பக்கங்கள்

புதன், 30 ஜூன், 2021

'நாடி ஜோதிடம்' கேடிகளின் புகலிடமா?

18 வகையான ஜோதிடங்கள் இருந்ததாகச் சொல்வார்கள். அவற்றில், ஜாதக ஜோதிடம், ஆருட ஜோதிடம், எண் கணிதம், கைரேகை ஜோதிடம், மனையடி ஜோதிடம், நாடி ஜோதிடம் ஆகியவையே நடைமுறையில் அதிகம் உள்ளன. 

இவற்றில், நாடி ஜோதிடத்தின் பெயரில்தான் மிகப் பெரிய மோசடிகள் நாளும் அரங்கேற்றப்படுகின்றன. 

இந்த நாடி ஜோதிடத்தின் மூலம் பிரபலமானது சீர்காழிக்கு அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோவில் எனும் ஊர். தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் நாடி ஜோதிடம் பார்க்க வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வருகிறார்கள். 

"ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஏற்ற பலன்களை அந்தந்த ஓலைச் சுவடிகளின் மூலம் கூறுகிறோம். இந்த ஓலைச் சுவடிகளைத் தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மகாலில் இருந்து ஏலத்தில் பெறுகிறோம். இந்த ஓலைச் சுவடிகள் 1000 ஆண்டுகள் பழைமையானவை" என்கிறார்கள் இங்கே நாடி ஜோதிடம் பார்ப்பவர்கள்[இவர்கள் சொல்பவை அத்தனையும் பொய்; மக்கிப்போன பழைய சுவடிகளை அடுக்கி வைத்துக்கொண்டு மக்களை நம்ப வைக்கிறார்கள்].

பிரபலமான வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான சு.சோமசுந்தரம், "தஞ்சாவூர் சரஸ்வதி மகாலில் சற்றொப்ப 49,000 ஓலைச் சுவடிகள் உள்ளன. இதில் மருத்துவம், இசை, நாட்டியம் எனப் பல்வேறு துறைகள் தொடர்பான செய்திகள் உள்ளன. தெலுங்கு, வடமொழி, மராத்தி போன்ற மொழிகளிலும் ஓலைச் சுவடிகள் உள்ளன. இந்த ஓலைச் சுவடிகள் 2 அடி நீளத்திலும், 2 அங்குல நீளத்திலும் கூட உள்ளன. இவற்றிலுள்ள எழுத்துகள் எல்லாம் பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தவை. இவை எழுதப்பட்டது வட்டெழுத்துகளில். இந்த எழுத்துகளை இப்பொழுது யாரும் படிக்க முடியாது" என்கிறார் .

ஆனால், இந்த ஜோதிடர்களோ,  ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் இந்த ஓலைச் சுவடியில் பலன்கள் உண்டு எனப் பொய் சொல்லுகிறார்கள்.

உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கு ஒரே மாதிரியான கைரேகை இல்லை என்கிறது விஞ்ஞானம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி.

ஆனால் இவர்களோ, 40, 50 ஓலைச் சுவடிகளை வைத்துக்கொண்டு ஆயிரக்கணக்கான மக்களுக்கு, அவர்களின் கைரேகைகளைக் கொண்டு சுவடிகளைத் தேடி எடுத்துப் பலன் சொல்வதாகச் சொல்லி அவர்களிடம் பணம் பறிக்கிறார்கள்.

ஒருவருக்கு ஒரு ஓலைச் சுவடியை ஒரு தடவைப் பார்த்தவுடன் அதைக் காவிரி அல்லது வேறு புனித நீரில் கலந்துவிட வேண்டுமாம். அதாவது ஒரு ஓலை ஒருவருக்குத்தான் பயன்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் நடைமுறையில் இலட்சக்கணக்கான மக்களுக்குப் பார்க்கிறார்களே அது எப்படிச் சாத்தியமாகிறது?

ஓலைச் சுவடியை வெறுமனே கையில் வைத்துக் கொண்டு, ஜாதகத்தைப் பொதுவாகச் சொல்கிறார்கள். இவர்கள் ஓலைச் சுவடியை யாரிடமும் கொடுப்பதுமில்லை, காட்டுவதுமில்லை.

வைத்தீஸ்வரன் கோவிலில் மட்டும் 50 இடங்களுக்கு மேல் நாடி ஜோதிட நிலையங்கள்  உள்ளன. இந்த ஜோதிடர்களுக்கென்று முகவர்கள் உள்ளனர். எதிர்காலத்தைத் தெரிந்து சாதிக்க போகும்(?) மனிதர்களை இந்த முகவர்கள்தான் அழைத்துக்கொண்டு வருவார்கள்; அதற்கான வரும்படியையும் பெற்றுக்கொள்வார்கள்.

ஜோதிடர்களைத் தேடிச் செல்லும் மக்களுக்குத் தங்கும் வசதியும் (லாட்ஜ்) செய்து தரப்படும். தங்கும் விடுதியில் பெயர், முகவரி, விவரங்கள் சேகரிக்கப்படும். அவ்விவரங்கள் அடுத்த நாள் ஜோதிடருக்குச் சென்றுவிடும். இதில் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கும் ஒரு பங்குண்டு.

சரஸ்வதி மகாலில் இருந்து ஓலைச் சுவடிகளை ஏலத்தில் பெறுவதாக இவர்கள் சொல்வதும் சுத்தப் பித்தலாட்டம். அப்படியொரு ஏலம் சரஸ்வதி மகாலில் என்றும் நடைபெற்றதே இல்லை.

ஆஸ்திரேலியாவிலிருந்து ரோனி என்றொரு அம்மையார் வைத்தீஸ்வரன் கோவில் வந்துள்ளார். அவர் ஓலைச் சுவடியை வைத்து ஜோதிடம் பார்த்துள்ளார். இந்நிலையில் அந்த அம்மையார் எப்படியோ ஒரு ஓலைச் சுவடியைப் பெற்று, நேராக சரஸ்வதி மகால் சென்றுள்ளார். அங்கு இந்த ஓலையைக் காட்டி விவரத்தைக் கேட்டபோது, அவ்வளவும் மோசடி என்பது தெரிந்திருக்கிறது.

"ஓலைச் சுவடியைப் படித்துப் பலன் சொல்வதாகக் கூறுவது ஏமாற்று வேலை. அது மட்டுமின்றி ஓலைச் சுவடிகளில் ஜோதிடம் தொடர்பான எந்த விசயமும் இல்லை. பனை ஓலையில் தேயிலைச் சாற்றை ஏற்றி, இவர்களாகவே சுவடி தயாரிக்கிறார்கள். இதில் கீறல் இருக்குமே தவிர எழுத்துகள் இருக்காது. இந்த ஜோதிடர்கள் சரஸ்வதி மகால் பெயரைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்" என்று அந்த அம்மையார் கூறியுள்ளார்.

உலகத் தமிழாராய்ச்சி மையத்தின் பேராசிரியரான மஹாலட்சுமி, "ஜோதிடவியல் எனும் ஆராய்ச்சி நூலை 1996இல் நான் வெளியிட்டுள்ளேன். அதில் ஜோதிடத்தின் தோற்றம், வளர்ச்சி வகைகள், மேல் நாட்டிற்கும், இங்குமுள்ள வேறுபாடு என்று அனைத்தையும் குறிப்பிட்டுள்ளேன். அதேபோல, ஓலைச்சுவடிகளில் நாடி ஜோதிடம் என்கிற மோசடியையும் அம்பலப்படுத்தியுள்ளேன்" என்கிறார்.

மாந்திரீகம் என்னும் பெயரில் மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பவர்களுக்கும், இல்லாத சுவடிகளின் பெயரால், அறியாமையில் உழலும் மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் இந்தக் கும்பலுக்கும் வேறுபாடு சிறிதுமில்லை.

நம் அரசு கண்டும் காணாமலும் இருப்பது நம்மை வியக்க வைக்கிறது; வேதனைக்கு உள்ளாக்குகிறது.

ஓலைச்சுவடி குறித்த ஆய்வில் நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள நாடி ஜோதிட ஓலைச் சுவடிகள் முழுவதையும் கைப்பற்றி, இவர்கள் செய்துவரும் மோசடிகளை மக்களுக்கு அறிவிப்பதோடு, அனைத்து நாடி ஜோதிட நிலையங்களுக்கும் அரசு தடை விதிக்க வேண்டும்.

செய்யுமா தமிழ்நாடு அரசு? 

==========================================================================================================

ஆதாரம்:   http://www.unmaionline.com/