புதன், 28 ஏப்ரல், 2021

'கின்னஸ்'இல் இடம் பிடித்த கொலைகாரப் பேரழகி!!!

'யாரேனும் குற்றம் செய்தால் ஒரு குதிரையின் வயிற்றைக் கிழித்து அந்தக் குற்றவாளியை, அதனுள் வைத்துத் தைத்து இறக்கும்வரை வேடிக்கை பார்ப்பார்கள்'

-இப்படியொரு தண்டனை, 16ஆம் நூற்றாண்டில் ஹங்கேரி நாட்டில் வழக்கத்தில் இருந்ததாம்.

'இளம் பெண்களைக் கொன்று அவர்களின் ரத்தத்தில் குளித்து வந்தால் என்றென்றும் இளமையாகவே இருக்கலாம்' என்பதானதொரு நம்பிக்கையும் அந்த நாட்டில் இருந்தது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

#'எலிசபெத் பாதோரி(Elizabeth Báthory)'என்னும் இளம் பெண் ஹங்கேரியில் ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவள்.

மேற்குறிப்பிட்ட நம்பிக்கை[ரத்தத்தில் குளித்தல்] இவளின் மனதில் மிக மிக மிக அழுத்தமாகப் பதிந்திருந்தது.

குற்றவாளிகளைக் கிழிக்கப்பட்ட குதிரையின் வயிற்றில் வைத்துத் தைப்பதையும் அடிக்கடி இவள் பார்க்க நேர்ந்தது.

இதன் விளைவாக, தன் பணியாளர்களை மிகவும் துன்புறுத்தி வேடிக்கை பார்ப்பதை வழக்கமாக்கிக்கொண்டாள்.

15 வயதில் பெரேக் நடாஸ்டி என்பருடன் இவளுக்குத் திருமணம் நடந்தது. தன் கணவனுடன் சேர்ந்து பணியாளர்களைச் சித்திரவதை செய்து இன்புறும் பழக்கமும் தொடர்ந்தது.

கணவன் போருக்குச் செல்லும்போதெல்லாம் இவள் தனியாகவே இருந்தாள்.

இம்மாதிரிச் சூழ்நிலைகளில், வாழ்நாள் முழுவதும் தன் உடல் இளமையாக இருக்க வேண்டும் என்று எண்ணி, இளம் பெண்களைக் கடத்தி, கொலை செய்து அவர்களின் ரத்தத்தில் குளிக்கலானாள்.

இவளால் ஊருக்குள் சென்று பெண்களைக் கொண்டுவர முடியாத சமயங்களில் தனது காவலர்களை அனுப்பி, அவர்களைக் கொண்டுவரும்படி உத்தரவிடுவாள்.

இதனால் ஊரெங்கும் பெண்கள் காணாமல் போகத் தொடங்கினர். கொலை செய்து ரத்தத்தை எடுப்பது மட்டுமன்றி, சித்ரவதை செய்வதிலும் மிகுந்த ஈடுபாடு இவளுக்கு இருந்திருக்கிறது.

பெண்களைக் கூண்டில் அடைத்து வைப்பாள்.

பின்பு, அவர்களைப் பனிக்கட்டியில் வீசி, உறைந்து இறக்கும்வரை பார்த்து ரசிப்பாள்.

கைகளில் நெருப்பு வைப்பது, நெருப்புப் பந்தைப் பெண்களின் முகத்தில் எறிவது, கொதிக்கும் நீரை அவர்கள் மீது ஊற்றித் தோலைத் தனியே பிரித்தெடுப்பது போன்ற குலை நடுங்கச் செய்யும் கொடூரங்களையும் இவள் அஞ்சாமல் செய்திருக்கிறாள்.

பெண்களின் உடலில் தேனை ஊற்றி, தேனீக்கள் மற்றும் பிற பூச்சிகளை அவர்களின் மீது கடிக்கவிட்டுச் சித்திரவதை செய்வதையும் இவள் தொடர்ந்திருக்கிறாள்.

நரமாமிசம் உண்ணும்படிக் கட்டாயப்படுத்துவது, கட்டி வைத்து ஊசியால் குத்துவது, உடலின் பாகங்களை வெட்டுவது போன்றவையும் இவளின் சித்திரவதைப் பட்டியலில் அடங்கும்.

இப்படி, இன்னும் பல கொடுமைகள் செய்திருக்கிறாள் இவள்..

இவளின் கொடூரமான குணம் தெரிந்ததால் மக்கள் யாரும் வேலைக்குச் செல்லவே பயந்தார்கள். சிலர் இவளுக்கு அஞ்சி, தம் பெண் பிள்ளைகளை மறைத்துவைக்கத் தொடங்கினார்கள்.

இந்நிலையில், துர்சோ என்பவர் பாதோரிக்கு எதிராக ஆதாரங்களைத் திரட்டினார். இவளுக்குரிய கோட்டையை ஆராய்ந்தபோது, கண்ணை இழந்த, கை கால்களை இழந்த நிலையில் பல அடையாளம் தெரியாத பெண் சடலங்கள் கண்டறியப்பட்டன.

அதன் பின் நடந்த விசாரணையில் பாதோரி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டாள். ஆனால் அவள் ஆஜராகாமல் தன் பணியாளர்களைத் தனக்குப் பதிலாகக் குற்றங்களை ஒப்புக்கொண்டு சரணடையும்படிச் செய்தாள்.

இருப்பினும் இவள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. இவளை ஒரு தனிக் கோட்டையில் சிறை வைக்கும்படி ஹங்கேரி அரசு உத்தரவிட்டது. இவளுக்கு உதவிய பணியாளர்களுக்கு மரண தண்டணை வழங்கப்பட்டது.

அந்த மூடப்பட்ட கோட்டையில் இருந்த பாதோரி, தனது 54 ஆவது வயதில் உயிரிழந்தாள் என்று கூறப்படுகிறது#

வாசிப்போரை நெஞ்சு நடுங்கச் செய்யும் மேற்கண்ட தகவல்கள் நம்பும்படியாக இல்லைதான். ஆனாலும்,

650க்கும் மேற்பட்ட கொலைகளைச் செய்த எலிசபெத் பாதோரி என்னும் இந்தப் பெண், 'உலகிலேயே அதிகக் கொலை செய்த பெண்' என்று கின்னஸ் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதால் நம்புவதைத் தவிர வேறு வழியில்லை!

Elizabeth Báthory

===============================================================================

ஆதாரம்:

Story of Elizabeth Báthory “The Blood Countess”

The Legend of Elizabeth Báthory: The Blood Countess - Medical Bag

 https://ta.quora.com