வியாழன், 1 ஜூலை, 2021

அவர்கள் ஆசைப்படுவது 'அது'க்கு மட்டுமே!


ஒரு புற்றுநோய் மருத்துவமனையின் நான்கு நாள் நிகழ்வைக் காட்சிப்படுத்துகிறது கீழ்வரும் கட்டுரை.

"புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அத்தையைச் சிறப்புச் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தோம்.

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அந்த வார்டு முழுவதும் இருந்தனர். ஒன்பது வயதுக் குழந்தை முதல் 70 வயது மூதாட்டிவரை பலர் அங்கு இருந்தனர். கீமோதெரபியால் உடல் உருக்குலைந்து மிகவும் பலவீனமாக இருந்தாலும், வாழ வேண்டும் என்னும் உறுதி அவர்களுடைய கண்களில் தென்பட்டது.

வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்பதுபோல் எங்கள் அத்தனைபேரையும் இன்முகத்துடன் அவர்கள் அனைவரும் வரவேற்றனர்.

பலர் தங்கள் பலவீனத்தையும் மீறி, தள்ளாடி நடந்துவந்து என் அத்தையின் கை பற்றித் தைரியமாய் இருக்கும்படி ஊக்கமளித்தனர். “நாலு நாள் கீமோதெரபி இருக்கும். அதை மட்டும் எப்படியாவது சமாளித்துவிடு” என்றனர்.

“முடி கொட்டிடும். கொட்டுனா என்ன மசுரு போனாப்போகுது” என்று ஒரு மூதாட்டி என் அத்தையிடம் சொல்லியதைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள்.

என் அத்தையின் பக்கத்துப் படுக்கையில் தேவதை போன்ற சுமார் இருபது வயதுப் பெண் படுத்திருந்தாள். ட்ரிப்ஸ் மூலம் செலுத்தப்படும் மருந்து உள்ளே செல்லாததால் அவளின் கால்கள் வீங்கியிருந்தன. அவளின் அம்மா அவளின் வீங்கிய கால்களைத் தடவியபடியே, கையில் புத்தகத்துடன் கண்களில் கண்ணீர் வழிய, தேவதையின் நோயைக் குணப்படுத்தும்படி கடவுளை வேண்டிக்கொண்டிருந்தார்.

“அம்மா, நான் விழிச்சிருக்கும்போது என்னோட பேசிட்டிரு. தூங்குனப்புறம் கடவுளை நினைச்சிக்கோ” என்றாள் அந்தப் பெண்.

கடவுளை நினைத்து முணுமுணுத்துக்கொண்டிருந்த அம்மா இப்போது அழ ஆரம்பித்தாள்.

“ஏன்மா அழறே? அழுவதால் ஏதும் மாறப்போகுதா” என்றாள் மகள், சலனமற்ற குரலில்.

மறுநாள் காலை அத்தையைப் பார்க்கச் சென்றோம். அவருக்கு அருகிலிருந்த தேவதைப் பெண்ணின் படுக்கை காலியாக இருந்தது. அம்மா வைத்திருந்த புத்தகம் மட்டும் படுக்கையில் சீந்துவாரற்றுக் கிடந்தது.

அந்த அறையில் சுமார் 50 படுக்கைகள் இருந்தன. சில நோயாளிகள் துணையுடனும் பலர் துணையற்றும் இருந்தனர்.

வலிகளும் இழப்புகளும் அவர்களைப் பாதித்ததாகத் தெரியவில்லை. பிறருடைய ஆதரவோ அனுதாபமோ அவர்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை. அதை அவர்கள் எதிர்பார்த்ததாகவும் தெரியவில்லை.

மற்ற நோயாளிகள் சொன்னபடி, முதல் ஊசியை ஏற்றுக்கொள்ள அத்தையின் உடம்பு சிரமப்பட்டது. பின்னர், போடப்பட்ட இரண்டு ஊசிகளைச் சற்றே சிரமத்துடன் ஏற்றுக்கொண்டது.

இரண்டு நாட்கள் கழித்து நாங்கள் சென்றபோது பல படுக்கைகளில் புதியவர்கள் நிறைந்திருந்தார்கள். ஏற்கனவே இருந்தவர்களுக்கு என்ன ஆயிற்று?

மூன்றாம் நாள் சாயங்காலம் அந்த மூதாட்டியின் படுக்கை காலியாக இருந்ததைப் பார்க்க முடிந்தது. “வெளியே இருக்கிறவங்க எல்லாம் ஆயிரம் வருசமா வாழ்ந்துடப்போறாங்க. இங்க வர்றவங்கள்ல பல பேர் கொடுத்து வச்சவங்க. சீக்கிரமே போய்ச் சேர்ந்துடுறாங்க” என்று யாரிடமோ ஒரு  நர்ஸ் உணர்ச்சியற்ற குரலில் சொல்லிக்கொண்டிருப்பது கேட்டது.

அத்தை உற்சாகமாகவே இருந்தார். அவ்வப்போது அழுத மாமாவைத் தேற்றும்படி சொன்னார். வாசிக்கப் புத்தகம் கேட்டார். கொண்டுவந்து கொடுத்தேன். வாசித்தார்.

கைபேசியிலிருந்த அவரின் சிறுவயதுப் படங்களை என்னிடம் காட்டி அந்த வயதில் நடந்த சுவையான சம்பவங்களைக் கதை போலச் சொன்னார். சொல்லிக்கொண்டிருந்தவர் திடீரென, “இன்னும் ஒரு ஊசிதான் மிச்சம் இருக்கு. நீ கிளம்பு. நாளை காலையில் பார்ப்போம்” என்றார்.

அடுத்த நாள் காலையில் அவரை உயிரோடு பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை.

வாழ்க்கை விசித்திரமானது; மர்மங்கள் நிறைந்தது. மனிதர்களின் ஆசைகள் கணக்கில் அடங்காதவை. இந்தப் புற்று நோயாளிகளின் ஒரே ஒரு ஆசை உயிர்வாழ வேண்டும் என்பது மட்டுமே. ஆனால், பாவம், இவர்களில் பெரும்பாலோர் கொடுத்துவைக்காதவர்கள்."
====================================================================================
நன்றி: சாந்தி[திருச்சி] எழுதிய கட்டுரை[‘பெண் இன்று’, ‘தி இந்து’[03.09.2017] நாளிதழ்.

கட்டுரைக்குச் சாந்தி கொடுத்த தலைப்பு: ‘அந்தக் கடைசி நான்கு நாட்கள்’. 

இந்தப் பதிவின் தலைப்பு அடியேனின் கைங்கரியம்! கட்டுரையின் அளவையும் சற்றே குறைத்திருக்கிறேன். சாந்தி மன்னிப்பாராக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக