அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 28 மே, 2021

எழுத்தாளர் 'சாரு'வும் தமிழ் எழுத்தாளரை நேசிக்கும் ஸ்டாலினும்!!

 

'குமுதம்' இதழில், 'சொல் தீண்டிப் பழகு' என்னும் தொடரை எழுதும் எழுத்தாளர் 'சாரு நிவேதிதா', தமிழ் எழுத்தாளர்களின் மதிப்பை உயர்த்தும் வகையிலானதொரு 'ஏற்பாடு' குறித்துத் தமிழக முதல்வரிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.

குமுதம் இதழில் இடம்பெற்ற, அக்கோரிக்கை தொடர்பான கட்டுரை[02.06.2021]யின் இறுதிப் பகுதி:

'.....கடைசியாக, உங்களை மிகவும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். அந்தக் கலைமாமணி என்ற விருதை நிறுத்திவிடுங்கள். அல்லது, அதில் எழுத்தாளர்களைத் தயவு செய்து சேர்க்காதீர்கள். ஒரு சிரிப்பு நடிகரையும் 90 வயது இந்திரா பார்த்தசாரதியையும் சேர்த்து இருவருக்கும் கலைமாமணி விருது கொடுத்தால் அது இந்திரா பார்த்தசாரதி என்ற மூத்த எழுத்தாளரை அவமதிப்பதாகாதா? அதனால்தான், முந்தைய அரசு அந்த விருதைக் கொடுத்தபோது அவர் மறுத்துவிட்டார்.

காரணம், அவர் நோபல் பரிசு பெற வேண்டியவர். ஒன்று செய்யலாம். அரசே எழுத்தாளர்களுக்குத் தனியாக விருது கொடுக்கலாம். ஆனால், கொஞ்சமும் அரசியல், சினிமா தலையீடு இருக்கலாகாது. ஏனென்றால், சினிமாவுக்கென்று தனி விருதுகள் உள்ளன. அதே போல இலக்கியத்துக்கு விருதுகள் தொடங்கலாமே?

கவிதை, நாவல், குறுநாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, அபுனைவு[கட்டுரை], வாழ்நாள் சாதனையாளர்[இந்திரா பார்த்தசாரதி] என்று அதில் பல பிரிவுகள் வைக்கலாம்.

இதற்கெல்லாம் வெறும் சான்றிதழ் கொடுக்காமல் நல்ல கனமான தொகையாகத் தரலாம்[எழுத்தாளன் ஒரு சான்றிதழ்க் காகிதத்தை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போனால் என்ன நடக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்]. 

நோபல் பரிசு பிரபலமானதற்குக் காரணம், அதன் தொகைதான். இந்தியாவிலும் ஞானபீடப் பரிசு முதலில் இருப்பதற்குக் காரணம் அதன் தொகைதான். அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் கொடுக்கிற தொகை மரியாதைக்குரியதாக இருந்தால் நல்லது.

இப்படியெல்லாம் செய்தால், இந்தியா மட்டுமல்ல, உலகமே உங்களைத் திரும்பிப் பார்க்கும். ஏனென்றால், தமிழ்நாட்டில் சினிமா நடிகர்களுக்குக் கொடுக்கப்படும் மரியாதையை உலகம் எழுத்தாளர்களுக்குத் தருகிறது. எனவே, கலாச்சாரத்தில் வங்காளத்தையும் கேரளத்தையும் பின்னுக்குத் தள்ளி, தமிழகம் இந்திய அளவில் முன்னணியில் நிற்க இந்தச் செயல்பாடுகள் நிச்சயம் வழி வகுக்கும்.'

                                                       *                     *                 *

கொடுந்தொற்று 'கொரோனா'வுடனான கடும் போர் முடிவுக்கு வந்தவுடன் எழுத்தாளர் 'சாரு'வின் இந்தக் கோரிக்கையை உறுதியாக நிறைவேற்றுவார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

ஏனென்றால், அவர் சமூக மேம்பாட்டில் எழுத்தாளர்களின் முக்கியப் பங்களிப்பை அறிந்துணர்ந்து அவர்களை மதித்துப் போற்றத் தெரிந்தவர்.

'சாரு' அவர்களுக்கும், 'குமுதம்' வார இதழுக்கும் நம் நன்றி! 

======================================================================================