புதன், 26 மே, 2021

வி.வி.வி.ஐ.பி.ஜோதிடர்!!![ஹி...ஹி...ஹி! கதை]


“ஒரு வாரத்தில் முடிவு அனுப்புவோம்” என்று ‘நேர்முகம்’ போன இடத்தில் சொல்லியிருந்தார்கள். ஆறு நாள் ஏமாற்றத்துடன் கழிந்தது செந்தில் முருகனுக்கு. ஏழாவது நாளான அன்று தபால்காரரை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

அவன் கையில் ‘புத்தாண்டு ராசி பலன்கள்-2010’ இருந்தது. தன் ராசிக்குரிய பலன்களில் பார்வையைச் செலுத்தினான்.

‘இந்த ராசி அன்பர்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. குரு பகவான் மட்டுமல்லாது ஜீவன ராசிக்காரரான சனி பகவானின் அருட்பார்வையும் இருப்பதால், வேலை இல்லாதவர்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும்’ என்ற நல்ல செய்தியும் அதில் இடம் பெற்றிருந்தது.

திருப்தியுடன் தலையசைத்தான் செந்தில் முருகன். இது அவன் எதிர்பார்த்த பலன்தான். வேலைக்கு விண்ணப்பம் போடும்போதே, ‘ஜோதிட மாமணி’ தட்சிணாமூர்த்தியிடம் அவன் தன் ஜாதகத்தைக் கொடுத்தபோது, அவரும் இதையேதான் சொன்னார்.

தட்சிணாமூர்த்தி சாதாரண ஆளல்ல; ஜோதிட சாஸ்திரத்தைக் கரைத்துக் குடித்தவர்! பெரிய பெரிய ’வி.வி.வி.ஐ.பி’ களுக்கெல்லாம் குடும்ப ஜோதிடர். அவர் சொல்வது நடந்தே தீரும் என்பார்கள். பாண்டவர் காலத்துச் ‘சகாதேவனின் பரம்பரை வாரிசு’ என்றுகூடச் சொல்வார்கள்.

நம்பிக்கையுடன் தபால்காரரின் வருகைக்குக் காத்திருந்தான் செந்தில் முருகன்.

செந்தில் முருகனுக்கு ஜோதிடத்தில் அபார நம்பிக்கை. வேலைக்கு விண்ணப்பம் போடும்போதெல்லாம் ஏதாவது ஒரு ஜோதிடரைப் பார்த்துவிடுவான். அவர் சொல்லுகிற நேரத்தில்தான் விண்ணப்பம் அனுப்புவான். கடந்துபோன ஆண்டுகளில், எத்தனையோ ஜோதிடக்கலை விற்பன்னர்களைச் சந்திக்கும் பாக்கியம் அவனுக்குக் கிடைத்திருக்கிறது. எல்லோருமே அவனுக்கு வேலை கிடைக்கும் என்றுதான் சொன்னார்கள். அவர்கள் வைத்த காலக்கெடுதான் வித்தியாசப்பட்டது.

‘சோதிடச் சக்ரவர்த்தி’ மாமண்டூர் பெரியசாமி, “ஏழாம் இடத்தில் சனி குடிகொண்டிருக்கிறார். ரெண்டு ஆண்டு போகணும். வேலை கிடைச்சுடும்” என்றார். செந்தில் முருகன் பட்டம் பெற்று வேலை தேடத் தொடங்கிய போது நடந்தது இது.

“ஏழாம் இடத்தில் சனி இருந்தாலும் குரு பகவானின் பார்வையும் இருக்கு. எண்ணிப் பத்து மாசத்தில் வேலை வீடு தேடி வரும்”. -இப்படிச் சொன்னவர் ‘ஜோதிட சிரோமணி’ சிவசுப்ரமண்யன். 

“ராகு கேது சாதகமற்ற நிலையில் இருந்ததால் ரொம்பப் பாதகமான நிலை நீடிச்சுது. இப்போ கெடுபலன் முடிஞ்சி விடிவு காலம் வந்துடுத்து. சனியால் வந்த பிரச்சினையும் நிவர்த்தி ஆயிடும். அதிகபட்சம் ஆறு மாசம். சனி பகவானுக்குப் பத்து நாள் எண்ணை தீபம் ஏத்து. அரசாங்க வேலையே கிடைச்சுடும்” என்று கணித்துச் சொன்னவர் ‘ஜோதிடக்கலை ஏந்தல்’ சுந்தரபுரி சுந்தரசாமி அவர்கள்.

இப்படி..... இன்னும் பல ஜோதிடத் திலகங்கள் செந்தில் முருகனின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து, வேலை கிடைக்கும் என்றே சொன்னார்கள். "வேலை கிடைக்காவிட்டால் இந்த ஜோதிடத் தொழிலையே விட்டுவிடுகிறேன்” என்று சவால் விட்டுச் சபதம் எடுத்துக் கொண்டவர்களும் உண்டு!

யார் எதைச் சொல்லியும் நேற்றுவரை, பெரிய மனிதர்கள் வரும்போது மட்டும் எழுந்து நின்று 'சல்யூட்' அடித்துவிட்டு, உட்கார்ந்து தூங்கும் ‘நைட் வாட்ச்மேன்’ வேலைகூடக் கிடைக்கவில்லை!

செந்தில் முருகனுக்கு வயது ஏறிக்கொண்டே போனது. அவன் சந்தித்த ஜோதிடர்களின் எண்ணிக்கையும் வளர்ந்து கொண்டே போனது. அன்று வரை அவன் ஜோதிடர்களுக்குக் கொடுத்த காணிக்கையை வைத்து ஒரு மளிகைக் கடையே நடத்தலாம்!

ஆனாலும், அவன் அப்படியெல்லாம் கணக்குப் பார்க்கிற ஆளல்ல. அவன் ஜோதிடத்தை ஒரு ‘தெய்வீகக் கலை’ என்று நம்புகிறவன். ஜோதிடர்கள் கணித்துச் சொல்வது பிசகிப் போனாலும், “என் துரதிர்ஷ்டம், எந்த வேலையும் எனக்குக் கொடுத்து வைக்கல” என்று சொல்வானே தவிர, ஜோதிடர்களையோ ஜோதிடக் கலையையோ ஒரு நாளும் அவன் பழித்துப் பேசியதில்லை.

தபால்காரரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான் செந்தில் முருகன். அவனைச் சுற்றி, ‘புத்தாண்டுப் பலன்கள்’, ‘சனிப் பெயர்ச்சிப் பலன்கள்’, ‘குரு பெயர்ச்சிப் பலன்கள்’, என்று விதம் விதமான ராசி பலன் புத்தகங்களும், ‘ஜோதிடக் கலை’, ‘ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்’, ‘நீங்களும் ஜோதிடர் ஆகலாம்’ என்று வகை வகையான ஜோதிடம் கற்றுத்தரும் புத்தகங்களும் குவிந்தும் இறைந்தும் கிடந்தன.

“சார் போஸ்ட்.”

“தபால்காரர் எறிந்துவிட்டுப் போன கடித உறையைக் கட்டுக்கடங்காத ஆர்வத்துடன் எடுத்துப் பிரித்தான் செந்தில் முருகன்.

வழக்கமான முடிவுதான்! அவன் தேர்ந்தெடுக்கப்படாததை வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்கள்.

அதற்கப்புறம், வேலைக்கு விண்ணப்பம் போடுவதையும் ஜோதிடம் பார்ப்பதையும் அடியோடு நிறுத்திவிட்டான் செந்தில் முருகன்.

நாட்கள் கழிந்தன.

ஒரு காலை நேரம்.

புறநகர்ப் பகுதியில், பேருந்து நிலையத்தை ஒட்டிய ஒரு காலி மனையில் போடப்பட்ட ஒரு கீற்றுக் கொட்டகையில் செந்தில் முருகன் அமர்ந்திருந்தான்.

அவனுக்கென்று ஒரு மேசையும் நாற்காலியும். மேசைக்கு எதிரே ஐந்தாறு மடக்கு நாற்காலிகள். பக்கவாட்டிலிருந்த சிறிய மர அடுக்கில் புத்தகங்கள். உயரே சாமி படங்கள்.

ஓர் இளைஞர் உள்ளே நுழைந்து மடக்கு நாற்காலியில் அமர்ந்தார். “பட்டம் வாங்கி ரெண்டு வருசத்துக்கு மேல ஆச்சி. வயசும் எறிட்டே போகுது. வேலை கிடைச்சபாடில்ல. பார்த்துச் சொல்லுங்க” என்று தன் ஜாதகத்தைச் செந்தில் முருகனிடம் நீட்டினார்.

அதைப் பிரித்துப் பார்த்துவிட்டு, பேப்பரில் கட்டங்கள் வரைந்து, அவற்றில் கிரகங்களின் இருப்பைக் குறித்து முடித்து ஆராயத் தலைப்பட்டான் செந்தில் முருகன்.

ஆமாம், அவன் இப்போது ஒரு முழு நேர ஜோதிடர்; எதிர்கால வி.வி.வி.ஐ.பி.ஜோதிடர்!

“தம்பி, இந்தப் புத்தாண்டு உங்க வாழ்க்கையில் புதிய திருப்பத்தைக் கொடுக்கும். பத்தில் சனி இருந்தாலும் குரு பார்வை இருக்கு. கவலை வேண்டாம். எண்ணி ஆறு மாசத்தில் வேலை உங்க வீடு தேடி வரும். சனிக் கிழமை தவறாம.....”

செந்தில் முருகன் சொல்லிக்கொண்டு போக, திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்தார் அந்த இளைஞர்.
=============================================================================================
ஆக்கம்: 07.05.2014