வியாழன், 27 மே, 2021

விலங்கினங்களின் 'உடலுறவு'க்கான தேர்வு முறை!


'தன்னைப் பணிய வைத்திடும் ஆளுமை உள்ள ஆணைத்தான் பெண் விலங்கு விரும்புகிறது' என்று அறிவியல் அறிஞர்கள் ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள்.

இந்த நடைமுறை உண்மையைக் கண்டறியப் போதுமான சோதனைகளையும் அவர்கள் மேற்கொண்டார்கள். அவற்றில் ஒன்று.....

ஆண் எலிகள் பல ஒரு சோதனைக் கூடத்திலிருந்த கூண்டுக்குள் விடப்பட்டன. ஒரு மணி நேர அளவில், அவற்றிடையே பலவிதமான மிரட்டல்கள், மோதல்கள், துரத்தல்கள் எல்லாம் நிகழ்ந்த பிறகு தலைவர், துணைத் தலைவர், தொண்டர் என்னும் வரிசைப்படி தங்களுக்குள்ளேயே அவை ஒரு நிர்வாக அமைப்பை உருவாக்கிக்கொண்டன.

எலிகளுக்கிடையே தொடர்ந்து நடந்த  போராட்டங்களை மிக மிக மிக உன்னிப்பாகக் கவனித்து ஆராய்ந்த விஞ்ஞானிகள், அவற்றுக்கான 'உடல் வலிமை'யை அளவுகோலாகக் கொண்டு முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என்றிப்படித் தர நிர்ணயம் செய்து குறித்துக்கொண்டார்கள்.

பின்னர், அத்தனை ஆண் எலிகளும் மெல்லிய சிறு சிறு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டன, நாய்களை நாம்  கட்டிவைப்பது போல.

ஆண்கள் தாமாகப் பெண் எலிகளைத் தேடிச் சென்று அவற்றுடன் உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்பதே இதன் நோக்கமாகும். அடுத்தடுத்த நாட்களில், ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட சோதனைகளில் நிகழ்ந்தவை அவர்களைப் பேராச்சரியத்தில் மூழ்கடித்தன.

சோதனை விவரம்:

ஆண் எலிகள் கட்டி வைக்கப்பட்டிருந்த மிகப் பெரிய கூண்டுக்குள் ஒரு பெண் எலியை அனுமதித்தார்கள். நிமிட நேரத்தில் அந்தப் பெண் எலி உடலுறவுக்காக ஓர் ஆண் எலியைத் தேர்வு செய்தது. விஞ்ஞானிகள் வரிசைப்படுத்தியிருந்ததில் நம்பர் ஒன் எலி அது!

இரண்டாவதாக அனுப்பப்பட்ட பெண் எலி தேர்வு செய்தது போராட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற ஆண் எலி. அதாவது, நம்பர் 2.

அடுத்தடுத்துக் கூண்டுக்குள் அனுப்பப்பட்ட பெண் எலிகளின் தேர்வுகள், விஞ்ஞானிகளின் தரவரிசைப் பட்டியலின்படியே நிகழ்ந்தன.

ஜாதகப் பரிமாற்றங்கள், விசாரணைகள், பரிந்துரைகள் என்று எதுவும் இல்லாமல் பெண் எலிகள் தத்தமக்கான ஆண்களைத் தேர்வு செய்ததற்கான அடிப்படைத் தகுதியை, இம்மாதிரியான மிக நுண்ணிய ஆய்வுகளின் மூலம் கண்டறிந்தார்கள் ஆய்வறிஞர்கள். 

எலிகள்[ஆண்] பலவாயினும், ஒவ்வொன்றின் உடம்பிலிருந்தும் வெளிப்பட்டடவை வேறு வேறான  வாசனைகளே என்கிறார்கள் அவர்கள். 

முதலில் அனுப்பப்பட்ட பெண் எலி, தனக்கான நம்பர் 1 ஆண்மையாளனைத் தேர்ந்தெடுத்தது அதன் உடம்பிலிருந்து வெளிப்பட்ட மிகையான வாசனையை நுகர்ந்துதான். பிற தேர்வுகளும், மாறுபட்ட வேறு வேறு வாசனைகளின் அடிப்படையிலேயே நிகழ்ந்துள்ளனவாம்.

இது போன்ற தொடர் ஆய்வுகளின் மூலம், பிற விலங்கினங்களும் தத்தமக்கான இணையைத் தேர்ந்தெடுப்பது வாசனை நுகர்வின் மூலம்தான் என்கிறார்கள் ஆய்வு நிகழ்த்திய அறிஞர்கள்.

                                                *                   *                 *             

ஆதாரம்: https://groups.google.com/g/panbudan/c/PbZ3AFan2Mc

கட்டுரையாளர் 'வில்லன்' அவர்களுக்கு என் நன்றி.

கூடுதல் தெளிவு கருதி, கட்டுரை நடையைச் சற்றே மாற்றியமைத்துள்ளேன் என்பது அறியத்தக்கது.

=============================================================================================