"மனப்பூர்வமாய்க் கடவுளை வேண்டிக்கொண்டால், அத்தனைத் துன்பங்களும் அகலும்" என்று காலங்காலமாக மதவாதிகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
கூட்டுப் பிரார்த்தனை, தனி மனிதப் பிரார்த்தனை என்று பல்வகைப் பிரார்த்தனைகள் மூலம் ஆண்டாண்டுக் காலமாய்க் கடவுளை வேண்டிக்கொள்வது நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆயினும், மக்கள் அனுபவிக்கும் துன்பங்களின் அளவு அதிகரித்துக்கொண்டே இருப்பது மறுக்க இயலாத உண்மை.
"ஏன் இந்த அவலம்?" என்று கேட்கும் துணிவு நம்மவர்களுக்கு இல்லை. காரணம், மதவாதிகளின் மீது இவர்கள் கொண்டுள்ள அதிகப்படியான நம்பிக்கை; இது விசயத்தில் கேள்வி கேட்பது பாவ காரியம் என்னும் மூடநம்பிக்கை.
அந்நாள் முதல் இந்நாள்வரை, "கடவுளை வழிபடுவதால் நன்மை விளைகிறது என்பதை, ஒரு நடப்பு நிகழ்வு'[Live] மூலம் நிரூபித்துக் காட்டுமாறு எவரும் மதவாதிகளிடம் கேட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை.
நாம் கேட்கிறோம்:
“கடவுளின் கிருபையால் ஊமை பேசினார்; முடமானவர் எழுந்து நடந்தார்; மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய் குணமானது” என்பன போல நாளும் பரப்புரை செய்துகொண்டிருக்கும் மதவாதிகளே.....
‘இவர் மரணமடைந்தார்’ என்று மருத்துவர் குழு சான்றளித்த ஒருவரை[கொரோனா நோயாளியாகவும் இருக்கக்கூடும்] உங்களின் கடவுள்களை வேண்டிக்கொள்வதன் மூலம் பிழைக்க வைக்கலாம்.
அல்லது.....
ஊமையைப் பேச வைத்தல், முடமானவரை நடக்க வைத்தல், மருத்துவர்களால் கைவிடப்பட்ட[செத்துவிடுவார் என்று நூறு விழுக்காடு உறுதி செய்யப்பட்ட நபரைப் பிழைக்க வைத்தல் என்றிவற்றில் ஏதாவது ஒன்றையோ மூன்றையுமோ நிகழ்த்திக் காட்டுங்கள்.
இந்நிகழ்வுகளைக் காட்சி ஊடகங்கள்[T.V.] வாயிலாகவும், காணொலிகள்[Video] வாயிலாகவும் உலக மக்கள் அனைவரும் பார்த்து ஆனந்தப் பரவசத்தில் மூழ்கிட ஏற்பாடு செய்யலாம். செய்வீர்களா?[மதவாதிகள், தனித் தனியாகவும் இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யலாம்; அனைத்து மதத் தலைவர்களும் கலந்தாலோசித்து ஒருங்கிணைந்தும் நடத்திக் காட்டலாம்].
இத்தகையதொரு சாதனை உங்களால் நிகழ்த்தப்படுமேயானால், மதங்களின் வரலாற்றில் இதுவரை நிகழாத அதிசய நிகழ்வாக இது பதிவு செய்யப்படும்; உங்களின் பரப்புரை இல்லாமலே மதங்கள் வளர்ச்சியடையும்.
உலகம் உள்ளளவும் மக்களின் மனங்களில் நீங்கள் நீங்காத இடம்பெறுவீர்கள்!
மதவாதிகளே, இந்தச் சிறியேனின் கோரிக்கையை ஏற்பீர்களா?
"ஆம்" எனின், இக்கணமே உங்களின் செயல்பாட்டைத் தொடங்கலாம்.
செய்வீர்கள்தானே?!
==========================================================================
மிக மிக மிக முக்கியக் குறிப்பு:
இது மனப்பூர்வமாக முன்வைக்கப்படும் கோரிக்கை; மதவாதிகளின் மனங்களை நோகடிக்கும் எண்ணம் கிஞ்சித்தும் இல்லை என்பதை உறுதிபடக் கூறுகிறேன்.
நன்றி!