இது, ஊடகங்கள் பலவற்றிலும் வெளியான செய்திதான். இதன் 'இன்றியமையாமை' கருதி இன்று இங்குப் பதிவு செய்கிறேன்.
நோய்த் தாக்குதலுக்கு முன்பு குறைந்தது 2 ஆண்டுகள்வரை உடற்பயிற்சி செய்யாதவர்களைக் குறி வைத்துத் தாக்குகிறதாம் கொரோனா.
'மாற்று உறுப்பு அறுவை செய்துகொண்டவர்களும், கடுமையான இணை நோய் உள்ளவர்களும் கொரோனா கொடுந்தொற்றின் தாக்குதலுக்கு அதிகம் உள்ளாகிறார்கள். அவர்களையடுத்து, அதி தீவிரத் தாக்குதலுக்கு உள்ளாகிறவர்கள் உடற்பயிற்சியே இல்லாத சோம்பேறிகள்தான்' என்பது ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வை நடத்தியது பிரிட்டனைச் சேர்ந்த 'ஜோர்னல் ஆப் ஸ்டோர்ட்ஸ் மெடிசன்' என்னும் இதழ்,
2020 ஜனவரி முதல் அக்டோபர் வரை கொரோனா பாதித்த 48,440 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களின் சராசரி வயது 47. 5 ல் 3 பேர் பெண்கள். அவர்களில் பெரும்பாலானோருக்கு, நீரழிவு, நுரையிரல் பாதிப்பு, இதயம் அல்லது சிறுநீரக நோய் அல்லது புற்றுநோய் போன்றவற்றின் பாதிப்பு இல்லை. 20 சதவீதம் பேர் ஏதேனும் ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். 30 சதவீதம் பேர் 2 அல்லது 3 நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளதாவது: கொரோனா தொற்று பாதிப்பதற்கு முன்பு இரண்டு ஆண்டுகள் வரை உடற்பயிற்சி செய்யாதவர்கள் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் அளவுக்குப் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் உயிரிழக்கவும் வாய்ப்புகள் அதிகமாக இருந்தது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 73 சதவீதம் பேர் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.