கோயிலின் நுழைவு வாயிலில் ஓர் உயரமான மேடை. அதில் ஒரு நாய்  அமர்ந்திருக்கிறது. 

கோயிலில் இருந்து வெளியே வரும் பக்தர் ஒருவர் நாய்க்கு முன்னால் வளைந்தும் தலை குனிந்தும் நிற்கிறார். பதிலுக்கு அந்த நாய் அவரின் தலை மேல் கைவைத்து ஆசிர்வதிப்பது போல் சைகை செய்கிறது. 

கோயிலில் இருந்து வெளியேறும் வேறு சில பக்தர்கள் அந்த நாயிடம் கைகளை நீட்டுகிறார்கள். பதிலுக்கு அந்த நாயும் அவர்களுக்குக் கை கொடுக்கிறது. 

இந்த நிகழ்வுகளை, 'அருண் லிமாடியா' என்னும் நபர், காணொலி[வீடியோ]யாகப் பதிவு செய்து  சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்#

-இவ்வாறானதொரு செய்தியை, ஆன்மிகம் வளர்ப்பதில் அரும்பணி ஆற்றுகிற இரு  நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன[ஜனவரி மாதச் செய்தி].

'கோயில் வாசலில் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நாய்: வைரலாகப் பரவும் வீடியோ' -இது தினமலர் தந்துள்ள தலைப்பு.


'கோயிலுக்கு வெளியே.. தலைக்குமேல் கால் வைத்து.. பக்தர்களுக்கு ஆசி வழங்கும் ஆச்சர்ய நாய்' -இது 'one india' வின் தலைப்பு.

'வெறுமனே செய்திகளை வெளியிடுவதோடு ஊடகங்களின் கடமை முற்றுப்பெறுகிறதா?' என்னும் கேள்வியை இங்கே தவிர்க்க இயலவில்லை.

ஒரு செய்தியைப் பதிவு செய்வதற்கு முன்னர் அதன் நம்பகத்தன்மையைக் கண்டறிதல் செய்தியாளர்களுக்கான கடமை அல்லவா? இதை அந்தச் செய்தி நிறுவனங்கள் மறந்தது ஏன்?

உயிரினங்களில் மனித இனத்தையடுத்து,   குறிப்பிடத்தக்கப் புத்திசாலித்தனம் வாய்க்கப்பெற்றது நாயினம். முறையான பயிற்சி மூலம்  சில வகை நாய்கள் அரிய செயல்களைச் செய்து நம்மை வியக்க வைப்பது யாவரும் அறிந்ததே.[ஒரு காணொலி கீழே].

காலால் தலையைத் தொடுவதற்குப் பயிற்சி கொடுத்து, கோயிலின் நுழைவாயில் மேடைதனில் இருக்கவைத்து, அதைக் காணொலியாகவும் பதிவு செய்து, பக்தர்களை அது ஆசீர்வதிப்பதாக நம்பவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்  இந்த அருண் லிமாடியா.

இத்தனைக் காலமும், விதம் விதமான கடவுள்களும், அவர்களுக்கு இணையாக மதித்துப் போற்றித் துதிபாடப்பட்ட மகான்களும் வழங்கிய ஆசீர்வாதங்களால் முழுத் திருப்தி கிடைக்காமல், நாயிடம் ஆசீர்வாதம் பெறத் தலைப்பட்டுவிட்டார்களா பக்தகோடிகள்?!

குனிந்து கும்பிடுவோரின் தலையைத் தொட்டு ஆசீர்வாதம் செய்கிற இந்த நாய்.....

பகவானா, மகானா?!

                *                           *                                  *                                      *                              *

காணொலி:

https://www.youtube.com/watch?v=BWiloZnvXJI&authuser=0

======================================================================================

https://tamil.oneindia.com/news/mumbai/viral-video-of-dog-blessing-devotees-and-shakes-hands-outside-temple-in-maharastra/articlecontent-pf514719-408737.html  13 ஜன., 2021 

https://www.dinamalar.com/news_detail.asp?id=2688602   Updated : ஜன 12, 2021  20:23 |  Added : ஜன 12, 2021  20:22 |