சனி, 3 ஜூலை, 2021

சென்னை 'ஐஐடி'இல் உயர் ஜாதி ஆதிக்கம்! அந்த ஜாதி எது? எவையெல்லாம்?

சென்னை 'ஐஐடி'யில் சாதிப் பாகுபாடு பார்க்கப்படுவதாகப் புகார் தெரிவித்த உதவிப் பேராசிரியர் 'விபின்' தனது பணியைவிட்டு வெளியேறிய நிலையில், அங்குள்ள பணிகளில் முன்னேறிய வகுப்பினரே அதிக அளவில் நியமனம் செய்யப்பட்டிருக்கும் அதிர்ச்சித் தகவல் ஆர்.டி.ஐ., மூலம் அம்பலமாகி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன. 

தாழ்த்தப்பட்டோருக்கான 47 பணியிடங்களில் 5 பேர், பழங்குடியினருக்கான 23 பணியிடங்களில் ஒருவரும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 84 பணியிடங்களில் 29 பேரும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஓ.சி. பிரிவினருக்கு 154 பணியிடங்கள் ஒதுக்கீடு என்ற நிலையில், அதற்கு அதிகமாக அந்தப் பிரிவினர் 273 பேர் பதவி வகிப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அம்பலமாகி உள்ளது. 

இணைப் பேராசிரியர் நியமனத்திலும், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான 27 பணியிடங்களில் 4 பேர், பழங்குடியினருக்கான 13 பணியிடங்களில் ஒருவர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 49 பணியிடங்களில் 19 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். ஆனால், ஒ.சி. பிரிவினருக்கு 90 பணியிடங்கள் என ஒதுக்கீடு இருக்கும் நிலையில், 156 பேர் பணியில் இருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

உதவிப் பேராசிரியர் பணியிலும், ஏறக்குறைய 23 இடங்கள் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் காலியாக உள்ளது. பழங்குடியினருக்கான15 பணியிடங்களில் ஒருவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 53 பணியிடங்களில் வெறும் 18 பேர் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், உதவிப் பேராசிரியர் பணியில் 98 பணியிடங்கள் மட்டுமே முன்னேறிய வகுப்பினருக்கு ஒதுக்கீடு என்ற நிலையில், 170 பேர் தற்போது பதவி வகிக்கின்றனர்.

சென்னை ஐ.ஐ.டி-யில் மொத்தம் உள்ள பதவிகளில், ஓ.சி. பிரிவினர் 599 பேர், அதாவது 87 விழுக்காடு பதவிகளை ஆக்கிரமித்துள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 

ஓ.பி.சி. பிரிவினர் 10 விழுக்காடு, பழங்குடியினர் பிரிவினர் புள்ளி 4 விழுக்காடு, ஆதிதிராவிடர் பிரிவினர் 2 விழுக்காடு மட்டுமே நியமனம் பெற்றுள்ளனர். 

2020ஆம் ஆண்டு டிசம்பர் நிலவரப்படி, உதவிப் பேராசிரியர் நிலையில் தாழ்த்தப்பட்ட பிரிவில் மூன்று பேர், பழங்குடியினர் பிரிவில் ஒருவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பதினோரு பேர், முன்னேறிய பிரிவினரில் 124 பேர் பணிபுரிந்து வருவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், இணைப் பேராசிரியராக, தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 5 பேர், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 13 பேர், முன்னேறிய சமூகத்தில் 123 பேர் பதவியில் உள்ளனர். பேராசிரியர் நிலையில், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 7 பேர், பழங்குடியினர் பிரிவில் ஒருவர், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 37 பேர் மற்றும் முன்னேறிய வகுப்பினர் பிரிவில் 268 பேர் பணிபுரிந்து வருவதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி கல்வி நிறுவனப் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படாததும், ஒரு பிரிவினரின் ஆதிக்கம் அதிக அளவில் இருப்பதும் சாதிப் பாகுபாடு பிரச்சினைக்குக் காரணம் என உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய 'விபின்' மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவித்துள்ளார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பேராசிரியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி நல ஆணைய உறுப்பினர்களை உள்ளடக்கிய விசாரணை அமைப்பை ஏற்படுத்தி விசாரிக்க வேண்டும் என விபின் கோரிக்கை விடுத்ததைச் செய்தால் மட்டுமே புகாரின் உண்மைத் தன்மையை உணர்ந்து அதற்கான தீர்வை எட்ட முடியும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. 

***'சென்னை ஐஐடி' நடுவணரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனம் ஆகும். முன்னேறிய ஜாதியினர் நிகழ்த்திய முறைகேடுகள் நடுவணரசுக்குத் தெரியாமல் போனது எப்படி? 

அது குறித்து விளக்கம் தருவதோடு, அந்த ஆதிக்க ஜாதி எது, அல்லது, எவை என்பதையும் அரசு அறிவித்திடல் வேண்டும்.

இது இந்த நாட்டு நலனில் அக்கறையுள்ளோரின் எதிர்பார்ப்பும் வேண்டுகோளும் ஆகும்!

காணொலி: https://youtu.be/xJv8fGAW5Gk

====================================================================================

https://www.thanthitv.com/News/JustIn/2021/07/03151943/2528025/Chennai-IIT-Issue.vpf    -ஜூலை 03, 2021, 03:19 PM