திங்கள், 26 ஜூலை, 2021

ஊடகக் கில்லாடிகள்!!!


முன்னணி வார இதழான 'தாழம்பூ' அனுப்பியிருந்த அந்தக் கடித உறை கவிமலர் மனதில் ஏராள எதிர்பார்ப்பை உண்டுபண்ணியிருந்தது.

அந்தப் பிரபல இதழில் தன் சிறுகதை வெளியாக வேண்டும் என்பது அவளின் நீண்ட நாள் கனவு. அந்தக் கனவு அப்போது நிறைவேற இருப்பதாக அவள் நம்பினாள்.

எடை மிகக் குறைவாக[கனமாக இருந்தால், அனுப்பிய படைப்பு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்று அர்த்தம்] இருந்த அந்த உறையைக் கட்டுக்கடங்காத ஆவலுடன்  பிரிக்கலானாள்.

அந்தச் சில வினாடிகளுக்குள், 'தாழம்பூ'வில், தான் அனுப்பிய புகைப்படத்துடன் கதை வெளியாகியிருப்பதாகக் கற்பனை செய்து மகிழ்ந்தாள்.

ஆனால், உள்ளேயிருந்த கடிதத்தின் முதல் வரியே அந்த மகிழ்ச்சிக்குச் சமாதி கட்டியது.

'உங்கள் கதையைப் பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்' என்ற அந்த வரியை வாசித்தவுடன், மனம் வெறுத்து, கடிதத்தைக் கிழித்தெறிய நினைத்தாள் கவிமலர்; முடிவை மாற்றிக்கொண்டு மேலே படித்தாள்.

'கதையைப் பிரசுரிக்க இயலவில்லை எனினும், உங்களின் அழகிய புகைப்படம் அடுத்து வெளியாகவிருக்கும் 'தாழம்பூ' இதழின் அட்டையை அலங்கரிக்கவுள்ளது  என்பதைத் தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். நன்றி' என்று எழுதப்பட்டிருந்தது.

"வேறு எதனைவிடவும் உலகம் பெண்ணின் அழகுக்கே முதலிடம் தருகிறது. இதற்குப் பத்திரிகையாளர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?" என்று தனக்குத்தானே கேள்வி எழுப்பி, மெலிதாகப் புன்முறுவல் பூத்தாள் கவிமலர். 

====================================================================================

***நான் கல்லூரி ஆசிரியரான சில ஆண்டுகளில், என் நண்பரின், எழுத்தார்வம் கொண்ட மகளுக்கு நேர்ந்த அனுபவம் இது. இருப்பில் 'சரக்கு' ஏதும் இல்லாத நிலையில் இதையே கதையாக்கியுள்ளேன்!

வருகைக்கு நன்றி.