* * *
இந்த ஆசனவாய்ப் பயிற்சியை, கால்களை மடித்து, சப்பணமிட்டு அமர்ந்து செய்யலாம். மல்லாந்து படுத்துச் செய்வதில் உள்ள சில அசௌகரியங்கள் இதில் இல்லை.
யோகாசனப் பயிற்சிகளை மேற்கொள்ளும்போது எவ்வாறு அமர்கிறோமோ அதே முறையில் அமர்ந்தவாறு ஆசனவாயைச் சுருக்கும் பயிற்சியைத் தொடங்கலாம். ஆண், பெண் என இருபாலரும் செய்யலாம். ஆண்கள் கூடுதல் நன்மைகளைப் பெறுகிறார்கள்.
இந்தப் பயிற்சி மூன்று நிலைகளை உள்ளடக்கியது.
ஒன்று: ஒரு முறை ஆசனவாயை[மலத் துவாரத் தசை] இறுக்கமாகச் சுருக்கி நிறுத்திய[வெளியேறும் சிறுநீரை வெளியேறாமல் கட்டுப்படுத்துவது போல] பிறகு, வாய்ப்பகுதி தானாகவே இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். மீண்டும் சுருக்குதல், நிறுத்துதல் என்று பயிற்சியைத் தொடர்தல் வேண்டும். இதைப் பதினைந்து நிமிடங்களுக்குக் குறையாமல் செய்தல் வேண்டும். பின்னர் இதற்கான நேரத்தைத் தினசரி அரை மணி நேரமாக அதிகரிக்கலாம்.
*இப்பயிற்சி மூலம் ஆசனவாய்த் தசைகள் வலுவடைவதால், 'மூல நோய்' வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைகிறது.
இரண்டு: ஆசனவாயைச் சுருக்குகிற அதே வேளையில், அடிவயிற்றை உள்ளுக்கிழுக்கும்[எக்குதல்... முரட்டுத்தனம் கூடாது] பயிற்சியையும் சேர்த்துச் செய்தால் கூடுதல் நன்மைகளைப் பெறலாம்.
*ஆண்களுக்கு மட்டுமே உள்ள 'பிராஸ்டேட்'[Prostate Gland] எனப்படும் 'காமநீர்ச் சுரப்பி' வீக்கம் அடைவது தவிர்க்கப்படுகிறது என்பதே அந்த நன்மையாகும்.
*'குடலிறக்க நோய்'[Hernia] நெருங்காது என்றும் உறுதிபடச் சொல்லலாம்.
மூன்று: மேற்கண்ட பயிற்சிகளை ஒருசேரச் செய்யும் அதே வேளையில், மூச்சுக் காற்றை நன்கு இழுத்து, சிறிது நேரம் நிறுத்திப் பின்னர் மெதுவாக வெளியேற்றுதலைச் செய்யலாம்.
இந்தச் சுவாசப் பயிற்சியால், *ஆக்சிஜன் என்னும் உயிர்க்காற்று, குருதியில் கலந்து உடம்பு முழுக்கப் பரவுகிறது; நுரையீரலில் தேங்கியுள்ள 'சளி' வெளியேற்றப்படுகிறது.
கூடுதல் பலன்: ஆசனவாய் சுருங்கி விரியும் அதே வேளையில், 'ஆண் குறி'யில் உள்ள நரம்புகளும் தசைகளும் பல முறை விரிந்து சுருங்குவதால் அவை வலுவடைகின்றன. இதனால் *'சேர்க்கை'யின்போது, எளிதில் விந்து வெளியேறாமலிருக்கவும் இப்பயிற்சி உதவுதாகச் சொல்கிறார்கள்[இப்பயிற்சி குறித்துப் பெண்களே[!!!] யூடியூபில் விரிவாகப் பேசுகிறார்கள் என்பது அவசியம் அறியத்தக்கது].
மேற்கண்ட இந்தக் கூட்டுப் பயிற்சிகளை, இதமான 'சுருக்' வெய்யிலில் அமர்ந்து செய்தால், *ரத்தக் குழாய்களில் மிகையாகப் படிந்துள்ள கொழுப்பு கரைவதும், உடம்புக்குத் தேவையான வைட்டமின் 'D' கிடைப்பதும் சாத்தியமாகிறது.
எச்சரிக்கை!
ஒரு சில நாட்கள் மட்டுமே பயிற்சி செய்துவிட்டு, 'கிஞ்சித்தும் பலன் இல்லையே' என்று 'பசி'பரமசிவத்தைச் சபிக்க வேண்டாம். சில மாதங்களேனும் செய்த பின்னர்தான் பலன்கள் தெரியவரும் என்கிறார்கள் இத்துறையில் தேர்ச்சி பெற்ற அனுபவசாலிகள்.
இன்றே பயிற்சியைத் தொடங்குங்கள்! என்றென்றும் செய்துகொண்டே இருங்கள்!! பலன் பெற்று இன்புறுங்கள்!!!
====================================================================================