திங்கள், 31 மே, 2021

'பொறியியல்' கல்வியைத் தமிழில் கற்றால் 'வேலை' கிடைக்குமா?

 

மிழ்வழிப் பொறியியல் கல்வியின் பயன் குறித்துச் சிந்திப்பதற்கு முன்னால், கடந்த காலத்தில், தமிழில் கற்பித்தலுக்கான முயற்சிகளின் விளைவுகள் பற்றி அறிவது மிகவும் முக்கியம்.

*கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து அண்ணா பல்கலைக்கழகம் உள்பட சில அரசுப் பொறியியல் கல்லூரிகளில் சில பாடப் பிரிவுகள் தமிழில் நடத்தப்பட்டு வருகின்றன.

*இவற்றிற்கான பாடப் புத்தகங்கள் எதுவும் அச்சிடப்படாததால், வகுப்புகளில் ஆர்வத்துடன் சேர விரும்பிய மாணவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்தது. இதனால் தமிழ்வழி பொறியியல் வகுப்புகளுக்கான இடங்களும் கணிசமாகக் குறைக்கப்பட்டு விட்டன. 

*பாடத்திட்டம், புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்தாதது, பாடத் திட்டத்துக்கும் வேலைக்கும் தொடர்பில்லாதது உள்ளிட்டவை மிக முக்கியமானவை. அதாவது, பாடத்தின் அடிப்படை நோக்கம் தெரியாமலேயே மாணவர்கள் உள்ளனர்.

*அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் படிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அதில் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை. தொடர்ந்து, தமிழில் படித்தால் வேலை கிடைக்காது என்ற சூழலை உருவாக்கிவிட்டார்கள். இதற்குக் காரணம், குறிப்புத் தாள்களைத் தமிழில் கொடுக்காததுதான்.

*போட்டித் தேர்வுகள் நடத்தப்படும்போது, அவற்றிற்குத் தயாராகும் வகையில் கல்லூரிப் படிப்பின் கடைசி இரண்டு ஆண்டுகளில் திறன் வளர்க்கும் பாடங்களை நடத்த வேண்டும். தமிழ்வழியில் கற்ற மாணவர்களுக்கு நடத்தப்படவில்லை.

*தமிழ்நாட்டில் பட்டம் மற்றும் பட்டமேற்படிப்புகளைத் தமிழ்வழியில் கற்பிக்க வேண்டும் என்ற இயக்கம், பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல் பிரிவுகளில் தமிழ்வழியில் கற்பிக்கப்படுகின்றன. இங்கு முதலாம் ஆண்டில் சில கையேடுகளைக் கொடுத்தும் படிக்க வைக்கின்றனர். ஆனால், தமிழ்வழியில் படிக்கின்ற மாணவர்களுக்குச் சரியான பாடப்புத்தகங்கள் எதுவும் அரசால் தரப்படவில்லை.

*கருணாநிதி முதல்வராகவும் நெடுஞ்செழியன் கல்வி அமைச்சராகவும் இருந்த காலகட்டத்தில் மத்திய அரசின் நிதி உதவியோடு இளங்கலை மற்றும் முதுகலைப் பட்ட வகுப்புகளுக்கு அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பிரிவுகளுக்குப் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இதற்கான பணிகளைத் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் செய்தது. இதனால் தரமான புத்தகங்கள் வெளிவந்தன. அவற்றைத் இப்போது மறுபதிப்பும் செய்துள்ளனர். ஆனால், பொறியியல் பாடப்பிரிவுகளுக்கு இதுபோன்ற முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

*அண்ணா பல்கலைக்கழகம் தவிர சுயநிதிக் கல்லூரிகளில் தமிழ்வழியில் வகுப்புகள் நடைபெறுவதில்லை. 'ஆங்கிலத்தில் படிப்பது மட்டுமே கல்வியின் தரத்தை உயர்த்தும்' என்னும் பொய்யானதொரு பரப்புரையை அவர்கள் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள்.

*தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வி.ஐ.சுப்ரமணியம் துணைவேந்தராக இருந்த காலகட்டத்தில் ராமசுந்தரம் என்பவர் அறிவியலுக்குக் கலைச்சொற்களை உருவாக்கினார். இதுதவிர, மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கும் அகராதிகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். பின்னர், அம்முயற்சி தொடரவில்லை.

*கடந்த சில வருடங்களாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் படித்த மாணவர்கள், சரியான வழிகாட்டல் இல்லாமல் தேர்வை ஆங்கிலத்திலேயே எழுதத் தொடங்கிவிட்டனர்.

*பல ஆண்டுகள் சுயநிதிக் கல்லூரிகளில் ஆசிரியராகப் பணிபுரிந்துவிட்டு அரசுக் கல்லூரிக்கு வேலைக்கு வரும் ஆசிரியர்களுக்குத் தமிழ்வழியில் வகுப்பெடுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை.

இவை நிகழ்ந்து முடிந்தவை. இனி.....

"ஏ.ஐ.சி.டி.இ அளித்துள்ள அனுமதியால் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துவிடப் போகின்றன?" என்று கல்வியாளர் `ஆனந்தம்' செல்வகுமார் அவர்களிடமும், பேராசிரியர் சிவக்குமார் அவர்களிடமும் 'பிபிசி தமிழ்' கேட்டபோது, அவர்கள் அளித்துள்ள பதில்களில், குறிப்பிடத்தக்க அம்சங்கள்: 

ல லட்சம் செலவு செய்து நான்காண்டுகள் படிக்கும் மாணவர்கள், தொழில் துறை எதிர்பார்க்கின்ற திறன் இல்லாதவர்களாக வெளிவருகிறார்கள். இதன் பின்னணியில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. .

தமிழகத்தில் 70 சதவீதத்துக்கு மேல் அரசுப் பள்ளிகள் உள்ளன. இங்கு பெரும்பாலும் தமிழ்வழியில் படித்த மாணவர்கள்தான் உள்ளனர். இவர்கள் பொறியியல் வகுப்புகளுக்கு வரும்போது கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போன்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். `என்ன மொழியில் படிக்கிறோம்?' என்பதே தெரியாமல் மனப்பாடம் செய்யும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். இவர்களில் 86 சதவிகிதம் பேர் படிப்புக்குச் சம்பந்தமில்லாத வேலைகளில் உள்ளதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. 

மதிப்பெண்ணுக்காகப் படிப்பதால்தான் படிப்பின் மீது வெறுப்பு ஏற்படுகிறது. பொறியியல் படிக்கும் மாணவர்கள்தான் ஆராய்ச்சியில் ஈடுபட முடியும். இங்கு பிடிக்காமலேயே படிக்கின்றனர்.

தற்போது தாய்மொழியிலேயே படிப்பதன் மூலம் பிளஸ் 2 படிப்புக்குப் பிறகும் கல்வியுடனான தொடர்பு நீட்டிக்கப்படுகிறது. ஜப்பான், சீனா உள்பட பல நாடுகளில் தாய்மொழியில்தான் படிக்கின்றனர்.

தாய்மொழியில் படித்தால் புரிந்துகொண்டு படிக்க முடியும். ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பொறியியல் கல்வியில், பல்கலைக்கழகப் புத்தகங்கள் மட்டுமல்லாமல் குறிப்புப் புத்தகங்களையும் தாய்மொழியில் கொடுப்பதற்கு உதவினால்தான் மாணவர்களால்  வெற்றிகரமானவர்களாக மாற முடியும்.

இந்தியாவில் 'கேட்' தேர்வு உள்பட முக்கியமான தேர்வுகளையும் தமிழில் நடத்த வேண்டும். நான்காண்டுகள் கல்லூரியில் படிக்கும்போது 80 சதவிகிதம் குறிப்புகளைத் தாய்மொழியிலும், 20 சதவிகிதத் தொழில்நுட்ப ரீதியான குறிப்புகளை ஆங்கிலத்திலும் கொடுத்தால் வேறு சில தேர்வுகளில் அவர்கள் பங்கேற்பதற்கு வசதியாக இருக்கும்.

இவ்வகையில் பாடத் திட்டங்களைச் செயல்படுத்தும்போது நிறையச் சாதனைகளை நிகழ்த்தக் கூடியவர்களாகத் தமிழ் மாணவர்கள் இருப்பார்கள்.

ஏ.ஐ.சி.டி.இயின் புதிய உத்தரவால், திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பில்லாமல் அழுத்தப்படும் மாணவர்கள் வெளியே வருவதற்கான சூழல் உருவாகியுள்ளது.

தமிழ்வழியில் பட்டவகுப்புகளை நிறைவு செய்த மாணவர்கள், முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகளை நிறைவு செய்துவிட்டு ஆராய்ச்சியாளர்களாகப் பணிபுரிகின்றனர். கல்லூரிக் காலங்களில் செமினார் வகுப்புகளில் இவர்களால் சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியவில்லை. அதுவே, அவர்கள் பணியில் சேர்ந்த பிறகு பேச்சு வழக்கில் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்கள்.

பேச்சு வழக்கில் ஆங்கிலத்தை எளிதாகக் கற்றுக் கொள்ளலாம்..  

பாலிடெக்னிக் கல்லூரிகளில் தமிழில் புத்தகங்கள் உள்ளன. அவற்றையும் தனியார் பதிப்பகங்கள்தான் வெளியிட்டுள்ளன. கிண்டி பொறியியல் கல்லூரியில் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களுக்குக் குறிப்புகளை மட்டும் வழங்கியுள்ளனர். 

அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் மட்டும் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்களுக்கு தமிழ்வழிப் புத்தகம் கிடைத்துள்ளது. இதுவும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட புத்தகம் அல்ல. மாணவர்கள் வெளியில் வாங்கித்தான் படித்து வருகின்றனர். வகுப்புகளில் சில ஆசிரியர்கள் தமிழ்ச் சொற்களைக் கூறுவார்கள். அதை மாணவர்கள் குறிப்பெடுத்துக்கொண்டு ஆங்கிலத்தில் எழுதலாம் அல்லது தமிழில் எழுதலாம். 

பொறியியல் கல்லூரிகளில் தமிழில் படிக்க நடவடிக்கை எடுத்தால் கிராமப்புற மாணவர்களை அதிகப்படியாக ஈர்க்க முடியும். கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு நேர்காணல்களை எதிர்கொள்ளும் திறனறி தேர்வுகளுக்கும் தமிழில் புத்தகங்கள் இல்லை. அதற்கான பயிற்சிகளைக் கொடுத்தால் வேலைவாய்ப்பிலும் மாணவர்களால் சாதிக்க முடியும்.

`ஏ.ஐ.சி.டி.இயின் அனுமதியைத் தொடர்ந்து தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?' என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியிடம் 'பிபிசி தமிழ்' தொடர்பு கொண்டது.

இதுதொடர்பாக விளக்கமளித்த அவரின் உதவியாளர், ``இங்கு பொறியியல் வகுப்புகள் தமிழ்மொழியில் கற்பிக்கப்பட்டு வருகின்றன. கலைஞர் இருக்கும்போதே இதனைக் கொண்டுவந்தார். சில பாடங்கள் மட்டும் தியரி வடிவில் உள்ளன. அதேநேரம், செய்முறை வகுப்புகள் ஆங்கிலத்தில் உள்ளன. சில பாடப் புத்தங்களைத் தமிழில் கற்பிக்க முடியாத சூழலும் உள்ளது. தமிழில் படிப்பதால் வேலைவாய்ப்பில் எந்தவிதச் சிரமங்களும் இருக்கப் போவதில்லை. தற்போது முதல்வர் உடனான கூட்டத்தில் அமைச்சர் இருப்பதால் இதுகுறித்துப் பிறகு பேசுவார்" என்றார்.

======================================================================================

https://www.bbc.com/tamil/india-57302003   [31 மே 2021, 01:42 GMT]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக