பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 2 ஜூன், 2021

கடவுள் வழிபாடு..... ஓர் எச்சரிக்கை!!!


 லைபேசியின் 'கிர்ரிங்...கிர்ரிங்...' ஓசை.

கோவையிலிருந்து மணிவண்ணனின் தாய்மாமன் சென்னியப்பன் அழைத்திருந்தார்.

"வணக்கம் மாமா."

"ஏதோ ஒரு வணிக நிறுவனத்திலிருந்து நேர்முகத் தேர்வுக்குப் போய்ட்டிருக்கேன்னு முந்தாநாள் சொன்னியே, என்ன ஆச்சு?" என்றார் சென்னியப்பன்.

"நான் தேர்வாகல" என்று வருத்தம் தோய்ந்த குரலில் பதிலளித்தான் மணிவண்ணன்.

"அவங்க கேட்ட கேள்விகளுக்குச் சரியா பதில் சொல்லலையா?"

"அவங்க என்னைக் கேள்வியே கேட்கல." 

"என்னடா சொல்லுறே?"

"நேர்முகத் தேர்வுக்கான நேரம் 'காலை 09.55'ன்னு குறிப்பிட்டிருந்தது. நான் சரியா '10.00' மணிக்கெல்லாம் அலுவலகத்துக்குப் போய்ட்டேன். ஆனா, 'இது ஒரு வணிக நிறுவனம். நேரப் பராமரிப்பு ரொம்ப ரொம்ப முக்கியம். இதைப் போட்டியாளருக்குப் புரிய வைக்கத்தான் தேர்வு நேரத்தை ஒன்பது ஐம்பத்தைந்துன்னு குறிப்பிட்டிருந்தோம். கடிகாரத்துக்குக் கடிகாரம்  நேரம் கொஞ்சம் வித்தியாசப்படலாம். நீ பத்து நிமிசம் முன்னாடியே வந்திருக்கணும். நீயோ பத்து நிமிசம் தாமதமா வந்திருக்கே. தேர்வில் கலந்துக்கிறதுக்கான தகுதியை இழந்துட்டே. நீ போகலாம்'னு சொல்லி அனுப்பிட்டாங்க."

"முன்கூட்டியே போயிருக்கலாமே?"

"போயிருக்க முடியும். என்னோட 'பைக்கில்'தான் கிளம்பினேன். போக்குவரத்து நெரிசலும் இல்ல. வழியிலிருந்த கோயிலுக்குப் போயி சாமி கும்பிட்டதில் தாமதம் ஆயிடிச்சி."

"தேர்வுக்குப் போன உனக்கு அது முடியறவரைக்கும் வேறு சிந்தனையே வந்திருக்கக் கூடாது. தேர்வுக்காகப் புறப்பட்டுப் போயிட்டிருக்கும்போது, குறுக்கே கோயில் வழிபாடு எதுக்கு?" -கடிந்துகொண்டார் சென்னியப்பன். 

"என்னதான் மனசுக்குள்ள வேண்டிகிட்டாலும் கோயிலுக்குப் போயி நெடுஞ்சாண்கிடையா விழுந்து கும்பிடுறதில் கிடைக்கிற திருப்தியே தனி. நீங்க சாமி இல்லேன்னு சொல்வீங்க. நான் சாமியை நம்புறவன். போற வழியில்தானே கோயில், கும்பிட்டுப் போலாம்னு நினச்சேன். அம்மாவும் சொல்லி அனுப்பினாங்க."

"ஒரு வேலையைச் செய்ய ஆரம்பிச்சா, அதைச் செஞ்சி முடிக்கிறவரைக்கும் வேறு எந்தவொரு நினைப்புக்கும் மனசில் இடம் தரக்கூடாது. நீ தப்புப் பண்ணிட்டே." -வார்த்தைகளில் மிகுந்த வருத்தம் விரவியிருந்தது.

"கோயிலுக்குப் போனது தப்பு, சரி. போகும்போது மனசுக்குள் வேலை கிடக்கணும்னு கடவுளை வேண்டிகிட்டேன். அதுகூடத் தப்பா மாமா?"

பத்துப் பதினைந்து வினாடிகள் இடைவெளி கொடுத்துப் பேசினார் சென்னியப்பன். 

"பசி எடுத்தா சாப்பிடுறோம். சாப்பிட்டு முடிக்கிறவரைக்கும் அதில்தான் கவனம் செலுத்துறோமே தவிர, 'கடவுளே, நான் சாப்பிடுற உணவு நல்லா ஜீரணம் ஆகணும்'னு வேண்டிக்கிறோமா? இல்ல.

அந்தரங்க உறவுகளின்போது, 'சுகித்திருக்கும் நேரத்தை நீ நீட்டிக்கணும்'னு யாரும் கடவுளை வேண்டிக்கிறதில்ல. 

அப்படி ஒருத்தன் வேண்டிக்கிறானா, அவன் அடிமுட்டாள்னு அர்த்தம்.

இதுகளைப் போலத்தான் மற்ற வேலை நேரங்களில் கடவுளை நினைக்கிறதும்.

செய்ய எடுத்துக்கொண்ட வேலையைக் கவனம் பிசகாம செஞ்சி முடிச்சிட்டுச் சாமி கும்பிடலாம்; கும்பிடாமலும் இருக்கலாம். அது, அவரவர் மனப் பக்குவத்தைப் பொருத்தது. என்ன நான் சொன்னதெல்லாம் மனசுல பதிஞ்சுதா?" என்றார் சென்னியப்பன். 

"நீங்க சொன்னதெல்லாமே பதிஞ்சுது. சொன்ன ரெண்டு உதாரணமும் வெகு ஆழமா மனசுல பதிஞ்சிருக்கு" என்று சொல்லி மெலிதாகச் சிரித்தான் மணிவண்ணன்.

பதிலுக்கு வாய்விட்டுச் சிரித்தார் சென்னியப்பன்.

=======================================================================================================================