அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

தமிழ் வளர்க்கும் தமிழ்ச்சரத்திற்கு.....

தமிழ்ச்சரத்தின் உரிமையாளர் அவர்களுக்கு, வணக்கம். 

'தமிழ்ச்சரம்' திரட்டியில் இணைப்புப் பெற்றுள்ள பதிவர்களில் நானும் ஒருவன்.

தமிழ்ச்சரத்தில் என் பதிவுகள் வெளியாவதால் நான் சிறிதளவேனும் பயன் அடைந்திருத்தல்கூடும். ஆனால், என் பதிவுகளால் தமிழ்ச்சரத்தின் தரம் கூடியுள்ளதா என்பது பற்றி எனக்குத் தெரியாது.

உங்களின் நேரத்தை விரயமாக்க விரும்பாததால் நேரடியாக விசயத்துக்கு வருகிறேன்.

நேற்று[08.04.2021] 'ஆதியோகி சிவன்'... அப்பட்டமான கட்டுக்கதை' https://kadavulinkadavul.blogspot.com/2021/04/blog-post_8.html என்னும் தலைப்பில் ஒரு பதிவு எழுதினேன். அது தமிழ்ச்சரத்தில் இணைக்கப்படவில்லை.

அநாகரிகமான வார்த்தைகளை அதில் நான் பயன்படுத்தவில்லை என்பது என் நம்பிக்கை. இருந்தும், அது இணைக்கப்படாததற்கான காரணம் எனக்குத் தெரியாது. அது, ஜக்கி வாசுதேவின் மனதை நோகடிக்கும் என்று நீங்கள் நினைத்திருக்கலாம்; வேறு நிர்ப்பந்தமும் இருக்கலாம்.

ஒட்டுமொத்தத் தமிழர்களையே முட்டாள்கள் என்று நினைக்கும் அந்த மனிதரின் செயல்பாடுகளால் என் போன்றவர்கள் மனம் நோவது பற்றி உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

பதிவை நிராகரிப்பதற்குக் கிஞ்சித்தும் இடம் தராத, 'கதை சொல்லல்'...இளம் கதாசிரியர்களுக்கு மட்டும்' https://kadavulinkadavul.blogspot.com/2021/04/blog-post_9.html என்னும் தலைப்பிலான பதிவை இன்று[09.04.2021] முற்பகலில் இணைத்தேன். இதுவும் தமிழ்ச்சரத்தில் இணைக்கப்படவில்லை.

இதற்கான காரணத்தையும் என்னால் அறிய இயலவில்லை. 

அறியத் தருதல் வேண்டும் என்று உங்களை வற்புறுத்தவும் மாட்டேன். [இதற்கெல்லாம் உங்களுக்கு நேரமும் இருக்காது].

காரணம், திரட்டியின் உரிமையாளர் நீங்கள். ஒரு பதிவை இணைப்பதும் இணைக்க மறுப்பதும் உங்கள் விருப்பம் சார்ந்தது.

சொல்ல நினைத்ததைச் சொல்லி முடித்துவிடுகிறேன்.

காரணத்தை அறியும் வாய்ப்பே இல்லாத நிலையில், ஒரு பதிவை நிராகரிப்பது, அதைப் படைத்தவனின் மனதை நோகடிக்கும் செயலாகும்[இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்பும் என் பதிவுகள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. பல பதிவுகளை இணைத்துக்கொண்டதற்காக நன்றி சொல்லவும் கடமைப்பட்டிருக்கிறேன்].

என் வேண்டுகோள்:

உடனடியாக என் பதிவுகளுக்கான இணைப்பைத் துண்டியுங்கள். எக்காரணத்தை முன்னிட்டும், இணைப்புத் தருமாறு இனியும் வேண்டுகோள் வைக்க மாட்டேன்[இணைப்பை நிரந்தரமாகவே துண்டித்துவிட்டீர்கள் என்றும் நினைக்கிறேன்].

இந்த மடலை, என் தளத்தில் வெளியிடுவதோடு உங்களின் மின்னஞ்சல் வாயிலாக உங்களுக்கும் அனுப்புகிறேன். தமிழ்ச்சரத்தில் இணைக்க மாட்டீர்கள் என்பது என் உறுதியான நம்பிக்கை.

தமிழ் வளர்க்கும் நல்ல நோக்குடன் லாப நோக்கமின்றித் தமிழ்த் திரட்டியைப் பராமரிக்கிற நீங்கள், உங்களின் நேரத்தை வீணடித்ததைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்னும் வேண்டுகோளுடன் நன்றி சொல்லி அமைகிறேன்.

நன்றி... மிக்க நன்றி.

======================================================================================