'உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான், நாடு முழுதும் மருத்துவக் கல்வியில் சேர, நீட் தேர்வுக்கான சட்டம் இயற்றப்பட்டு, அது மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. எனவே, இதில் எதுவும் செய்ய முடியாது என, எல்லா மாநில அரசுகளும், நீட் தேர்வை ஏற்றுக் கொண்டு விட்டன.....'
தீர்ப்புக்கு முன்னரே 'நீட்' தேர்வுக்கான ஏற்பாடுகளை நடுவணரசு செய்து முடித்துவிட்டது என்பதை இருட்டடிப்புச் செய்துவிட்டது இந்த இதழ்.
//நடுவணரசு நீட் தேர்வை நடத்த முற்பட்டபோதுதான் பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், புதுச்சேரி, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் 'நீட்'ஐ எதிர்த்து வழக்குத் தொடுத்தன என்பது ஊடகச் செய்தி//['ஆதாரம்: 'நீட் தேர்வுக்கு எதிராகப் பொங்கி எழுந்த 7 மாநில முதலமைச்சர்கள்:' https://tamil.asianetnews.com/politics/7-state-chief-ministers-who-raged-against-neet-exam-vck-party-suggests-that-eps-should-join-it--qftbqv].
'நீட்'டுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகுதான் அதை, வழக்குத் தொடுத்த மாநிலங்கள் ஏற்றுக்கொண்டன என்பதே உண்மை. தமிழ்நாட்டை ஆண்ட அப்போதைய அ.தி.மு.க. அரசு மௌனம் சுமந்திருந்தது.
தி.மு.க., ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், முதல்வர் மு.க. ஸ்டாலின், 'நீட்' தேர்வின் பாதிப்புகளை ஆராய அறிஞர் குழுவை அமைத்துள்ளார்.
குழுவின் ஆய்வுரை கிடைக்கப்பெற்றவுடன், அதைச் சார்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ள அவர், 'நீட்'ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த ஏழு மாநில முதல்வர்களுக்கும் குழுவின் ஆய்வுரைகளை அனுப்பி வைத்திடல் வேண்டும் என்பது நம்மவர் கோரிக்கை ஆகும்..
அது, தமிழ்நாடு அரசுடன் அவர்களும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பாக அமையும்.
ஏனைய மாநில முதல்வர்களுக்கும் அனுப்பினால், அவர்களும் 'நீட்' குறித்த அவர்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்வார்கள் என நம்பலாம்.
இச்செயல்பாடு குறித்து, முதல்வர் அவர்கள் ஏற்கனவே சிந்தித்திருக்கக்கூடும். எனவே, இது ஒரு 'நினைவூட்டல்' மடல் மட்டுமே.
===============================================================================================